ஒரு தலைக் காதல்…
  • 14:45PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:45PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஒரு தலைக் காதல்… சுகமான, அதே சமயம் வலி நிறைந்த காதல் என்றால் அது ஒரு தலைக் காதல்தான்.  பெரும்பாலும் காதல் என்றால் என்னவென்று புரியாத பருவத்தில் வருவதாலும், எதிர் பாலினத்தவர் மீதான முதல் புரிதல் முயற்சி என்பதால் முக்கால்வாசிப் பேருக்கு இது தோல்வியில் முடிந்தாலும், மறக்கவே முடியாத நினைவுகளையும் அளிப்பது இந்தக் காதல்தான். இந்தக் காதல்தான் புரிதலுக்கான முதல்படி என்று கூடச் சொல்லலாம்.  வருங்காலத்தில் சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ எந்த மாதிரியான சமூகப் பறவையாக மாறுகிறார்கள் என்பதை நிர்ணயிப்பதும் இந்தக் காதல்தான்.  சுருக்கமாகச் சொன்னால் 100% மக்களுமே இந்தக் காதலைக் கடக்காமல் இருந்திருக்கவே முடியாது. 

சரி, இந்தக் காதலினால் என்ன நன்மை??? முதலில் வாழ்வில் எல்லாமே கிடைக்காது என்ற படிப்பினையைக் கொடுப்பது இந்தக் காதல்தான்.  அடுத்தபடியாக, நமது தோற்றம், பேச்சு மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவை Impressive ஆக, நம்மை நாமே சரிப்படுத்திக் கொள்ள உதவுவதும் இந்தக் காதல்தான்.  தோல்விகளைத் தாண்டியும் வாழ்க்கை என்பதைப் புரிய வைப்பதும் இந்தக் காதல்தான்.  இனக்கவர்ச்சி தாண்டி மனதைத் தேடச் சொல்லிக் கொடுப்பதும் இதே காதல்தான்.  16 18 வருட வாழ்க்கை கற்றுக் கொடுத்த அனைத்தையும் மாற்றி, சில மாதங்களிலேயே நமக்குப் பக்குவம், வாழ்க்கையில் போராடி வெற்றி பெரும் தன்மை என அனைத்தையும் புரிய வைப்பதும் இந்தக் காதல்தான். 

ஆனால், இன்று ஓரு தலைக் காதல் என்று சொல்லிக் கொண்டு நடப்பவை சிறிதும் ஜீரணிக்க முடியாதவையாக இருக்கிறது. காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் அடிப்பதில் துவங்கிக் கொலை வரை போகிறது. காரணம் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பாமல், நினைத்தது கிடைத்தே ஆக வேண்டும் என்ற அசட்டுப் பிடிவாதம்.  ஏன் பிடிக்கவில்லை என்று ஆராயாமல், எப்படிப் பிடிக்காமல் போகும் பார்க்கலாம் என்ற குருட்டு நம்பிக்கையின் காரணமே இது.  என்னைப் பொறுத்தவரை அப்படிச் செய்தவர்களின் பின்னாளைய வாழ்க்கை??? ஒரு பெரிய கேள்விக் குறிதான்.  சற்றே வளர்ந்து அறிவு வளரும் போது, செய்தது தப்பென்று உணர்ந்தாலும் அது சரி செய்யவே முடியாத விஷயமாக மாறிப் போயிருக்கும். திருமணப் பட்டியலில் கடைசி வரிசை ஆளாகத்தான் நிற்க வேண்டி இருக்கும்.  இதெல்லாம் எதற்காக…

பருவத்தில் மீசை, தாடி வளர்வது போல நமது எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் மாறும் வரை காதல் பற்றிய அபிப்ராயங்கள் மாறிக் கொண்டேதான் இருக்கும்.  அந்த நேரத்தில் வரும் காதலில் இதுவும் ஒன்று. அதைச் சரிவரப் புரிந்து கொண்டால், சற்றே வயதான பின் நிதானமாக அசைபோட்டு மௌனமாகச் சிரித்துக் கொள்ளும் விஷயங்களில் இதுதான் முதன்மையானதாக இருக்கும்.  இல்லையென்றால், நாம் வாழ்க்கை முழுவதும் எண்ணி வருத்தப்பட்டு, அனைத்தையும் இழந்து நின்றிருப்போம்.  எது தேவையென முடிவு மட்டும் – உங்கள் கைகளில்…   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top