நமக்கும் கீழே கோடி…
  • 07:19AM Sep 19,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:19AM Sep 19,2017 Chennai, Tamil Nadu 600003, India

 

வாழ்க்கையில் பொதுவாக ஒரு வலியோ, இடர்பாட்டினையோ சந்திக்காத மனிதன் யாருமேயில்லை. தோல்விகள் கண்டு துவண்டு விடுவதும், தற்கொலை செய்து கொள்வது போன்ற முட்டாள்தனங்களினால் அற்புதமான மனித உயிர்கள் வீணாகிப் போகின்றன.  பரிட்சையில் தோல்வியா, காதல் தோல்வியா, வேலை கிடைக்காததினால் விரக்தியா – எதுவுமே மாறப் போவதில்லை. நாம் எல்லோரும் படிப்பில் தோற்றிருந்தாலும், வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் ஒருவரையாவது நேரடியாகப் பார்த்திருப்போம். அவர்களால் முடியுமென்றால், நம்மால் ஏன் முடியாது???

உண்மையாகச் சொன்னால், இதற்குப் பெரும்பாலும் கிடைக்கும் பதில் – லக், பேக்கரவுண்ட், ஜாதி, அப்பா சப்போர்ட் என எல்லாம் சொல்வார்கள்.  இவர்கள் அனைவரும் உங்களை விட எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் அல்ல, அவர்கள் பார்வையைத் தவிர.  தோல்வியடையும் போது நமக்கு மேல் உள்ளவர்களை பார்க்கிறோம், இவர்கள் தனக்கு கீழ் உள்ளவர்களைப் பார்க்கிறார்கள்.  எவையெல்லாம் இன்று உங்களிடம் இல்லை என்று வருத்தப்படுகிறீர்களோ அது மட்டும் இன்றி, உங்களிடம் இருப்பதைப் பார்த்தும் பொறாமை கொள்ளும் அளவிற்கு மட்டுமே பெற்றவர்கள் தன்னாலும் வெற்றி பெற முடியும் என இயங்குவதைப் பார்க்கிறார்கள். நினைத்துக் கொள்ளங்கள் - உங்கள் நிலை மோசம் என்று நினைத்தால், உங்களுக்கும் கீழே ஒரு கோடி பேர் இருப்பதையும் யோசியுங்கள்.

நமக்கும் கீழே ஒரு கோடி. அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது.  கை, கால் இல்லாதவர்கள், நிழலை மட்டுமே வீடாகக் கொண்டவர்கள், பார்வையற்றோர் என அனைத்துத் தரப்பும் போராடிக் கொண்டிருக்கிறது. முன்னேறிக் கொண்டும் இருக்கிறது.  காதல் தோல்விகள் தாங்கிக் கொள்ள முடியாததா??? காதலித்த மனைவியுடன் இரண்டு பிள்ளை பெற்று, அவர்களுக்கு மூன்று நேர உணவளிக்க முடியாமல் இருப்பவனைப் பாருங்கள் அல்லது ஆதரிக்கப் பெற்றோர் இன்றி, எந்த அன்பும் இல்லாமல் வாழும் சிறுவர்களைப் பாருங்கள், உங்களிடம் என்ன இருக்கிறதென்று புரியும்.

வேலையின்றி கஷ்டப்படுகிறீர்களா??? உங்கள் நிலையில், வாடகை வீட்டில் மனைவியுடன் இருப்பவனை நினைத்துப் பாருங்கள்.  உலகம் மிகவும் சிறியது. அதை விடவும் சிறியது நம் வாழ்க்கை.  அமெரிக்காவில் கைகளே இல்லாமல் பிறந்த ஜெசிக்கா காக்ஸ் இன்று விமானம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவர்களைப் போன்ற வாழ்வியல் உதாரணங்கள் வலைத் தளம் முழுவதும் இருக்கன்றன. அவர்களைப் பாருங்கள் – உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் வெறும் குப்பைதான் என்பதை நீங்களே உணர்வீர்கள்.  தோல்விகளை நினைத்துக் கவலை கொள்ளாமல் அடுத்தது என்ன போய்க் கொண்டிருக்கும் எவனையும் தோல்விகள் விரட்டிக் கொண்டுதான் இருக்குமே ஒழிய, பிடிக்க முடியாது.

எப்போதெல்லாம் மனசு சஞ்சலப்படுகிறதோ அப்போதெல்லாம் சொல்லிக் கொள்ளுங்கள் – நமக்கும் கீழே ஒரு கோடி.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top