சமூக வலைத்தளங்களும். முதல்வர் மகனும்…
  • 08:50AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 08:50AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

அனைத்துத் தேர்தல்களிலும் மறக்காமல் கொடுக்கப்படும் ஒரு வாக்குறுதி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு.  இந்தியப் பெண்கள் நிஜமாகவே பாதுகாப்புடன் இருக்கின்றனரா என்று கேட்கும்போது, நம் கண்முன்னே நிர்பயா, நந்தினி, ஸ்வாதி போன்ற பெயர்கள் வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது.  சரி. பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டங்கள் என்று பார்க்கும்போது 2013-ல் ஆரம்பித்த நிர்பயா நிதி வருடத்திற்கு 1000 கோடிகள் எனச் சேர்ந்து இருந்தாலும், இதுவரை 150 கோடி, 200 கோடி என்ற அளவிலேதான் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அதுவும் தன்முனைப்பு மிக்க சில காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.  காரணம் ஒன்றுதான்.  சரியான தீர்வு எது என நிர்ணயம் செய்ய முடியாத நிலை.  இந்த நிலையில், சமீப காலமாக மக்களிடையே சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியிருக்கும் விழிப்புணர்வு நம்பிக்கையளிக்கும் விதமாக மாறியிருக்கிறது.

நுங்கம்பாக்கம் ஸ்வாதி மரணம் தொடர்பான விசாரணையில், விசாரணையைத் துரிதப்படுத்த உதவிய அதே வலைத்தளங்கள்தான், இன்று ஒரு மாநில முதல்வரின் மகன் கைதாவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது.  சண்டிகரில் வசிக்கும் வர்ணிகா குன்டு என்ற 29 வயதுப் பெண் சாலையில் செல்கையில் பின்தொடர்ந்து வந்த இரு வாலிபர்கள், சாலையிலேயே அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர். தப்பிச் செல்ல முயற்சித்து, முடியாத போது காரின் கதவைத் திறக்காமல் விடாது ஹாரன் அடிக்க, அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். பிடித்த பிறகுதான் அந்த இருவரில் ஒருவன், அம்மாநிலத்தின் முதல்வர் சுபாஷ் பராலாவின் மகன் - விகாஸ் பராலா என்று தெரிய வந்தது.  வீட்டிற்கு வந்த வர்ணிகா இது குறித்து பேஸ்புக்-ல் பதிவிட, ஒரே நாளில் இது மிகப் பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்தது.

மக்கள் ஆதரவு தொடர்ந்து வர்ணிகாவுக்கு பெருக, வேறு வழியின்றி கடந்த புதன்கிழமை விகாஸ் பராலா மற்றும் அவர் நண்பர் ஆகாஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  ஒரு மாநிலத்தின் முதல்வரின் மகன் என்ற பலத்தையும் தாண்டி, அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்த சமூக வலைத்தள ஆர்வலர்களுக்கு நாம் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும்.  சமூக வலைத்தளங்கள் இதே போன்று பாரபட்சமின்றி, திறம்பட செயல்படும் பட்சத்தில் – வெகு விரைவில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் கேள்விக்குறியாக மட்டும் இருக்காது என்பது மட்டும் நிதர்சனம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top