2G தீர்ப்பு ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு???
  • 13:17PM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:17PM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

2G வழக்கு ஒரு மிக வித்தியாசமான வழக்கு.  அதாவது வழக்கமான நடைமுறைக்கும், மாறுபட்ட கண்ணோட்டத்திற்கும் இடையே நடக்கும் சண்டைதான் இது.  அதைப் பற்றி விரிவா பார்க்கிறதுக்கு முன்னாடி CAG – Comptroller and Auditor General of India 2G அலைக்கற்றை பற்றி என்ன சொன்னதென்று முதல்ல தெரிந்து கொள்ளலாம்  “2G என்பது அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு – Loss of Remuneration” என்பதுதான்.  அதைப் பற்றித் தெரியாமல் வெறும் சொல்லப்பட்ட தொகையை மட்டும் வைத்துக் கொண்டு சுவாமி, சோனியா, கபில் சிபல், ஜெயலலிதா, மோடி, அருண் ஜெட்லி என்று வரிசையாக அரசியல் பிரபலங்கள் அதனை ஊழல் என்று இன்னமும் நினைத்துக் கொண்டு, மக்களையும் நினைக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் உச்சக்கட்ட பரிதாபம். தெரியாமல் கேட்கிறேன் – வருவாய் இழப்பென்றால் என்ன? நான் மாதம் சம்பாதிப்பது 25,000 என்று வைத்துக் கொள்ளுங்கள்.  மூன்று மாதமாக வேலைக்குப் போகவில்லை என்று சொன்னால் அதற்குப் பெயர் வருவாய் இழப்பு. நான் இழந்த வருவாய் ரூபாய் 75,000.  இதன்படி நான் ஊழல் செய்திருக்கிறேனா இல்லையா???

இந்தியாவைப் பொறுத்தவரை வெகு சில கார்ப்பரேட் நிறுவனங்களே தொலைத் தொடர்புத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.  நம் அனைவருக்கும் அறிமுகமான நிறுவனங்கள். ரிலையன்ஸ், ஐடியா, ஏர்டெல், வோடபோன் போன்றவை.  வழக்கமாக இவை மட்டும்தான் ஏலத்தில் பங்கேற்கும், ஏலம் எடுக்கும்.  2008-ல் 2G அலைக்கற்றை ஏலத்தில் கொண்டு வரப்பட்ட போது ராஜா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் மூன்று.  ஒன்று அறிவிப்பு வரும் போதே சில நிறுவனங்கள் பணத்தை வரைவு காசோலையாக தயாராக வைத்திருந்தனர், அவர்கள் இராஜாவின் ஆட்கள் அல்லது லஞ்சம் கொடுத்தவர்கள். இரண்டு, ஏல முறைப்படி நடத்துமாறு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து வந்த கடிதத்தை மதிக்கவில்லை, மூன்றாவது 2001 விலையில் 2008-ல் அலைக்கற்றை விற்றது.  அவ்வளவுதான்.  இதன் பின்னணியில் ஊழல் இருக்கலாம் என்ற சந்தேகம்.

ஒவ்வொன்றாய் பதில் சொல்கிறேன்.  முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை, அதாவது யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி அலைக்கற்றை பெற்றுக் கொள்ளலாம் என்பது. உண்மையில் அந்த ஒரு காரணத்தால்தான் இன்று அழைப்புகளும், இணையமும் இலவசமாகக் கிடைக்குமளவுக்கு நிலை மாறியிருக்கிறது.  2008ல் செல்போன் பயன்படுத்தியவர்களுக்கு கட்டண விபரங்கள் புரியும்.  முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற இடத்தில் இரகசியம் ஏது? கேட்கும் தகவல்கள், கட்ட வேண்டிய தொகை இவையனைத்தையும் ஏல முறை போலல்லாமல் வெளிப்படையாக இருக்கும் போது வரைவு காசோலைகளாக இருந்ததன் குற்றமென்ன?  சரி, பிரதமர் அவசரமாகத் தலையிட்டு மாற்றச் சொல்ல வேண்டிய தேவைதான் என்ன? இதில் கிடைத்த கமிஷன் பணத்தைக் கணக்கு காட்டி நீரா ராடியா என்ற பெண் வருமான வரி கூடக் கட்டியிருக்கறாள். திருட்டுக் காசில் வருமான வரி எப்படி??? இப்பொழுது புரிந்திருக்கும் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் செல்லாது என்று.  சரி, இனி அந்த 1,76,000 கோடிக்கு வருவோம்.

உண்மையிலேயே 2Gயில் ராஜா ஈட்டிய தொகை எவ்வளவு தெரியுமா? 1,40,000 கோடி.  தற்போது நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தில் “வருட அடிப்படையில் பார்த்தால் 20 வருடங்களில் 1,20,000 யிலிருந்து 1,40,000 கோடி லாபம் வந்திருக்கும்.  உங்கள் கணக்குப்படி பார்த்தால், நீங்கள் அதே 20 வருடங்களுக்கு விற்பனை செய்தது 1,10,000 கோடிக்குத்தான்…” என்று சொல்லியிருக்கிறார்.  உண்மையிலேயே தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் குறையத் துவங்கியது அந்தக் காலகட்டத்தில்தான்.  செல் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அப்பொழுதுதான் பெரிய அளவில் உயர்ந்தது.  மொத்தமாகத் தொலைத் தொடர்புத் துறையைக் கையில் வைத்திருந்த அனைவரும் விழித்துக் கொள்ள, (புதிய தொழில் போட்டிகள் அதிகரித்த காரணத்தால்) அந்த நேரம் CAG இந்த வருவாய் இழப்பைப் பற்றிச் சொல்ல, வருவாய் இழப்பு ஒரே நாளில் ஊழலாக மாறிப்போனது… CAG பல கணக்குகளைச் சொல்லி ராஜா ட்ராய் பரிந்துரைத்த விலையில் விற்றிருந்தால் 3,05,000 கோடிக்கு விற்றிருக்க முடியும் ஆனால் விற்ற தொகை குறைவு. இதனால் அரசுக்கு 1,76,000 கோடி நஷ்டம் என்றுதான் குறிப்பிட்டிருந்தது. சரி, 122 லைசென்ஸ்கள் கேன்சல் செய்யப்பட்டு மீண்டும் 2010, 2012 இரண்டிலும் வாங்க ஆளில்லாமல் மீண்டும் 2012ல் இவர்கள் அதே அலைக்கற்றையை ஏல முறைப்படி விற்ற தொகை என்ன தெரியுமா??? 61,162 கோடி.  CAG 2010ல் நடந்த 3G & 4G அலைக்கற்றை ஏலத்தைத் தான் உதாரணம் காட்டுகிறது.  அப்படி விற்கப்பட்ட 3G & 4G மதிப்பு 1,06,200 கோடி என்று சொல்லப்பட்டாலும், அதில் பிராட் பான்ட் சேவைகளுக்காகக் கழிக்கப்பட வேண்டிய தொகை 38,500.  ஆகவே, அது கூட விற்கப்பட்டது வெறும் 67,700 கோடிதான். அதிலும் BSNL, MTNL ஆகிய இரு அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு 16,750.58 கோடி என வெறும் 50,968.37 கோடிக்குத்தான் 3G விற்கப்பட்டிருக்கிறது.  இவையெல்லாம் எத்தனை வருடத்திற்கான தொகை தெரியுமா? 20 வருடங்கள்.

இவ்வளவு ஏன்? 2016 ல் 4G-க்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு என்ன தெரியும்? 5.63.000 கோடி.  விற்கப்பட்டது எவ்வளவு என்று தெரியுமா? 65,789 கோடி.  உண்மையிலேயே உங்களுக்குக் கணக்குப் போடத் தெரிந்தால் வருவாய் இழப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.  வருவாய் இழப்பு என்பது ஊழலல்ல என்பது புரியாமல் முதலில் காங்கிரஸ் அதில் எவ்வளவு தேறும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது. அதனால் வழக்கு மந்தமானது.  அடுத்து வந்த தேர்தலில் அம்மாவும் அதை நம்பி தலைக்கு ஒரு லட்சம் என்று பிரச்சாரம் செய்து ஜெயித்த பின், அவருக்கும் விஷயம் புரிந்து இதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டார்.  அடுத்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர், தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரே இவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்றால் எல்லாரிடமும் எவ்வளவு இருக்கும் என்று மனக்கணக்குப் போட்டு ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் 15 லட்சம் என்று சொல்லி, இப்பொழுது அவருக்கும் புரிந்து விட்டது இது ஊழலல்ல, வருவாய் இழப்பு என்று.  பழைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூடச் சென்ற வருடம் இதே நேரத்தில் 2G Scam என்று முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.  அவ்வளவு அக்கறை வேலை மேல…

இதில்லாமல் இன்னொரு சிக்கலும் உண்டு.  எவ்வளவு பெரிய நிதிக் குற்றத்திற்கும் (Financial Crime) அதிகப்படியாக இரண்டு ஆண்டுகள் தண்டனைதான்.  அதை ஏற்கெனவே ராஜா, கனிமொழி இருவரும் அனுபவித்து விட்டார்கள்.  இப்பொழுது தண்டனை அறிவித்து அதைப் பழைய சிறைவாசத்துடன் கழித்து வெளியில் விட்டாலும், ஏதேனும் சாக்கு சொல்லி சிறைவாசத்தை அதிகப்படுத்தினாலும் தண்டனை அறிவித்து விட்டால் ஜாமீன் பெற்று ராஜா வெளியில் வந்தாலும், சட்டத்தைப் பற்றி மக்கள் முணுமுணுக்கத் துவங்கி விடுவார்கள்.  நாளைக்கே தீர்ப்பு சொல்லிவிட முடியும்தான்.  ஆனால் தீர்ப்பில் வருவாய் இழப்பு என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு வெளி வரும், ஏனெனில் கோர்ட்டுகளில் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும்.  நாளை அரசு மாறினால் பதில் சொல்லியாக வேண்டும்.  அப்பொழுது அனைத்து மக்களுக்கும் தாங்கள் மிகவும் நம்பிய, பின்னால் சென்ற அரசியல் தலைவர் எப்படி வருவாய் இழப்பை ஊழல் என்று தங்களிடம் பொய்யான தகவலைப் பரப்பினார் என்ற கேள்வி கட்டாயம் வரும்.  இந்த நிலை ஊடகங்களையும் விடாது.  அவர்களின் நம்பகத்தண்மையும் கேள்விக்குள்ளாகும்.

ஆக, மொத்தம், பத்து கார்ப்பரேட் கம்பெனிகள் புதிதாய் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தைச் செம்மையாக நிறைவேற்றிக் கொண்டு விட்டார்கள்.  இல்லாத பணத்தைத் தேடி ஓடிய கதை வெளிப்பட்டால், மக்கள் முன் எப்படி முகம் காட்டுவது என்ற ஒரு கேள்வியினாலே, இன்று அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்ப்பை ஒத்தி வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  திமுக மற்றும் இராஜா கவலையில்லாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். ஏனெனில், நஷ்டக் கணக்கையும், ஊழல் என்ற போர்வையும் காட்டி ராஜாவை உள்ளே தள்ள முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  வேறு விதமாகத் திரித்து தண்டனை அளித்தால், மக்கள் பணம் எங்கே என்று கேள்வி எழுப்புவார்கள்… சாயம் வெளுக்கும்… மக்களின் முட்டாள்தனம் மக்களுக்கே புரியும் நேரத்தில் எப்படி எதிர்கொள்வது என்று அவர்கள் தெரிந்து கொண்டால் அன்று நிச்சயம் தீர்ப்பு வரும்.  புரியாமல் போனால் நாளை என் பேரன் கூட தலையங்கமாகப் படிப்பான் – “2G வழக்கில் இன்று தீர்ப்பு…”   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top