மதநல்லிணக்கம்!!!
  • 07:07AM Nov 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:07AM Nov 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

வேற்றுமையில் ஒற்றுமை நம் இந்தியா… பல்வேறு மத சக்திகளின் தூண்டுதல்கள், மாற்றுக் கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் என்று பல்வேறு மதத்தினராய் பிரிந்து கிடந்தாலும், இந்தியாவில் காணப்படும் உண்மையான சகோதரத்துவம் வேறெங்கும் காணப்படாது என்பது நிதர்சனம்.  மதநல்லிணக்கம் என்றால் என்ன என்று கேட்டுத் திரிந்தவர்களுக்கெல்லாம், இதுதான் என்று வெளிப்படையாகச் சொன்னது, இரு வருடங்களுக்கு முந்தைய வெள்ளம்.  சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தையும் அடித்து நொறுக்கி, நாங்களும் மனிதர்கள்தான் என்ற எண்ணத்தை அனைத்துத் தரப்பினருக்கும் உணர்த்தியது அந்த வெள்ளம்.

முகம் தெரியாத மக்கள் பசியோடு இருந்தபோது பதைபதைத்த ஒவ்வொரு மனமும், சகமனிதன் என்றுதான் அதைப் பார்த்ததே ஒழிய சாதியைப் பார்க்கவில்லை. தர்காக்களும், கோவில்களும், சர்ச்சுகளும் தங்களின் உண்மையான நிறத்தைக் காட்டியது அப்பொழுதுதான்.  அன்பு, கருணை, அரவணைப்பு, ஜாதி மதம் பாராமல் காப்பாற்ற கை நீட்டியவனும், நீட்டிய கைகளை பற்றிய கைகளுமாய் அத்தனை கைகளும் உண்மையான கடவுள் தொண்டு செய்ததும் அங்கேதான்.  சுயநலம் பாராமல் தன்னைப் போல, அடுத்தவன் பசியை உணர்ந்து காத்தது அந்த வேலைதான்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இத்தனை பேர் இருக்கின்றார்களே மதியம் சாப்பிட என்ன செய்வார்கள் என முகப்புத்தகத்தில் என்னிடம் முதலில் பகிர்ந்தது ஒரு முஸ்லீம் கிருஷ்ணன். முதன்முதலாக, என் கடை பிரியாணியைக் கொண்டு போறேன், யாருக்கு குடுக்கனும்னு கேட்டது இன்னொரு இசுலாமிய ஏசு. தொடர்ந்து விடாமல் பல்வேறு கிருத்துவக் கான்களும், இந்து இப்ராஹிம்களும் களத்தில் இறங்க, கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு மேல் அத்தனை நாளிலும், மூன்று வேளையும் தாண்டி, கொறிப்பதற்குச் சிற்றுண்டி, குடிப்பதற்கு ஜூஸ் என வந்து கொண்டேதான் இருந்தது. 

ஸிஸ்டெர் என அழைக்கப்பட்ட அத்தனை சலீமாக்களும், ஜூலிகளையும், லட்சுமிகளையும் சுற்றிள்ள ஆண்கள் பாதுகாத்தனர்.  மாட்டிற்காக போராடிய அனைவரும் மாட்டுகறி தடையை எதிர்ப்பதற்காகப் போராடியபோது, உலகமே வியப்பிலாழ்ந்து போனது.  முகப்புத்தகத்தில் இதற்காக காறித் துப்பியவர்கள் அதிகம். ஆயினும் அவர்களுக்குத் தெரியாத ஒன்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மத நல்லிணக்கம்… எனக்கு வேண்டாமென்றாலும், என் நண்பனின் உரிமையை பறிப்பதை நான் சகிக்க மாட்டேன் என்று நாம் நின்றதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாதுதான்.

எத்தனை பெரிய மதமாக இருந்தாலும், அதைக் கடைப்பிடிப்பவர்கள்தான் அதற்கு நல்லதும் தீயதுமாக இன்று வரை இருந்து வந்திருக்கிறார்கள்.  வீட்டிற்கு செல்லும் வழியில் முகம் மலர்ந்து “தொழுகை ஆச்சா. பாய்…” என்றும், “ஸ்தோத்திரம் அங்கிள்…” என்றும் சொல்லிச் செல்கையில்தான் என் மதம் உண்மையில் வளம் பெறும். அதுதான் – மத நல்லிணக்கம்…     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top