செல்ஃபி மரணங்கள்…
  • 11:57AM Sep 29,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:57AM Sep 29,2017 Chennai, Tamil Nadu 600003, India

இரண்டு தினங்களுக்கு முன் ஒரு விசித்திரமான வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.  அதில் ஒரு பெரிய பாம்பை கிராமத்தினர் சிலர் பிடித்து வர, சற்றுத் தள்ளி ஒரு இளைஞர் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.  வீடியோவில் ஏனோ அவர் மீது தனியாக கவனம் செல்ல, அவரோ தான் எடுத்த செல்ஃபியை இரசித்துக் கொண்டிருந்தார்.  அடுத்த இரண்டு நொடிகளில், பாம்பினை பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அருகில் வந்து பாம்பின் தலை எங்கே இருக்கிறது என்று பாராமல் குனிந்து செல்ஃபி எடுக்க முயல, பாம்பு அவரது கழுத்திலேயே கடித்தது.  பார்க்கும்போது சிரிப்பு வந்தாலும், பின்னர் யோசிக்கும் போது எதோ நெருட - பின்வரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியூட்டுபவையாக இருந்தது.

உலகளவில் இந்த மாதிரி செல்ஃபி மரணங்கள் கடந்த 18 மாதங்களில் 127.  இது ப்ளுவேல் மரணங்களை விட அதிகம்.  அந்த 127ல் 76 இந்தியாவில் என்பதுதான் நிஜமான அதிர்ச்சி.  செல்ஃபி எடுப்பது ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி ஒரு மனநோயாக மாறிவிட்டது.  குடும்பத்தில் இழவு விழுந்தால், முதல் வேலையாகப் பிணத்தின் அருகே நின்று செல்ஃபி, ஆக்ஸிடெண்ட் நடந்தால், முதலுதவிக்கு முன் ஒரு செல்ஃபி, சாப்பிடுவது செல்ஃபி, கையில் சொறி வந்தாலும் செல்ஃபி எனக் கடைசியாக மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒரு செல்ஃபி என இது ஒரு மனநோயாகவே மாறி விட்டது.  அதன் விளைவுதான் இந்த செல்ஃபி மரணங்கள்.

தனியாக நின்ற காட்டுயானை அருகில் போய் செல்ஃபி எடுக்கும் போது யானையிடம் மாட்டுவது, தந்தையின் துப்பாக்கியை தலையில் வைத்து செல்ஃபி எடுக்கும் போது வெடித்தது, ஆறுகள், மலைகள் விளிம்பில் நின்றபடி அசுரத்தனமான போஸ் கொடுத்து தடுமாறி விழுந்தது, ரெயில்வே தண்டவாளத்தில் பின்னால் ரெயில் வருவதைப் பார்த்த பின்னும், விபரீதம் உணராமல் செல்ஃபி எடுத்து ரயிலில் அடிபட்டது, தொங்கிய படி இரயில் பயணம் செய்து அடிபட்டது என் செல்பி சாவுகள் பெருகிக் கொண்டே போகின்றன. 

சில நாடுகள் குறிப்பிட்ட சில இடங்களில் செல்ஃபி எடுக்கத் தடை விதித்தாலும், உண்மையில் இதை ஒரு பொழுதுபோக்கிற்கான பழக்கமாக மட்டும் வைத்திருந்தால் இது போன்ற விபரீதங்கள் இனி மேலும் நிகழாமல் தடுக்கலாம்.  ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் – நீங்கள் யாருக்காக செல்ஃபி எடுக்கின்றீர்களோ அவர்களுக்கு உங்கள் இறுதி நொடியை படம் பிடித்து நீங்களே அனுப்பியது போலாகி விடக்கூடாது.  சென்ற வாரம் செல்ஃபி ஏடுக்கும்போது பின்னால் நண்பன் மூழ்குவதைக் கூட கவனிக்காமல் எடுத்த செய்தியினையும் படித்தோம்.  கொடுமை என்னவென்றால், அவர் தண்ணீரில் மூழ்குவது அந்த செல்ஃபியில் படமாகியிருந்ததுதான்.  இனியேனும், இதைக் கருத்தில் வைத்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தில்லாமல் செல்ஃபி எடுத்து மகிழுங்கள்.

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top