நேர்படப் பேசு!!!
  • 10:59AM Oct 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:59AM Oct 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

நேர்படப் பேசு!!!

நேர்படப் பேசு!!! நிறைய நேரங்களில் நம்மில் பெரும்பாலானோர் சுற்றி வளைத்து மற்றவருக்கு சில விஷயங்களைப் புகுத்திட நினைப்போம்.  வள வள வென்று இருக்கும் இத்தகைய தொடர்பு முயற்சிகளால் உண்மையில், கவனிப்பவரின் நம்பிக்கையை நாம் இழப்பதோடல்லாமல், சொல்ல வந்த விஷயம் அவருக்கு முழுமையாகச் சென்றடையாமல் இருக்க நாமே காரணமாகி விடுகிறோம்.  உண்மையிலேயே, மக்கள் நேரடியாகப் பேசுபவர்களையே அதிகம் நம்புகிறார்கள் என்பது நாம் அன்றாடம் காணும் ஒன்று.  பிறகு எதற்குச் சுற்றி வளைப்பது???

காரணம், பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ளத் தயங்குவதே.  நமது பிரச்சினைகள் உருவாவதற்கு நாமே காரணம் எனும்பொழுது அதைச் சரிசெய்யும் நேரத்தில் மட்டும் நமக்கு எதற்கு தயக்கம்?  உலகிலுள்ள முக்கால்வாசிப் பிரச்சினைகள் நேரடியான அணுகுமுறையிலேயே தீர்ந்து விடும்.  மற்றவை காலத்தால் மறையும்.  இதைப் புரிந்து கொண்டால் நமக்குள் எழும் தன்னம்பிக்கையே நாம் எதையும் நேரடியாக, வெளிப்படையாகப் பேசுவதற்கான காரணமாக அமையும்.  அப்படி உங்கள் மீது வைக்கும் தன்னம்பிக்கை மற்றவர்களையும் உங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தூண்டும்.

இன்னொரு காரணம், நம்மில் பெரும்பாலானோர் நேர்படப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, அடுத்தவரைச் சுலபமாக காயப்படுத்தி விடுவது.  நேர்படப் பேசுதலில் முக்கியமான விஷயம், எதிராளிக்கு நம் எண்ணவோட்டத்தை சரிவரத் தெரியப்படுத்துவது மட்டுமே.  உதாரணத்திற்கு, உங்கள் மனைவியுடன் சினிமாவுக்கு செல்லாம் என்று திட்டமிட்டுள்ளீர்கள்.  அப்பொழுது உங்கள் நண்பர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.  இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்??? திரைப்படத்தை விட நண்பனின் சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில், மனைவியிடம் தெளிவாகப் பேசுங்கள்.  என்ன காரணத்தால் திரைப்படத்தை விட அந்தச் சந்திப்பு முக்கியம் என்று புரிய வைத்தல் போதுமானது.  அதே சமயம் திரைப்படத்தை ஒத்தி வைப்பது உங்கள் திட்டம் போலவும் செயல்படுத்த முடியாது.  அந்தச் சமயத்தில் முடியாத காரணத்தால் வேறெந்த சமயம் போக முடியும் என்பதையும் தெரிவித்து விடுங்கள்… வருத்தமிருந்தாலும், எந்த மனிதராலும் உங்கள் நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

இதே நண்பனின் வருகை உடனடியான அவசரம் இல்லையென்றால், வெளிப்படையாக விஷயத்தைச் சொல்லிவிடுவது நல்லது.  பொய் சொல்லி தப்பிப்பது அப்பொழுது மிகச் சரியாகத் தோன்றலாம்… ஆனால், நாளை உங்கள் நண்பனுக்கு உண்மை தெரிய வந்தால், அவரை நீங்கள் இழக்கக்கூடும்.  அலுவலகத்தில் வேலைப் பளு அதிகமென்று தோன்றினாலும் சரி சரியென்று தலையாட்டாமல், அதை முடிக்க உங்களுக்குத் தடையாக இருப்பது எது எனவோ, அல்லது விரைந்து முடிக்க என்ன தேவையோ அதைத் தைரியமாக சொல்லிவிடுங்கள்.  கண்டிப்பாகச் சிறு வருத்தம் ஏற்படத்தான் செய்யும் என்றாலும், அதுவே நாளடைவில் உங்கள் வார்த்தை மீதான நம்பிக்கையாக மாறும். ஏனெனில், வேண்டாவெறுப்பாக வேலை செய்து, அதனால் அதிகபட்ச கோபத்திற்கு ஆளாவதை விட்டு பணியை செவ்வனே முடிப்பதற்கான வழியை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். விரைவிலேயே, இதை எத்தனை நாட்களுக்குள் முடிக்க முடியும் என்று கேட்கத் துவங்கி விடுவர்.

உங்கள் குணாதிசயமே உங்கள் மீதான நம்பிக்கைக்கு அஸ்திவாரமே.  அதை மட்டும் எப்பொழுதும் மாற்றிக் கொள்ளாதீர்கள்.  தயங்குவதும், குழப்புவதும் நம்மை நாமே போலியென்று சொல்லிக் கொள்வதாகும்… எனவே, நிமிர்ந்து நில், நேர்படப் பேசு!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top