துளிர்க்கும் முன்னே கருகிய காதல்!!!
  • 12:06PM Nov 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 12:06PM Nov 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

       காதல் ஒருவருக்கு எப்போது வரும், எப்படி வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது.  ஆனால், சிலது நீண்ட காலம் தாக்குப்பிடித்து நிற்கும். சிலதோ ஆரம்பிக்கும் முன்னரே கருகிப் போகும். ஒரு விதத்தில் பார்த்தால் தற்போது சொல்லப் போகும் கதை காதலில் சேருமா என்று கூட இன்றுவரை எனக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது.  நான் நகரத்தில் ஒரு கணினி வரைகலை மையம் வைத்து நடத்தி வருகிறேன்.  தற்போது 35 வயதைக் கடக்கும் நான், என் 20 வயதில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.  எங்கள் குலதெய்வம் கோவில் அருகிருலுள்ள கிராமத்தில் இருக்கிறது.  வருடா வருடா அனைவரும் ஒன்று கூடி சிறப்பாக விழா எடுப்பது வழக்கம்.  அந்த வருடம் என்ன அதிசயமோ, எப்போதும் வராத சொந்தங்கள் கூட ஒருவர் பாக்கியில்லாமல் வந்திருந்தனர்.

       ஒரு வகையில் அன்றைய தேதிக்கு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்களில் ஒருவன் நான்.  போதாத குறைக்கு கொஞ்சம் வாலு என்பதால் பெரும்பாலானவர்களுக்கு செல்லப் பிள்ளை வேறு.  ஊருக்குச் சென்று இறங்கியதுமே நண்பர்கள் சூழ்ந்து கொள்ள, ஒரு இடம் பாக்கியில்லாமல் சுற்றி, பார்ப்பவர்களிடமெல்லாம் வம்பிழுத்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தேன். திருவிழா முடியும் சமயம் நடன நிகழ்ச்சி நடத்துவதாக ஏற்பாடு… அங்கும் சென்று அந்த ஸ்டெப் சரியில்லை, இதை மாற்று அதை மாற்று என்று ரகளை வேறு. இரவு என் முறைப் பெண் தீச்சட்டி எடுப்பதாக இருந்தது.  காலையிலேயே அவள் கூல்ட்ரிங்ஸ் வேண்டும் என்று கேட்டிருந்தாள்.  அந்த இடத்திற்கு வந்ததும் அவள் ஒரு கூல்ட்ரிங்க்ஸ வாங்கித் தரக் கூட வழியில்லையா என்று கேட்க, அவளைப் பழி வாங்க முடிவு செய்தேன். 

       நேரம் வேறு இரவு 12.30 இருக்கும். கடுமையான குளிர்.  கொஞ்சம் தள்ளி மரத்தடியில் என் நண்பர்களுடன் வந்து அமர்ந்து கொண்டேன். அப்போது ஒரு பெண் என்னுடன் இருந்த ஒருவனை அழைத்து என்னைப் பற்றி விசாரித்திருக்கிறாள். அதற்குள் தீச்சட்டி எடுக்கத் தயாராக இருந்த அனைவரையும் அழைத்துப் போனார்கள்.  நான் உடனே அவசரமாக அனைவரையும் அழைத்துக் கொண்டு போனேன்.  இரவு தூங்கிக் கொண்டிருந்த கடைக்காரரை எழுப்பி உள்ளே ப்ரிட்ஜில் உறை நிலையில் இருந்த Fruitang பாட்டில் ஒன்றை வாங்கிக் கொண்டு போனேன்.  என் முறைப் பெண் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிரில் நடுங்கியபடி வந்து அமர, கூல்ட்ரிங்க்ஸை குடித்தே ஆக வேண்டும் என்று ரகளை செய்து குடிக்க வைத்தேன்.

       பின்னர் மீண்டும் மரத்தடியில் வந்து அமர்ந்து கலாய்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண் திரும்ப என்னுடன் இருந்தவர்களில் ஒருவனை அழைத்து விசாரித்திருக்கிறாள்.  என் கெட்ட நேரம், அவன் நான் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்த முறைப் பெண்ணின் அண்ணன், என் மச்சான். அவனிடம் நான் யாரென்று கேட்க, அவனோ நான் போலீஸ் ட்ரெய்னிங் போய்க் கொண்டிருப்பதாகவும், என் வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறான்.  நான் அவன் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, ஊளையிடுவது போல சப்தம் செய்ய – அவள் என்னைத் திரும்பப் பார்த்து மெலிதாக ஒரு சிரிப்பு சிரித்தாள்.  சிறிது நேரம் கழித்து என் மச்சானிடம் அவளைப் பற்றிக் கேட்க, அவனோ, உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று நடந்ததைச் சொல்ல நான் அவளைக் கூட்டத்தில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. மச்சானுக்கும் அவளைப் பற்றித் தெரியவில்லை.

       அடுத்த நாள் அதிகாலையிலேயே நிறையப் பேர் சென்று விட்டதால், அந்தப் பெண்ணை அதன்பின் பார்க்கவில்லை. உண்மையைச் சொன்னால் எனக்கும் அவளைப் பிடித்திருந்தது. சில மாதங்கள் கழித்து ஒரு திருமணத்திற்குச் சென்றேன்.  முதல் வரிசையிலேயே நான் நண்பர்களுடன் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தேன்.  மாப்பிள்ளையைப் பற்றிப் பேசும் போது போலீஸில் இருப்பதாகச் சொன்னார்கள். மாப்பிள்ளையை அழைத்து வந்து உட்கார வைக்க ஓரளவுக்கு என் உயரம், தள்ளி நின்று பார்த்தால் என் ஜாடை தெரிய மச்சானிடம் அதைச் சொல்ல, ஆமா, சொந்தக்காரங்களுக்குள்ள எப்படிப் பார்த்தாலும் இப்படி நிறைய இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெண்ணை அழைத்து வந்தார்கள். பெண்ணை முதலில் பார்த்த மச்சானுக்கு அதிர்ச்சி.  அவன் ரியாக்‌ஷன் பார்த்து நானும் திரும்பிப் பார்க்க எனக்கும் அதிர்ச்சி. 

       அந்தப் பெண்ணேதான்.  என் மச்சான் ஏதோ சொல்ல வர, தடுத்துவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவள் அமர்ந்தவள் அனைவருக்கும் வணக்கம் சொல்ல நிமிர்ந்தவள் நேரெதிரே என்னைப் பார்த்தாள்.  இரண்டு நொடிகள் அதிர்ச்சி தெரிந்தது.  பக்கத்தில் இருக்கும் அவனைப் பார்த்தாள்.  மீண்டும் நிமிர்ந்து என்னை ஆழமாக ஒரு முறை பார்த்தாள். நான் எழுந்து வந்து விட்டேன்.  மச்சான் பின்னாலேயே வந்து, நான் வேணும்னு சொல்லலை என்று சொல்ல, வருத்தமாக இருந்தாலும் சிரித்தவாறே அவ தலையில போலீஸ் மாப்பிள்ளைன்னு எழுதியிருக்கு, மாத்தவா முடியும் என்றபடி கிளம்பிவிட்டேன்.  எத்தனைப் பெரிய காதலாக இருந்தாலும் குறுக்கே ஒருவன் இருந்தால் இறுதியில் இப்படித்தான் முடியும்.                 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top