ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி பிறகு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியா வரை சென்று அங்கு தனது திறமையால் இந்திய அணியில் இடம்பிடித்து சாதனைகளை நிகழ்த்தி காட்டியவர் நம் தமிழக வீரர் நடராஜன். சுந்தர், சிராஜ், நடராஜன் தாக்கூர், சைனி, கில் ஆகிய இளம் வீரர்களின் அசத்தலான அறிமுகத்தால் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா.
இவர்களை ஊக்குவிக்கும் விதமாக இவர்களுக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தார் என்ற பெயரில் சமீபத்தில் அறிமுகமான காரை பரிசளிப்பதாக நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்தார். அந்த வகையில் தனக்கு பரிசாக வந்த காரை தனக்கு பயிற்சியளித்து தன்னை வாழ்க்கையில் உயர்த்திய பயிற்சியாளர் ஜெயபிரகாஷிடம் பரிசாக கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் நடராஜன்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடராஜனை அழைத்து அவருக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்து அவரை சிறந்த பந்துவீச்சாளராக மாற்றி இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறார் பயிற்சியாளர் ஜெயபிரகாஷ். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ள நடராஜன் தற்போது நன்றி மறவாமல் தனது பயிற்சியாளருக்கு கொடுத்துள்ள இந்த கெளரவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.