அப்பா குடித்த பீர்…
  • 13:00PM Nov 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 13:00PM Nov 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

       நான் ஒரு தனியார் நிறுவன ஊழியன்.  என் திருமணத்தின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பகிர வேண்டும் என்று தோன்றியது.  இந்தக் கட்டுரையை என் பெயரிலேயே பதிவிட்டிருக்க முடியும்… ஆனால், அப்பா பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால் இதை உண்மை விளம்பு தலைப்பில் பதிவிடுகிறேன்.  எனக்குச் சமீபத்தில்தான் திருமணம் ஆனது.  என் திருமணத்திற்கு முன் அப்பா தன் நண்பர்கள் அனைவரையும்  தேடிப் பிடித்து பத்திரிகை கொடுத்தேயாக வேண்டும் என்று ஆசைப்பட, நானும் அவரும் காரை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகத் தேடி அவரின் நண்பர்கள் அனைவரையும் கண்டுபிடித்துப் பத்திரிகை வைத்தோம். 

என் அப்பா க்ளீன் இமேஜ்.  ஒருமுறை காரில் அலுவலக விஷயமாக, கூட வேலை செய்யும் பெண்ணைப் போகும் வழியில் இறக்கிவிடுவதாகச் சொல்லி பின்னால் அமரச் சொல்லி, நானும் அப்பாவும் செல்லும் வழியில் அவரது நன்பர் ஒருவரையும் பார்த்து லிப்ட் கொடுக்க வேண்டி வந்தது.  அந்தப் பெண்ணை இறக்கி விட்டுச் செய்ய வேண்டிய வேலையை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திக் கிளம்ப, நண்பர் “அதான பார்த்தேன், உன் வண்டில பொண்ணு எப்படின்னு…” என்று கேட்டார்.  அவ்வளவு க்ளீன்.  சென்னையில் அவர் நண்பர் ஒருவர் மேஜராக இருக்க, அவரை சந்திக்கச் சென்றோம்.  அங்கு அவர்கள் பேசிக் கொண்ட பழைய கதையைக் கேட்கும் போதுதான் அப்பாவா இப்படி என்ற எண்ணம் ஏற்பட்டது.

மேஜர் பேசிக் கொண்டே வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.  அங்கே எனக்குக் கூல்டிரிங்ஸ் கொடுத்துவிட்டு அப்பாவுக்கும் அவருக்கும் இரண்டு பீர் பாட்டிலை எடுத்து வந்தார் மேஜர்.  அப்பா சட்டென்று எந்த ரியாக்‌ஷனும் செய்யாமலே, என்னைப் பார்க்காமலேயே இவன் கன்சீவ் ஆனப்போ விட்டது என்று மறுக்க, மேஜர் என்னிடம் பர்மிஷன் கேட்டார்.  எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், வீட்டின் மிஸ்டர் ஸ்டிரிக்ட் வேறு விதமாக ரியாக்ட செய்வதும், அவர் நண்பர் என்னிடம் பர்மிஷன் கேட்டதும் வித்தியாசமாக நடக்கவே வாய்ப்பில்லாதவையாக இருந்தது.  நான் சரியென்று சொல்ல, மேஜர் வற்புறுத்தி அவரிடம் கொடுத்தார்.  நான் கூல்ட்ரிங்ஸ், அவர்கள் பீர் எனச் சுற்றி அமர்ந்து பழைய கதையை பேசிக் கொண்டே சுவைக்க, தற்செயலாகப் பார்வை அப்பா பக்கம் செல்ல, அவரும் என்னைப் பார்க்க இருவருக்குள்ளும் ஏதோ உடைந்தது போலிருந்தது.

எத்தனை விஷயங்கள் தியாகம் செய்திருக்கிறார் எனக்காக என்ற எண்ணம் எனக்கு ஏற்பட, அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  ஆனால், கிளம்பும்போது அப்பா மகன் என்பதை விட நண்பர்களாக உணரத் தொடங்கினேன்.  அன்றிலிருந்து இன்று வரை எங்கள் உறவு முறை அப்படியேதான் இருக்கிறது.  வீட்டிலுள்ளவர்கள் கூட, “என்னடா அப்பாவைப் பார்த்ததும் வெளிய ஓடிருவான், இப்போ இப்படி இருக்கான்…” என்று சந்தோஷப்பட்டார்கள்.  பல நாள் கழித்து அப்பாவிடம் இதைப் பற்றிக் கேட்ட பொழுது அவர் சொன்னார், “ஒரு நிமிஷத்துல என்னை சங்கடப்படுத்தாம, எனக்கும் சந்தோஷம் இருந்தாத் தப்பில்லை” னு நீ யோசிச்சது எனக்கு அன்னைக்கு புரிந்தது என்றார். எது எப்படியோ, பிறந்ததிலிருந்து புரிந்து கொள்ள முடியாமல் இருந்த மனிதனைப் புரிந்து கொள்ள வைத்தது – அப்பா குடித்த பீர்… 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top