இந்திய பெருங்கடலின் பாதையில் அமைந்துள்ள மாலத்தீவு மிகவும் குட்டியான நாடாக இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இதன் அண்டை நாடுகளாகும். சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடமாக இந்த மாலத்தீவு கருதப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.
அங்குள்ள தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு ஆகியவை சுற்றுலா பயணிகளால் மிகவும் விரும்பக்கூடிய இடங்களாக அமைந்துள்ளது. உலகின் பழமையான மசூதிகளில் ஒன்றான வெள்ளி தொழுகை மசூதி மாலத்தீவில் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரைகள் மிகவும் அழகான இயற்கை தோற்றத்தை கொண்டிருக்கின்றன. காதல் ஜோடிகளின் சொர்க்க பூமியாக இந்த தீவு இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
மாலத்தீவில் நம்மை கவர்ந்திழுக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. பவள பாறைகள், தென்னை மரங்கள், கண்ணை கவரும் மீன்கள், அழகிய மணல் வெளியில் அமைந்துள்ள பூங்காக்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இங்கு வந்தால் நிச்சயம் மன அழுத்தம் குறைந்து அமைதியை உணர முடியும். தேனிலவு மற்றும் குடும்ப சுற்றுலா இரண்டிற்குமே இது சிறந்த இடமாக கருதப்படுகிறது. ஸ்கூபா டைவிங் செய்வதற்கும் சரியான இடமாக இது உள்ளது. இங்குள்ள நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் போது ஒரு உன்னதமான உணர்வு உங்கள் மனதில் ஏற்படும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பல அழகான இடங்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது மாலத்தீவு.