எங்கும் கலப்படம்!!!
  • 09:14AM Sep 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:14AM Sep 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

கலப்படம். புகை பிடிப்பது, மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என்பதெல்லாம் பழங்கதையாகிப் போய் இன்று சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ஏற்கெனவே ஏ1, ஏ2 எனப் பால் வகைகளின் மூலமாக ஒரு குறிப்பிட்ட பாலைக் குடிக்கும் பெரியவர்களுக்கு சர்க்கரை நோயும், மலட்டுத் தண்மையும் ஏற்படும் எனவும், குழந்தைகளுக்கு சிட்ஸ் – SIDS (Sudden Imminent Death Syndome) அதாவது என்ன காரணம் என்று அறியும் முன்னரே திடீரென்று இறப்பது போன்ற வியாதிகள் வரலாம் என்று நம்பப்படுகிறது.  இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே பாலில் கலப்படம் இருப்பதாகவும், ஜவ்வரிசிப் பால் முதல் சில இரசாயனங்கள் வரை சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அதனால் கேன்சர் வரலாம் எனத் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது.

காய்கறிகளில் இரசாயன உரம் துவங்கி, கோழியில் ஸ்டெராய்ட் வரை எங்கு நோக்கினாலும் ஒன்றே ஒன்றுதான் – கலப்படம். முன்பெல்லாம் கலப்படம் என்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் போலியைத் தயார் செய்து அதைத்தான் கலப்படப் பொருளாக விற்றுக் கொண்டிருந்தார்கள்.  இன்றோ, நாம் பிஞ்சுக் குழந்தைகளின் மேல் பூசும் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனப் பொருட்களால் தனக்கு கேன்சர் வந்தது என வழக்கு போட்டிருந்த பெண்ணுக்கு ரூபாய் 2700 கோடி ரூபாய் வழங்கச் சொல்லி வந்த கோர்ட்டு உத்தரவு, அந்த நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது.  போலி நிறுவனங்கள் துவங்கி பெரிய நிறுவனங்கள் வரை அனைவருமே கலப்படத்தை வியாபார தந்திரமாகவும், விற்பனை யுக்தியாகவும் கருதுவது ஏன்???

சாமானியனின் உயிருக்கெல்லாம் மதிப்பே இல்லையா என்ற கேள்வியும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் நமக்கு எழாமல் இல்லை.  இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மட்டும்தானா??? பெரும்பங்கு அவர்கள் பக்கம் இருந்தாலும், நமது பங்கும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் நமது பங்கு, நேர்மையாகத் தொழில் நடத்துபவர்களுக்கும் இது தவறல்ல என்ற கண்ணோட்டத்தை வழங்கியது…  எப்படி??? குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லிகள், ஒரு பெரிய நிறுவனம் சுவைக்காக ஸ்டெராய்ட் வழங்கி வளர்த்த மொட்டைக் கோழிகள், பால் கலப்படம், இன்னொரு நிறுவனம் சுவைக்காக கலந்த இரசாயனம் என எத்தனை விஷயங்களைக் காட்டினாலும், அதை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு விடாமல் பயன்படுத்துவதன் மூலமாக. 

இவை மக்கள் விலையிலும், சுவையிலும் காட்டும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட தங்கள் உடல்நலத்தில் காட்டுவது இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியது.  இந்தப் போக்கினால் இன்று நாம் சாப்பிடுவது அனைத்தையுமே, ஏறத்தாழ அனைத்திலுமே விஷத்தைச் சேர்த்திருக்கிறோம்.  இனி வரும் காலங்களில் டீ-டோட்டலர் என்பவர்கள் சாப்பாடு சாப்பிடாதவர்களாய் இருக்க வேண்டும் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top