சொந்த வீடு எனும் மாயவலை…
  • 14:01PM Oct 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:01PM Oct 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

©சொந்த வீடு எனும் மாயவலை…

இன்றைய தேதியில் ஏறத்தாழ அனைத்து நடுத்தர வர்க்கத்தினருக்குமே ஒரு கனவாகவே இருந்து வருகிறது - சொந்த வீடு.  காரணம் பலவகை.  தொடர்ந்து வீட்டு உரிமையாளர்களால் கெடுபிடிகளை சந்திப்பது, மாதம் தவறாமல் கொடுக்கும் வாடகை வீண் செலவு என்ற எண்ணம், பிள்ளைகளுக்குச் சொத்து சேர்ப்பது – இப்படி அவரவர் வசதிக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவாறு காரணங்கள் வேறுபடுமாயினும், அடிப்படை காரணம் ஒன்றே ஒன்றுதான்… அது வீடு என்பது ஒரு இன்வெஸ்ட்மெண்ட்.  உண்மையிலேயே, இவர்களில் எத்தனை பேர் யதார்த்தவாதிகளாக இருக்கிறார்கள் என்பதே கேள்வி.

ஹோம் லோன்கள் மூலம் பாதிக்கும் மேற்பட்ட சம்பளத்தில், கிடைக்கும் இடத்தில் வீடு வாங்கிக் குடியேறுபவர்களாக இருந்தால் நிச்சயம் இந்தக் கட்டுரை உங்களுக்கானது.  ஏனெனில், ஒன்றிலிருந்து தப்பிக்க, வேறொன்றில் மாட்டிக் கொள்ளும் கதைதான் இது. 20 லிருந்து 30 ஆண்டுகள் தவறாது கடன் கட்ட வேண்டிய தேவை என்பது ஒரு மிகப் பெரிய பொறுப்பு.  தற்போது இருக்கும் கல்விக் கட்டணங்களில் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் காம்ப்ரமைஸ், இருக்கும் சுற்றத்தில் காம்ப்ரமைஸ் இவையெல்லாம் கூட பரவாயில்லை. வாங்கிய வீட்டிலிருந்து வெகு தூரம் பணிக்குச் செல்லும் நிலை என்றால், அது அனைத்தையும் விடக் கொடுமை.  ஏனெனில், உங்கள் வீடு உங்கள் அதீத பணிச்சுமை காரணமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு பிணையாக முடியும் அபாயம் உள்ளது.

இரண்டாவது பணியிட மாறுதல்.  எந்த ஊரில் நிரந்தரமாக நீங்கள் தங்குவீர்கள் என்று நினைக்கிறீர்களோ அங்கேயே வீடு வாங்குகிறீர்கள்.  வாடகை மிச்சம் என்று சந்தோஷப்படும் பொழுது, பணியிட மாறுதல் வந்தால் ஒன்று அந்த வீட்டை வாடகைக்கு விட வேண்டும்.  நீங்கள் இன்னொரு ஊரில் வாடகை வீட்டில் குடியேற வேண்டும்.  பெருமளவு வாடகை மிச்சம் என்று வைத்துக் கொண்டால்கூட, மற்ற அனைத்து பிரச்சினைகளும் அப்படியேதான் தொடரும்.  என்றைக்கும் பாதிச் சம்பளம் உங்கள் கையில் வராது.  இதைத் தவிர்க்க மிகவும் புத்திசாலித்தனமாக வீடு இருக்கும் ஊரில் வேறு வேலை பார்ப்பது, மீண்டும் முதலிலிருந்து உங்கள் பணியைத் தொடங்கியதாகிவிடும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையில் வீடு வாங்கி, அதை வாடகைக்கு விட பயந்து கொண்டு வெறுமனே பூட்டி வைத்துக் கொண்டு கோவையில் வேலை செய்கிறார். சொத்து சரி, ஆனால் செலவு???

படிக்கும் பிள்ளைகளின் படிப்பில் நாம் குறை வைத்துவிடக் கூடாது.  அவசர மருத்துவத் தேவைகளுக்கான பணமும்… மிக முக்கியம் வயது இருக்கும் பொழுதுதான் குடும்பத்தினரின் அருகாமை, குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும்.  சற்று வயது பெரியவர்களானதும், படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்ததும், அதாவது வருமானம் அதிகரிக்கும் போது உங்கள் வீட்டுக் கனவை நிறைவேற்றுங்கள்.  விலை பற்றி யோசிப்பவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும்.  நீங்கள் ஆரோக்கியமாகவும், பிள்ளைகள் நல்ல வேலையில் இருப்பவர்களாகவும் இருந்தாலே நீங்கள் நிறைய மிச்சப்படுத்தி இருப்பீர்கள்.  குறைந்த செலவுகளோடும், அதிகரித்த வருமானத்தோடும் உங்களால் இப்பொழுது வாங்கியதைப் போலவே ஒரு நல்ல வீட்டினை அப்பொழுது உங்கள் சேமிப்பு, உழைக்கும் திறனுக்கு ஏற்றவாறு வாங்கிவிட முடியும் – எந்தக் காம்ப்ரமைஸூம் செய்யாமலே…

ஒருவேளை எப்பொழுதாவது போனஸ் மற்றும் உபரி வருமானங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை ஊருக்கு வெளியே இடமாக வாங்கிப் போடுவது புத்திசாலித்தனமும் கூட. நேற்றைக்கு நகரின் மையமாக இருந்த ஐஸ்ஹவுஸ், ராயபுரம் பகுதிகளெல்லாம் இன்று வடசென்னை ஆகிவிட்டன.  எனவே, ப்ரைம் ஏரியா மாயையில் விழுந்து மாட்டிக் கொள்ளாதீர்கள்… எனது இன்னொரு நண்பரின் வீடும் அப்படிக் கட்டியதுதான்.  வேலையில் இருக்கும்பொழுது அவர் தந்தை கட்டிய இரண்டு வீடுகளும் கடன் சுமையால் மூழ்கிப் போனது.  அனைவரும் தலையெடுத்தபின் வந்த பி.எப். பணம் மற்றும் சேமிப்பினைக் கொண்டு, கடனே இல்லாமல் ஒரு சொந்த வீடு அவர்களால் கட்ட முடிந்தது.  இதுதான் யதார்த்தம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top