சினிமாவை மிஞ்சிய விறுவிறுப்பான தமிழக அரசியல் களம் – 2016 – 2017!!!
  • 07:23AM Dec 04,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:23AM Dec 04,2017 Chennai, Tamil Nadu 600003, India

டிசம்பர் 5 2016 அம்மா என்றழைக்கப்பட்ட செல்வி. ஜெ.ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை மறைந்ததாக அறிவிக்கப்பட்ட தினம்.  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவர் அறிவிக்கப்படும் முன்னரே OPS முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.  அப்போது துவங்கிய கதை இப்போதுதான் RK நகர் இடைத்தேர்தல் என்று ப்ரி-க்ளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது.  இதனிடையே பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகச் சின்னம்மா வீட்டின் முன் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் பதவி ஏற்கச் சொல்லி வற்புறுத்தியது, அம்மா சமாதி முன் ஆளாளுக்கு சென்று தியானம் செய்தது போன்ற காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

என்னதான் பாசத்தில் ஸ்கோர் செய்தாலும் அனைவராலும் மதிக்கப்பட்ட சின்னம்மாவுக்கு எதிராக மக்கள் போராடியது, ஜல்லிக்கட்டு போராட்டம், சின்னம்மா சிறை சென்றது, நிறைய புதிய கேரக்டர்கள் வாரிசாக வந்திறங்கியது இப்படி ட்விஸ்ட்டுகளுக்கு எந்தக் குறைவுமில்லை.  அரசியல் சதுரங்கத்தை மிக நேர்த்தியாக விளையாடி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் உதய் மின்திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மானியங்களை ரத்து செய்தல் போன்ற பல்வேறு விஷயங்களை மக்களின் கவனத்தை ஈர்க்காமலேயே செயல்படுத்துவது அசத்தல் ரகம். 

காமெடிக்கும் சற்றும் குறைவில்லை. உதாரணத்திற்கு,

  • தனிப்பெரும்பான்மை என்று பெருமை பேசி சாரணர் தேர்தலில் வெறும் 57 வாக்குகளை வாங்கிய பா.ஜ.க.வின் ஹெச். ராஜா.
  • திடீரென்று பொது மேடையில் இட்லியைப் பற்றிப் பேசி அம்மாவின் மரணத்தில் சந்தேகத்தைக் கிளப்பிய திண்டுக்கல் சீனிவாசன்.
  • மேடையில் “கம்ப” ராமாயணம் என்று பெயரிலேயே Hint இருந்தும் சேக்கிழார் என்று பேசிய முதலமைச்சர், அடுத்த வரியிலேயே கோவில்களை கட்டிய அச்சுதப்ப நாயக்கர் பெயருக்கு பதிலாக, அவர் மகன் ரகுநாத நாயக்கர் என்று சளைக்காமல் போட்டுத் தாக்குவதெல்லாம் வேற லெவல். 
  • எல்லாவற்றிற்கும் மேலாக, அணையின் மீது தெர்மோக்கூல் போட்டு, அதையும் டேப் வைத்து ஒட்டி மிதக்க விட்டதில்லாமல், அதற்குக் காரணம் கூற முற்பட்டது இன்றுவரை சோஷியல் மீடியாக்களில் வைரல் என்றால் அது மிகையில்லை.

மக்கள் துன்பத்தால் கதறி முடித்து போராட்டத்தில் இறங்கும் போதெல்லாம், பத்து பிரச்சினைகளை வெவ்வேறு இடங்களில் துவங்கி விட்டு மெரினா போராட்டம் மாதிரி அனைவரும் ஒரே இடத்தில் கூட விடாமல், தனித்தனியே சிறு சிறு குழுக்களாய் அவரவர் ஊர் பிரச்சினைகளுக்காகப் போராட விடுவது உச்சகட்ட சாணக்கியதனம்.  அதனாலேயே மத்திய அரசை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் போதெல்லாம் Volunteer-ஆக மத்திய அரசுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று இவர்களாகவே குரல் கொடுப்பதை என்னவென்று சொல்ல.

நடுவில் தான்தான் அதிமுக என்றும், அதிமுக தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள் என்று மத்திய அரசையே குழப்பி விட்டு, வருமான வரித்துறை ரெய்டுகள் மழையாய் பொழிந்த போதும் அசராமல் கோ பூஜை நடத்திவிட்டு, அதிமுகவுக்கு எதிரான தினகரனின் கேரக்டரைசேஷன் மிகவும் சிறப்பு.  அவர்களே முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதால் எதிர்கட்சியான திமுகவுக்குப் பெரிதாக மக்களை என்டெர்டெய்ன் பண்ணும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், கிடைத்த கேப்பில் ஏரிகளைத் தூர்வாருதல், அவ்வப்போது தொலைக்காட்சியில் முகம் காட்டுவது என்று நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

ப்ரி-க்ளைமாக்ஸாக RK நகர் தேர்தல்.  இரட்டை இலையைத் தேர்தல் ஆணையம் EPS, OPS அணியினருக்கு கொடுத்திருந்தாலும், தினகரன் தொடர்ந்திருக்கும் வழக்கின் மூலம் எந்த நேரத்திலும் அதற்கு தடை கிடைக்கலாம் என்ற சூழல், திமுக தொடர்ந்திருக்கும் வழக்கின் மூலம் பெரும்பான்மையையே இழக்கும் சூழல், அதிமுக தனது என்று சொந்தம் கொண்டாடி ஐந்து முகமாக வாக்காளர்களை அவர்களே பிரித்து வைத்திருப்பது என்ற பல்வேறு Knotகளுக்கு எப்படி விடை சொல்லப் போகிறார்கள் என்று மக்களை மட்டுமில்லாமல் மீடியாக்களையுமே குழப்பத்தில் வைத்திருக்கிறார்கள்.  இரஜினி, கமல் போன்றவர்கள் குளத்தின் கரையோரம் நின்று குதிக்கலாமா வேண்டாமா என்ற காட்சி அடிக்கடி வந்து பரபரப்பைக் கிளப்பினாலும் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அக்கா தமிழிசை போன்ற பல கேரக்டர்கள் மனதில் நிற்கவில்லை.

மொத்தத்தில் க்ளைமாக்ஸ் வரை எதிர்பார்ப்பை எகிற விட்டிருந்தாலும், இந்த வருடத்தில் மக்களுக்கு சாகமாக ஒன்று என்ன என்பதை யோசித்தால்…   

Top