Lushgreen

நீ எதைப்பற்றியும் கவலைப்படாம படிப்பில் கவனம் செலுத்து எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம்! வறுமையில் வாடிய குழந்தைக்கு தேடிச்சென்று உதவி செய்த முதலமைச்சர்!

Jun 10 2021 06:51:00 PM

கொரோனா காலத்தில் கஷ்டப்படும் பல ஏழைக்குழந்தைகளுக்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் திரிபுராவில் தனது குடும்பத்தின் ஏழ்மையை நினைத்து வருந்தி முதலமைச்சரிடம் உதவி கோரிய சிறுமி ஒருவருக்கு முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் தேடிச்சென்று உதவிகளை வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

tripura-cm biplab-kumar-dev

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா நகரில் வசித்து வருபவர் உத்தம் தாஸ். இவரது மகளான பர்ஷா எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் சமூக வலைதளம் மூலம் மாநில முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், ஒரே ஒரு அறையுள்ள  வீட்டில் வசித்து வருவதாகவும், படிப்பதற்கு மேசை கூட இல்லாமல் சிரமமாக உள்ளது எனவே தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் உதவுமாறு கூறியிருந்தார்.

tripura-cm biplab-kumar-dev

சிறுமியின் பதிவை பற்றி கேள்விப்பட்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் உடனடியாக அவருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமியின் படிப்புக்கு எந்த வித தடையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க சிறுமியின் வீட்டுக்கு தேவையான மளிகை மற்றும் உணவு பொருட்கள், சிறுமி படிக்க வசதியாக மேசை எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டது.

tripura-cm biplab-kumar-dev

இதற்கு முன் ஏற்கனவே தனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு தேவையான சிகிச்சை அளித்து அவரை காப்பற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார் சிறுமி பர்ஷா. அந்த சமயத்தில் உடனடியாக செயல்பட்டு சிறுமியின் தாயாருக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து கொடுத்தார் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ். இதுபற்றி கூறிய சிறுமி பர்ஷா என் தந்தைக்கு போதிய வருமானம் இல்லாமல் எங்களது குடும்பம் வறுமையில் தவித்து வருகிறது. எனவே எங்கள் குடும்பத்துக்கு உதவுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். சிறுமியான என்னுடைய வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எங்கள் குடும்பத்துக்கு உதவி செய்த முதலமைச்சருக்கு நன்றி என்று மகிழ்ச்சி பெருக்குடன் தெரிவித்துள்ளார் சிறுமி பர்ஷா.