திருட்டுப் பயலே!!!
  • 23:19PM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 23:19PM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

       எனது நண்பன் ஒருவன் திருட்டு வழக்கில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்த போது தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது.  அவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது நடந்ததைக் கேள்விப்பட்டு, அவனுக்கு இனிமேலாவது திருந்தி வாழ் என்று சொல்லி, எந்த உதவி வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கச் சொல்லி கூறினேன்.  அன்று மிகவும் சந்தோஷமாக தான் இனிமேல் திருடவே போவதில்லை என்று சொல்லிச் சென்றவனை அதன்பிறகு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பார்க்க முடியவில்லை.  வேலை நிமித்தமாக ட்ரெயினில் பயணித்துக் கொண்டிருந்த போது, போலீஸ் கை விலங்கோடு அவனை வேறு ஊர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காகக் கொண்டு சென்றதைப் பார்த்தேன். இனி என்னானாலும் இவன் மூஞ்சியிலே முழிக்கக் கூடாதென்று கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

       ஓரு வாரம் இருக்கும், என் வீட்டிற்கு வந்து என்னைக் கூப்பிட வீட்டின் முன் அவனை நிற்க வைத்துப் பேச வேண்டாம் என்று தனியே அழைத்துப் போனேன். தனியே சென்றதும், திருட்டுத் தொழில் வேண்டாமென்றுதான் நான் உதவுவதாகச் சொன்னேன், ஆனாலும் திருடனாக நிற்கிறாயே என்று கடிந்து கொள்ள, அதற்கு அவன் கூறிய பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.  முதல்ல நான் வசதியா இருக்கனும்னுதான் மச்சான் திருடினேன்.  ஆனா, இப்போ, மாமூல் கொடுக்கிறதுக்காகவே திருட வேண்டி இருக்குது என்று சொல்லி அழத் துவங்கி விட்டான்.  அவனைச் சமாதானப்படுத்தி விசாரிக்கும் போது, அவனைக் கைது செய்த காவல்துறையினர், அவனைப் பார்க்கும் போதெல்லாம் பணம் வாங்க ஆரம்பிக்க அவனுக்காக வாதாடிக் கொண்டிருந்த வக்கீலிடம் சென்று முறையிட்டிருக்கிறான்.  வக்கீலும் பேசாம குடுத்துடு, வேற ஏதாச்சும் எழுதிடப் போறாங்க என்று சொல்ல, கொடுக்க ஆரம்பித்திருக்கிறான்.

       வழக்குச் செலவு, போக்குவரத்து, இவனுடைய சாப்பாடு தேவைகள், இடையில் மாமூல் என அனைத்தையும் சமாளிக்க முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்திருக்கிறான்.  இப்போது வக்கீலும் இவனிடம் அதே போல காசு வாங்க ஆரம்பிக்க, இரண்டு மடங்கு சுமையாகி விட்டது.  இப்படியே தொடர்ந்து, ஒரு கட்டத்தில் வேறொருவருக்காகச் சிறை செல்லக் கூட நேர்ந்திருக்கிறது.  இப்போது எதிர்காலத்தை நினைத்து பயம் ஏற்பட்ட போதும் புலிவாலைப் பிடித்த கதையாகிப் போனது அவனுக்கு.  நான் முகத்தைத் திருப்பிக் கொண்டது அவனைப் பாதித்ததால் நீயாவது புரிஞ்சுக்க என்று என்னிடம் புலம்பினான்.  எதாச்சும் பணம் குடுத்தா விட்ருவாங்களா என்று நான் கேட்க, நீ குடுத்தா என் பேரைச் சொல்லி உன்கிட்டயும் வாங்க ஆரம்பிச்சுடுவாங்க… நீயாவது நல்லா இரு என்றபடி சென்று விட்டான்.

       தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது என்பது போல சிறிய தேவைக்காக ஆசைப்பட்டு ஒரு குற்றம் செய்து முழு நேரக் குற்றவாளியாகிப் போன அவனை நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை எனக்கு.  திருடனாய் பார்த்து திருந்தியும், திருந்த விடாத பணத்தாசை பிடித்த நபர்கள் இருக்கும் வரை அவனுக்கு வாழ்க்கையில் விடிவுகாலம் கிடையாது என்பது மட்டும் நிதர்சனமாகப் புரிந்தது எனக்கு.     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top