அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே - எது உண்மையிலேயே அந்தரங்கம்???
  • 12:18PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:18PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

சமீபத்தில் ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.  அது ஆதார் கார்டு வழங்கப்படுவதற்காகக் கேட்கப்படும் கேள்விகள், ஒருவரின் அனைத்துச் செயல்பாடுகளையும் உள்ளடக்கும் பான் கார்டு, ரேஷன் கார்டு உட்பட அனைத்தையும் ஆதாருடன் இணைப்பது ஆகியவை “கதவைத் தட்டாமலேயே அடுத்தவர் வீட்டுக்குள் நுழைவதற்கு சமம்” என்று அறிவுறுத்தியுள்ளது. உண்மையிலேயே ஆதார் அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் அத்துமீறுகிறதா??? இதைப் புரிந்து கொள்ள அந்தரங்கம் என்பது என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நடிகர் அஜித் நடத்த ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் இது.  “”உன் சுதந்திரம் என்பது என் மூக்கு வரை மட்டும்தான், என் மூக்கை நீ தொட்டுவிட்டால் அது என் சுதந்திரம்”.  ஒரு விதத்தில் நம் அடிப்படை உணர்வுகள் மற்றும் உரிமைகளை அனைத்து இடங்களிலும் அரசு பாதுகாத்து வருகிறதா என்பது கேள்விக்குரிய ஒன்றுதான்.  ஆதார் என்பது இந்திய மக்களுக்கான ஒரே அடையாள அட்டை என்று சொல்லியிருந்தால் இவர்கள் கேட்பது நியாயம். அது கூட ஒரு முறை ஆதார் வழங்கியபின் வேறெதையும் கேட்காமல் தன்னைத்தானே இணைத்துக் கொண்டிருந்தால். அது நடக்கவில்லை.  பிரச்சினை துவங்கியதன் காரணமே, எத்தனை மனைவிகள் போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

உண்மையில் நம் அந்தரங்கம் என்பது எவை??? இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நாம் நம் உரிமைகளை நிலை நாட்டுவதுதான் நம் அந்தரங்கம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சுயவிருப்பத்தால் உறவு கொள்வதை அனுமதிக்கும் அதே சட்டம்தான், அப்படிப்பட்ட உறவையே தொழிலாக வைத்திருப்பதைத் தவறென்று சொல்கிறது.  அதே சட்டம் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்து கொள்வதும் தவறு என்று சொல்கிறது.  இப்பொழுது நம் அந்தரங்கம் என்பது என்னவென்ற கேள்விக்கு வருவோம்.  ஊருக்குத் தெரியாமல் இரண்டாவது மனைவி வைத்திருப்பது என்பது அந்தரங்கமல்ல.  ஏனெனில், நேரடியாகவோ மறைமுகமாகவோ முதல் மனைவி, அவரது குடும்பம் என அனைவரையும் பாதிக்கும்.  முதல் மனைவியுடனான பேச்சுகள், உறவுகள் வேண்டுமானால் அந்தரங்கமாகக் கருதிக் கொள்ளலாம்.

அடுத்து நமது அடையாள அட்டைகள். நமது வங்கிக் கணக்கு, அடையாள அட்டை போன்ற விஷயங்களைக் காப்பது அந்தரங்கம்.  ஏனெனில், அவை மூன்றாவது நபர் கைக்கு போவது பொருளாதார இழப்பை அளிக்க வல்லது.  அவையும் நம் அந்தரங்கமே. ஆனால் ஒருவரது அடையாள அட்டையை எந்தச் சமயத்திலும் பரிசோதிக்கும் உரிமையோ, கேட்கும் உரிமையோ அரசுக்கு கண்டிப்பாக இருக்கிறது.  அப்படியென்றால், கோர்ட்டு தீர்ப்பு தவறா என்று கேட்டால் அதுவும் இல்லை.  ஏனெனில் கேட்கும் நோக்கம், செயல்படுத்தப்படும் விதம் என்ற இரண்டு காரணிகள் இருக்கிறது.  முதலாவதாக, ஒற்றை அடையாள அட்டை ஆதார் என்ற விசயத்தை ஆரம்பம் முதலே அரசு மறுத்து வருகிறது சொல்லாலும், செயலாலும்.  அதென்ன செயலாலும்???  அதாவது ஆதார் ஒரே அடையாள அட்டையாக இருப்பின், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளோ, பேன் கார்டுகளோ தேவையே இல்லை. 

அப்படி எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த இணைப்பு தேவையற்றது என நீதிமன்றம் கருதுகிறது. அப்படியென்றால் நம் அந்தரங்கம்தான் என்ன என்று சொல்லப் போனால். வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து விஷயங்களும், அதன் வரைமுறைக்கு உட்பபட்டதாக வைத்திருக்கும் உரிமையே நமது அந்தரங்கம்.  அதைத் தாண்டி செயல்படுத்தப்படும் எந்தச் செயலாக இருந்தாலும், செய்வது அரசாங்கமே ஆனாலும், அது அத்துமீறுதல்தான்.  அதாவது, வீடு என்பது வசிப்பதற்காக என வரைமுறைப்படுத்தப் பட்டதால், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வசிக்கும் வரையில் அது நமது அந்தரங்கம்.  அதே வீட்டை வெடிகுண்டுகள் செய்யவோ, பெண்களை வைத்துத் தொழில் செய்தல் போன்றவற்றைச் செய்தால், வீட்டின் கதவைத் தட்டாமல் உள்ளே நுழைவது என்ன வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைவது கூட ஒருவிதத்தில் நியாயமே.

உங்கள் அந்தரங்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.  இவைற்றை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மிகச் சரியாக அறிந்து வைத்திருந்தால், உண்மையிலேயே அரசு என்பது மக்களுக்கு ஊழியம் செய்யும் கருவி என்பது உங்களுக்கே புலப்படும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top