உண்மையாகவே ஃபேஷன் என்பது இதுதானா???
  • 13:47PM Oct 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:47PM Oct 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாகரீகம் என்ற பெயரில், இன்று ஃபேஷனாகத் திரிபவர்கள் நிஜமாகவே ஃபேஷனாகத்தான் இருக்கிறார்களா??? உண்மையில், இந்த ஃபேஷன் எங்கிருந்து வந்தது என்று தெரிந்தால், இந்தக் கேள்விக்கான பதிலை நீங்களே அறிந்து கொள்ளலாம்.  பெரும்பாலும் நாம் கடைப்பிடிக்கும் பேஷன் என்பது சினிமாவை சார்ந்து இருக்கிறது என்பது உண்மை.  அரவிந்த் சாமி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு படத்தில் பிங்க், மஞ்சள், சிவப்பு, காபி, ஊதா போன்ற கலர்களில் பேன்டும், பச்சை, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் சட்டையும் அணிந்திருப்பார்.  அந்தப் படத்தில் அவருடையது கொஞ்சம் கிறுக்குத்தனமான கேரக்டர்.  பின்னால் வந்த மாஸ்க் என்ற படத்திலும், ஜிம் காரி இதே போல் உடையணிந்திருப்பார். இரண்டு வருடங்களுக்கு முன் அதுதான் உச்சக்கட்ட ஃபேஷனாக இருந்தது.

உழைப்பாளி படத்தில் ரஜினிகாந்த் முழங்காலில் லேசாகக் கிழிந்த ஜீன்ஸ் போட்டிருப்பார்.  அவரது ஏழ்மையைக் காட்ட. அதுவும் அப்படியே அங்கே இங்கே தாவி கடைசியில் இன்று வரும் டேட்டர்டு ஜீன்ஸ் தயாரிக்க வேண்டுமானால், அதை நேரடியாக நாய் வாயில் கொடுத்துக் கிழிக்க வேண்டிய அளவிற்குப் பெரிய கிழிசல்களோடும், ஓட்டைகளோடும் ஃபேஷனாகிப் போனது. 

பிறகு இந்த டாட்டூ கலாச்சாரம். பியர்சிங் எல்லாமே இப்படித்தான் உருவாகின.  டாட்டூக்களை மலிவாகப் போட்டுவிட்டு, அதை அழிக்க வெளிநாட்டிலிருந்து க்ரீம் இறக்குமதி செய்வதும், லேசர் ட்ரீட்மெண்ட் என்று அல்லற்படுவதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.  இப்பொழுது தாடி. சரி, உங்களுக்கான உண்மையான ஃபேஷன் என்ன தெரியுமா??? உங்களைக் கம்பீரமாகவும், அழகாகவும் எடுத்துக் காட்டும் எந்த உடையும் உங்களுக்குப் பொருத்தமான ஃபேஷன்தான்.  புரியவில்லையா??? தெளிவாகச் சொல்கிறேன். ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு வடிவம். உயரம், நிறம், அகலம், எண்ணெய் சருமம் என்று ஒவ்வொருத்தரும் ஒரு Individual. Individual-கள் எப்படி ஒரே ஃபேஷனில் ஒரே மாதிரி இருக்க முடியும்???

உங்கள் பணி அல்லது எதிர்காலம் உங்கள் டாட்டூவை பாதிக்காது என்றால் அதைப் போட்டுக் கொள்ளுங்கள்.  ஒல்லியான பெண்களுக்கு அழகாக இருக்கும் பல ஆடைகள், சற்றுப் பூசினாற்போல இருக்கும் பெண்களுக்கு அழகாக இருப்பதில்லை. சிலருக்கு லெதர் சுகமாகத் தோன்றும், பலருக்கு அரிக்கும்.  எந்த உடையில் நீங்களும் உங்கள் சருமமும் சுலபமாக மூச்சு விட முடிகிறதோ, எது உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறதோ அதுதான் உங்கள் உண்மையான ஃபேஷன்.  ஏனெனில், ஃபேஷன் என்பது நாம் துணிகளுக்கான ஹேங்கராக பயன்படுவதில் இல்லை, துணிகளை நமக்காக எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் இருக்கிறது. பெரிய ரேம்ப் ஷோக்களில் பேஷன் டிசைனர் வைத்து வடிவமைத்து கொடுத்த ஆடையை அணியும் நிறையப் பெண்களின் கவனம் ஆடைகளின் மீதே பெரும்பாலும் இருக்கும்.  இது இயல்பு, தன்னம்பிக்கை இரண்டையும் கெடுத்து விடும்.  காரணம், உடல் அளவுக்கு மீறி எங்கேயாவது தெரிந்து விடக் கூடாது என்ற உள் எண்ணம்.

உங்களுக்கு வசதியான, தன்னம்பிக்கை தரும் துணிகளை அணிந்தால், நீங்கள் எங்கிருந்தாலும் அந்த இடத்தின் அட்ராக்‌ஷன் நீங்களாக இருப்பீர்கள். உண்மையில் நமக்கு ஃபேஷன் தேவைப்படுவதும் அதற்குத்தானே… சுருங்கச் சொன்னால் – COMFORT IS FASHION…

 

   

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top