தகுதி நீக்கம் செல்லும், இடைத் தேர்தல் நடத்தத் தடை… அடுத்த கட்டம்???
  • 11:18AM Sep 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:18AM Sep 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

     பரபரப்பாகச் சென்ற வாரம் கண்டிப்பாக ஆட்சி கவிழும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆளுநரும் ஒரு முடிவோடு சென்னை வந்திருந்தது எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகப்படுத்தி இருந்தது. திடீரென்று நமது நீதிமன்றம் வழக்கம் போல வித்தியாசமான தீர்ப்புகளை வழங்கியது, எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தண்ணீர் விட்ட கதையாக மாறிப் போனது.  ஆனாலும், பின்னணியில் வேறு சில விஷயங்கள் நடக்காமல் இல்லை… இவை தற்போது நிகழும் தமிழக அரசியல் நிலைப்பாட்டின் மீது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்???

       உள்ளாட்சித் தேர்தல் நடக்காதது மற்றும் 19 காலித் தொகுதிகளை உருவாக்கியுள்ளதோடு, பல மாதங்களாகப் பிரதிநிதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களின் மனநிலை ஒன்று.  117 என்ற மதில் மேல் அமர்ந்திருக்கும் அரசாங்கம் இரண்டாவது.  திருச்சி மாநாட்டில், ஹெச், ராஜா விஷயத்தில், தமிழகத்தின் பாஜக-வின் நிலையும், அதனுடன் சேரும் கட்சிகளின் நிலையும் தெளிவாக Intelligence Bureau ரிப்போர்ட்டில் நேரடியாக மோடியிடம் சென்றது.  திமுக-வின் 21 எம்எல்ஏக்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், திமுக கூண்டோடு பதவி விலகக்கூடும் என்ற சூழ்நிலை மற்றொன்று.  எப்படிப் பார்த்தாலும், நீறு பூத்த நெருப்பாக இந்தப் பிரச்சினை சரியான காற்றுக்காகக் காத்திருக்கறதே தவிர, பிரச்சினை முழுவதுமாக நீங்கி விடவில்லை.

       இந்தச் சூழ்நிலையில், முரட்டுத்தனமான அரசியலின் நகர்வாக ஒருவேளை தினகரன் கைது செய்யப்படலாம் என்று வேறு வதந்திகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.  சரி, இனி என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.  அதிமுக அரசின் தற்போதைய நிலைப்பாடு, பல ஆண்டு காலமாய் கட்டமைத்த தொண்டர்களை வெகுவாக எரிச்சலடையச் செய்திருக்கிறது. பொது ஜனமாகப் பார்த்தாலும் பாதிக்கும் மேற்ப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவம் என்பது காலியாக இருக்கிறது பல மாதங்களாய்… சபாநாயகரின் நேற்றைய தகுதி நீக்க உத்தரவு கட்சிக்குள் ஒற்றுமையை வளர்க்காமல், இருப்பவர்களிடம் பயத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.  இது விரைவில், ஸ்லீப்பர் செல்களின் மூலம் பெரிதாக்கப்படலாம். அப்படி ஒருவேளை எம்எல்ஏக்கள் எதிர்த்து நிற்கத் துணிந்தால், இன்னும் ஒருவரைக் கூட ஆளும் தரப்பு நீக்க முடியாது என்பது நிதர்சனம்.  மெஜாரிட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லாமலே வெளிப்பட்டுவிடும்… காலியாக உள்ள இடங்களைக் கருத்தில் கொண்டால் வேறு கட்சிக்கும் ஆட்சிப் பொறுப்பு கிடைக்காமல் ஜனாதிபதி ஆட்சி மலர வாய்ப்புகள் பிரகாசமாகிவிடும்.

       பாஜக-வின் செயல்பாடுகள் திடீரென்று தமிழகத்தில் பரபரப்பு குறைந்து காணப்படுவது, ஆளும் தரப்பிற்கு நிச்சயமாக நல்லதல்ல… ஒருவேளை அவர்கள் தங்களின் வியூகத்தை மாற்றிக் கொள்ளத் தயாரானால், இன்று தினகரன் இருக்கும் அதே நிலையில் நாளை எடப்பாடி, பன்னீர் செல்வம் ஆகியோர் நிற்க வேண்டி இருக்கும். அப்படி நின்றால், அதிமுக என்ற கட்சிக்கு அது எந்த வகையிலான பாதிப்பைக் கொடுக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு கவுன்சிலர் கூடக் கிடையாது தமிழகத்தில், இன்று 19 எம்எல்ஏக்கள் இல்லை, நாளை திமுகவின் 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை பாய்ந்தால், அவர்கள் ஒருவேளை கூண்டோடு இராஜினாமா செய்தால், 234 இடங்களில் 116 இடங்கள் காலி இடங்களாக இருக்கும்… தேர்தல் என்ற முறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட இதை விடத் தெளிவான சூழ்நிலை ஏதும் இருக்காது என்று கருதுகிறேன்.

       நீதிமன்றங்கள் வாதங்களின் அடிப்படையிலான வெற்றித் தோல்விகளை கருத்தில் கொள்வதை விட்டுச் சற்றே தொலைநோக்கு சிந்தனையுடன் மக்களின் நலனுக்காகவும் யோசித்துத் தீர்ப்பளிப்பது தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.  தொகுதிப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் பணி செய்ய முடியாமல் அல்லது இயலாமல் போனால், பிறகு மக்கள் போடும் ஓட்டுக்கு என்னதான் மரியாதை???  உள்ளாட்சி நிர்வாகம் மறந்து போன ஒன்றாகி விட்டது.  எது எப்படியோ, மக்களுக்கான அரசு என்ற கொள்கையில் அனைவருமே தோற்று விட்டார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

 

         

      

        

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top