Exquisite

பகவான் கிருஷ்ணரின் ஜனனத்தை பார்த்த ஒருவர் இப்போதும்,நம்முடன் வாழ்கிறார்..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

Sep 01 2018 12:53:28 PM

கிருஷ்ணஜெயந்தின்னு சொன்னதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, உறவு வட்டாரத்தில் அல்லது நட்பு வட்டாரத்தில் உள்ள குழந்தையை கிருஷ்ணன் போல வேடம் அணிந்து, கிருஷ்ணன் போல பாவித்து, பஜனை பாடல்களை பாடி உள்ளே அழைத்து வருவோம். சாட்சாத் அந்த கிருஷ்ன பரமாத்மாவே குழந்தை உருவில் உள்ளே வருவார் என்கிறது ஐதீகம். சரி எதற்கு இது..? இதன்மூலம் ஒரு விதமான மன அமைதியும் புத்துணர்வும் கிடைக்கிறது எப்படி..?

கிருஷ்ணஜெயந்தி அன்று விரதம் இருந்தால் மூன்று பிறவிகள் செய்த பாவம் விலகும் என்கிறது புராணம். கிருஷ்ணர் அவதரித்த தினமான அன்று, 16 வகையான செல்வங்களும் ஜெனித்ததாம். அதில் ஒன்று தான் குழந்தை செல்வம், கிருஷ்ணஜெயந்தி அன்று விரதம் இருந்தால் குழந்தை செல்வம் மட்டுமின்றி இதர 16 வகையான செல்வங்கள் கிடைத்து பேறு அடைவார்கள் என்பது ஐதீகம்.

பூஜை:

கிருஷ்ணபெருமாள் அவதரித்த அன்று இருந்தவர்கள் வசுதேவர், தேவகி, மற்றொருவர் சந்திரன்.அதனால் மாலை 6 மணிக்கு மேல் அதாவது சந்திரன் ஒளிரக்கூடிய நேரத்தில் பூஜை செய்தால் கூடுதல் சிறப்பு. கிருஷ்ணனின் ஜனனத்தை பார்த்த வசுதேவர் மற்றும் தேவகியை நம்மால் பார்க்க முடியாது, ஆனால் மற்றொருவரான சந்திர பகவானை நம்மால் பார்க்க முடியும் என்பதே விஷேசம். சந்திரனுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் கிருஷ்ணனின் ஜனனத்தை பார்க்க நேரிட்டது.நமக்கு அந்த சந்திரனை பார்க்க பாக்கியம் கிடைத்துள்ளது.

பூஜையில் பஜனைகளை ஆரம்பித்து கிருஷ்னரின் படத்தை மடியில் வைத்து துதிக்க வேண்டும்.பூஜைக்கு பின்னர் கிருஷ்னரை மடியில் வைத்திருக்கும் நபர் பாலை சிறிது எடுத்து கிருஷ்ணருக்கு ஊட்டிவிட வேண்டும்.பின்னர் அதனை குழந்தை பேறு வேண்டுபவர்கள் அருந்தவேண்டும். சிறிது நேரம் கழித்து பூஜை அறையில் உங்களை நீங்களே 3 முறை சுற்றி , கிருஷ்னரை பார்த்து சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என கூறி ஒரு சொட்டு நீரை கிருஷ்ணரின் முன் விட்டுவிடவும். பின்னர் படைத்த உணவுகளை அருகாமையில் இருக்கும் குழந்தைகளுக்கு வழங்கலாம். இதோடு பூஜை நிறைவடைகிறது.

உண்மையில் இதோடு பூஜை நிறைவடைவதில்லை,இன்னும் எத்தனையோ கிருஷ்ணர்கள் உணவின்றி,சரியான உடையின்றி, கல்வியறிவின்றி,பெற்றோர்களை இழந்து கலியுகத்தில் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தில் வசதியான பெற்றோர்கள் இந்த கிருஷ்ணாக்களை தேடி சென்று உதவுங்கள், அப்போது முழுமையடைகிறது பூஜை மேலோங்குகிறது மனிதாபிமானம்.