இன்னொரு அனிதாவின் மரணம் நேராமலிருக்க, உடனடியாக செய்ய வேண்டியது???
  • 10:29AM Oct 03,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:29AM Oct 03,2017 Chennai, Tamil Nadu 600003, India

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களாகட்டும், வழக்குகளாகட்டும் இவை எவையுமே போன அனிதாவின் உயிரைத் திருப்பிக் கொடுத்துவிட முடியாது. இனியொரு அனிதா இந்த முடிவுக்கு வராமல் இருக்க உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன???

முதலில் மாணவர்களுக்கு - பாடத்திட்டம். 

சி.பி.எஸ்.சி. பள்ளிகளைப் புத்திசாலித்தனமாக வளர்த்து விட முடிவு செய்து செயல்படுத்தப்பட்ட திட்டம் இது.  அதை நாம் அவர்கள் வழியிலேயே எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் தற்போது எந்தப் பாடத்திட்டத்தில் படிக்கிறார்களோ அதே பாடத்திட்டத்தில் தொடருங்கள்.  காரணம், அனைவரும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்கு மாறினாலோ, வசதியில்லை என்று படிக்காமல் விட்டாலோ அரசுப் பள்ளிகள் காலியாகி விடும்.  ஏழை மாணவர்கள் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரையிலாவது அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும். அதற்காகவாவது அந்தப் பள்ளிகள் இருக்க வேண்டும்.

இரண்டாவது தன்னார்வலர்களுக்கு – கற்பித்தல்.

வேலை வாய்ப்பு தேடும் வேளையில், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைப் பயிற்றுவியுங்கள்.  பணத்திற்காக வேலை செய்யாமல், கூடுமானவரைக் குறைந்த கட்டணத்தில் அனிதா போன்ற பிள்ளைகளைத் தேர்வுக்கு தயார் செய்ய, மையங்களை தமிழகமெங்கம் உருவாக்குங்கள்.  வசதி இருப்பின் உங்கள் பகுதி மாணவர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுங்கள்.  இரண்டு பாடத்திட்டங்கள் நமது மாணவர்களுக்குக் கூடுதல் பலத்தைத் தரும்.  நீட்டின் மூலம் நமக்கு விடுக்கப்பட்ட மிரட்டலை எதிர்கொண்டு, IIT, Jipmer, SAT, GRE போன்ற அவர்களின் கோட்டைகளை நமத பிள்ளைகள் மூலம் உடைக்க வழி செய்வோம்.

மூன்றாவது வழக்கறிஞர்களுக்கு – போராடுதல்.

நீட் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், மக்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.  வெவ்வேறு மாநிலங்களுக்கடையிலான கல்வித் தரம், கல்லூரியின் தரம் மற்றும் தகுதி பற்றிய கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்புங்கள். நடைமுறையில் உள்ள ரிசர்வேசன் சட்டத்தினை பாதிக்கும் வகையில் நீட் செயல்படுவதைப் புரிய வையுங்கள்.  சி,பி,எஸ்.சி. பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தை, பதினோறாம் வகுப்பில் சொல்லிக் கொடுப்பதால், அடிப்படை அறிவு வளர்ச்சி மற்றும் புரிதல் இடைவெளியைக் காரணம் காட்டி தடை கோருங்கள்.  தனித்தனியாக இருக்கும் இவற்றின் முடிவுகள் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாகத் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும். 

நான்காவது பெரியமனிதர்களுக்கு – உதவியளித்தல்.

உண்மையிலேயே உங்களுக்கு உதவி செய்யும் மனமிருந்தால் - மேலே சொன்ன தன்னார்வலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நீங்கள் நேரடியாக உதவுங்கள்.  நாளைய பிள்ளைகளுக்கான நமது முதல் பங்களிப்பாக இருக்கட்டும்.  இவர்களுக்கு உங்கள் செல்வாக்கின் மூலம் இடையூறு நேராமலும் உங்களால் காப்பாற்ற முடியும். 

ஐந்தாவது அரசியல்வாதிகளுக்கு – போராட்டங்கள்.

கொள்கை அடிப்படையிலான முடிவுகளுக்கும், அரசியல் சாணக்கியதனத்திற்கும் இது நேரமல்ல… உங்களால் நீட்டை எதிர்த்துப் போராட முடியுமென்று நம்பினால், ஆட்சியை தாராளமாகக் கவிழுங்கள்.  மக்கள் புரிந்து கொள்வார்கள்.  பலம் குறைவென்று கருதினால், கொடிகளைத் துறந்து வந்து போராட்டக் களத்தில் நில்லுங்கள்.  மதங்களைத் தாண்டி மனிதம் மேலோங்கியதை இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்த மக்களுக்கு, கொடிகள் தாண்டி மக்களுக்காகக் கட்சிகள் இணையும் என்பதைக் காண்பியுங்கள். மொத்தமாய் தமிழகம் பின்னே வரும்.

ஆறாவது தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு – தொழில்நுட்ப உதவி.

அனைவரும் அனைத்து நேரத்திலும் படிக்கும் நிலையில் இருப்பது கஷ்டம்.  அவர்கள் விரும்பும் நேரத்தில் படிக்க இணைய வழியும், செயலி வழியும் உங்களால் சாத்தியப்படும்.  உங்களைச் சுற்றி இருக்கும் சிலருக்கு உங்களால் நிச்சயம் உதவ முடியும், அது எவ்வாறு என்பதை மட்டும் யோசியுங்கள்.

ஏழாவது மக்களுக்கு – தொடர்பு

உங்கள் க்ரூப்கள் அனைத்தின் மூலமாக இந்த அனைவரையும் ஒன்றிணையுங்கள்.  இது ஒன்று மட்டும் சரியாக சாத்தியமானால், தமிழகத்தின் கல்வி தரத்திற்கு ஈடாக, எந்த மாநிலத்தாலும் நிற்க முடியாது. தானாகப் படிப்பை சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரும், தானாய் விரும்பிப் பாடம் படிக்கும் பிள்ளையும் இணைவது கல்வியில் யாராலும் தோற்கடிக்க முடியாத அறிவாய் ஒளிரும். நீட் நீக்கப்படவே இல்லையென்றாலும், சி.பி.எஸ்.சி. யை வளர்த்தெடுக்க முடியாமல் போய்விடும்.  எந்தத் தேர்விலும், தமிழர்களாய் நம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும்.

இனியொரு குழந்தையின் கனவு கருகும் முன்னே, நாம் இணைந்து செயல்பட்டுத்தான் ஆக வேண்டும்.இத்தனை பிரச்சினைகளா என்று கவலைப்பட்டு நிற்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை… பத்து முனைகளில் பிரச்சினை வந்தால் பயந்தோட வேண்டியதில்லை, பத்து விதமாய் ஒற்றுமையுடன் எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வோம்… மூன்று பிரளயம் கண்ட ஒரே இனம், அனைத்தையும் வெல்வோம்…

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top