குழந்தைகளுக்குப் பொம்மை வாங்கப் போகின்றீர்களா? உஷார்…
  • 07:54AM Nov 29,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:54AM Nov 29,2017 Chennai, Tamil Nadu 600003, India

தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளைகளின் நலன் ஒன்றே அனைத்துப் பெற்றோருக்கும் மிகவும் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துச் செய்ய வேண்டியதாகவும் இருக்கிறது.  அப்படி அவர்களுக்கு அனைத்தையும் சரி வரச் செய்து ஏதேனும் ஒரு இடத்தில் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் கூட சமயத்தில் அது அந்தக் குழந்தைக்க பெரும் பாதகமாக முடிவதுண்டு.  அதில் மிக முக்கியமாக நாம் கவனக் குறைவாக இருக்கக் கூடாத ஒரு விஷயமென்றால் – பொம்மைகள். 

ஏன் பொம்மைகள் விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொன்னால், பொம்மைகள்தான் நம்மை விடவும் குழந்தைகளுக்கு நெருக்கமானவை. வயதுக்குத் தக்கவாறு அந்தப் பொம்மைகளை வாயில் வைப்பது, கடிப்பது, உடைத்து ஆராய்வது என அனைத்து வேலைகளையும் குழந்தைகள் செய்யும்.  சில சமயங்களில் குழந்தைகளின் அன்பும், தாய்மையும் கூட பொம்மைகளின் மூலமாகத்தான் நமக்கே தெரிய வரும். அப்படிப்பட்ட பொம்மைகளை நாம் சரியாக தேர்ந்தெடுத்து வாங்கித் தரத் தவறினால், அது கண்டிப்பாக குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கக் கூடிய விஷயமாக மாறி விடும். எனவே பொதுவாக பொம்மைகளை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில், நிறம். குழந்தைகள் பார்வையில் நிறத்திற்கு ஒரு பெரிய மரியாதை உண்டு. அதைத்தான் அவை மிகவும் விரும்பும்.  பளிச்சென்று நிறம் இருப்பின் அது குழந்தையை மிகவும் கவரும் விளையாட்டுப் பொருளாகி விடும்.  அப்படி இல்லாத பட்சத்தில், அது எத்தனை நல்ல பொம்மையாக இருந்தாலும் ஆப்ஷனாக மட்டுமே இருக்கும். நிறங்களைப் பற்றிப் பேசும் போது இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நிறம் பூசப்பட்டிருக்கும் தன்மையைக் கவனியுங்கள். சில வகை க்ளிட்டர் துகள் பெரியவர்களுக்கே சேராது. தோலில் அரிப்பெடுக்கும்.  இது போன்றவற்றைக் கட்டாயம் தவிர்க்கவும்.  மேலும், கூர்மையான பொருள் பட்டால் நிறம் உரிந்து வருகிறதா என்பதையும் கவனியுங்கள்.  ஏனெனில், அந்தப் பொம்மையை குழந்தை எந்த நேரத்திலும் வாயில் வைக்கும் அபாயமுண்டு. உரிந்து வரும் பெயிண்ட் வயிற்றின் உள்ளே சென்றால் கேன்சர் வருமளவுக்கு அபாயகரமானது. 

இரண்டாவது, வடிவமைப்பு.  சுலபமாகப் பிரிந்து வருகிறதா, உடையுமா என்பதைப் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் கூரான முனைகள். நாயின் பல் வளரும் போது கடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி இயல்பானதோ, அதே அளவு தோள்கள் வலிமை பெறும் சமயம் குழந்தைகள் பொருட்களை வீசியெறிவது.  அப்படிச் செய்யும் போது அதனால் குழந்தையோ, நீங்களோ காயம் பட்டு விடக் கூடாது.  உடையும் பொருட்களாக இருப்பின், கூரான முனைகள் எப்போது வேண்டுமானாலும், உருவாகலாம்.  அதுவுமில்லாமல், குழந்தைகள் அடிக்கடி கீழே விழும். அப்படிக் கீழே விழும் போது அடிபடாமல் பாதுகாக்க இந்த முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம்.  மேலும் சுலபமாக கழன்று வரும் ஆணிகள் இவை போன்றவை நிகழா வண்ணம் கவனத்துடன் தேர்ந்தெடுப்பது அவசியம்.

மூன்றாவது, வெளி விளையாட்டுப் பொருள்கள்.  அதற்காகவாவது வெளியில் சென்று விளையாடி, சில நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளட்டுமே… மேலும், வெளி விளையாட்டுப் பொருட்கள் மூலம் உடல் வலிமை, கூட்டத்தை எதிர்கொள்வது, ஆரோக்கியமான மனம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு எனப் பல விதங்களில் நமக்கு லாபம் இருக்கிறது.  உள் விளையாட்டுகளில் கேரம் போர்டு, செஸ் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் பொருட்கள் இருப்பது மிகுந்த நன்மையளிக்கும்.  இதுவே நாளை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் தைரியத்தைக் கொடுக்கும்.

டெட்டி பேர் போன்ற பொம்மைகள் வாங்கித் தரும் பொழுது அவசியம் அவற்றின் ரோமம் பிய்ந்து வருகிறதா என்று கவனியுங்கள்.  ஒரு கொத்து ரோமம், தொண்டைக்குள் போனால் குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும்.  வாங்கிக் கொடுக்கும் போதே கடிக்கக் கூடாது பொம்மைக்கு வலிக்கும் என்று சொல்லி வாங்கிக் கொடுத்தால் குழந்தை அதை என்றுமே செய்யாது.  அதே போல குழந்தையால் சமாளிக்க முடியாத பெரிய பொம்மையும் வாங்கிக் கொடுக்காதீர்கள். குழந்தை அதனடியே கூட மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு கூட உண்டு.

மொத்தத்தில், உங்கள் பாசம் என்பது எத்தனைப் பெரிதாக வாங்கிக் கொடுக்கிறீர்கள் என்பதில் இல்லை, அதை எத்தனைக் கவனமாக வாங்கிக் கொடுத்தீர்கள் என்பதில்தான் உள்ளது.  குழந்தைகள் விளையாடுவது பெரிய அழகு, அதைக் கண்டு மகிழ இதைக் கூட செய்யக் கூடாதா என்ன…  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top