ஆதார் கார்டு நடைமுறை – சரியாகத்தான் செயல்படுகிறதா ???
  • 06:11AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:11AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஆதார், ஆதார், ஆதார்… இந்தியாவில் இன்று எங்கு பார்த்தாலும் இது ஒன்றுதான் அனைவரையும் ஒருவகையில் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது எனக் கூட சொல்லலாம்.  வங்கிக் கணக்கு, கேஸ் மானியம் என்று ஆரம்பித்து இன்று பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரை ஆதார் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனாலும், இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒரு பெரிய சந்தேகத்தை எழுப்புவதை தற்போது தவிர்க்க முடியவில்லை.  ஆதார் கார்டு செயல் திட்டத்திற்கு உண்மையான திட்ட வடிவம் மத்திய அரசிடம் இருக்கிறதா? இருக்கிறதென்றால், அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே அவை.

இந்தக் கேள்வி எழ என்ன காரணம்???

ஆதார் ஒன்றே முழுமையான, அதிகாரப்பூர்வ அடையாள அட்டை எனும் பட்சத்தில், அதை நடைமுறைப்படுத்த இவ்வளவு பிரம்மப் பிரயத்தனங்கள் தேவையில்லை – அதுவும் மத்தியில் ஆளும் அரசுக்கு, மாறி மாறி, அதற்கும் வேண்டும், இதற்கும் வேண்டும், திருப்பதி லட்டு வாங்குவதற்கும் வேண்டும் எனும் நடைமுறை எப்படியாவது வாங்க வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தைக் காட்டும் அதே வேளையில், சரியான திட்டமிடுதல் இல்லையோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது,

அடுத்து, சரிபார்ப்பு.  அவ்வளவு அத்தியாவசியமான ஒரு அடையாள அட்டையை சான்றாகக் கொடுத்து ஸ்மார்ட் கார்டு விண்ணப்பித்தால், 20 நாட்களாக ஒரே பதில்தான் – ஆவண சரிபார்ப்பு.  அப்படியென்றால், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆவணத்தைச் சரிவர சரிபார்க்க எந்த வழிவகையும் இல்லாத பட்சத்தில், அதை எப்படி சரியான திட்டமிடுதலில் சேர்க்க முடியும்???

எல்லாம் சரி, அதைக் கூட விட்டுவிடலாம்… ஆனால் ஆதார் அட்டையை வங்கியுடன் இணைத்து, மொபைல் எண்ணுடன் இணைத்து, எரிவாயு இணைப்புடன் இணைத்து – இப்படி இணைத்துக் கொண்டேயிருப்பது தவிர மக்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா???  ஆதார் விண்ணப்பத்திலேயே அனைத்து விபரங்களும் கொடுத்திருக்கிறோம்.  அனைத்து இணைப்புகளும் தன்னிச்சையாக நடைபெறும் வகையில், ஒரு செயலி அல்லது ஒரு மென்பொருள் இல்லாமல் இருப்பதுதான் சரியான ஒரு திட்டமிடுதலின் வெளிப்பாடா என்பது கூட புரியவில்லை.

மொத்தத்தில் எதையோ செய்கிறோம் என்று ஆரம்பித்து விட்டு, அதை முழுதுமாய் முடிக்க முடியாமல் சுற்றிக் கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை மத்திய அரசே ஏற்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.  இந்த நடைமுறைக் குழப்பங்களால் ஆதார் பொது மக்களின் அடிப்படை உரிமையில் தலையிடுவதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.  இது சரியான முறையில் தீர்க்கப்படுமா??? உருவாக்கியவர்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும்.

இப்படிக்கு, இன்னும் எது எதற்கெல்லாம் எத்தனை லீவு போட்டுச் சுற்ற வேண்டியிருக்குமோ என்ற கவலையில் உள்ள ஒரு தமிழன்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top