காதலால் சாதல்…
  • 06:32AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:32AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

போன தலைமுறைவரை பெண்களுக்கு வரும் காதல் தூதுகள் நிராகரிக்கப்பட்டால், அந்த ஆண் தேவதாஸாக ஒருதலை ராகம் பாடிக் கொண்டிருப்பான்.  சிறிது காலத்திற்குப் பிறகு நேற்றைய தலைமுறை லவ் பெயிலியரை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு, திருமணத்திற்கு பிறகும் நல்ல நண்பர்களாகக் கூட இருந்தனர்.  ஆனால், இன்றைய தலைமுறை அதைப் பெண்களின் மீதான வன்மமாக கொண்டாடிப் பழகியிருக்கிறது.  இதில் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் யார்???

முதலில், தற்போதுள்ள குழந்தைகளுக்கு நாம் அவர்களின் சுதந்திரத்தை ஒரு வயது முதலே கொடுக்கத் துவங்கி விடுகிறோம். அவர்கள் விரும்பும் பள்ளி, அவர்கள் விரும்பும் உடை, அவர்களைத் திட்டாத, அடிக்காத பள்ளிகள் என்று… இப்பொழுது குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத காரணத்தால் ஏற்படும் குற்ற உணர்ச்சியால், பூப்போல வைத்துப் பார்த்துக் கொள்கின்றனர்.  ஆசைப்படுவது கிடைப்பது தவறல்ல… ஆனால், கிடைத்துக் கொண்டேயிருப்பது தவறு.  ஏமாற்றத்தை அறியாமல் வளரும் பிள்ளைகள், சிறு ஏமாற்றத்தினால் கூட தன்னையோ மற்றவர்களையோ காயப்படுத்த தயங்காதவர்களாக மாறி விடுகிறார்கள்.

அடுத்து, வளரும் போது ஏற்படும் நட்பு மற்றும் வீட்டின் நிலை.  பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் மாறிக் கொண்டேயிருக்க, அவனுடன் அதிகமாகப் பேசுபவர்கள் பெண்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயமே அவனது அபிப்ராயமாகிறது.  அதைப் பொய் என்றோ, தவறு என்றோ, செய்கையால் கூடப் புரிய வைக்க முடியாத தாயின் நேரமின்மை அவனை முழுவதுமாக அந்த அபிப்ராயத்திற்குள் தள்ளிவிடும்.

போதாததற்கு. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீடியா கள்ளக் காதலிலிருந்து அனைத்து வகையான குப்பைகளையும் கொட்ட, அவன் மனம் முழுவதுமாய் பெண் ஏமாற்றிவிடுவாள் என்பது மட்டுமே பதிந்து விடுகிறது. மிச்சம் இருக்கும் இடத்தையும், இணையத்தில் காணப்படும் தகாத உறவுக் கதைகள் நிரப்ப, கிட்டத்தட்ட மனிதனாய் காணப்பட்டாலுமே ஒரு மிருகமாய் உலவ ஆரம்பித்து விடுகிறான்.

சிலர் காலப்போக்கில் இதைப் புரிந்து மாறினாலும், எடுத்துச் சொல்ல ஆளில்லாத மற்றவர்கள் மனதிற்குள் வக்கிரமாகிக் கொண்டே போவார்கள்.  அவர்களுக்குத் தேவை ஒரு Trigger – அவ்வளவுதான்.  பெண்கள் பார்வையில் பிடித்துப் போய் பழகிய பிறகு, இந்தக் குணம் தெரிய வந்து விலக முயற்சிக்கும் வேளையில் - அவனுள் இருக்கும் அந்த மிருகம் Trigger செய்யப்படுகிறது. இதுவே காதலிக்கும் பெண்ணைக் கொலை செய்துவிட்டு சர்வசாதாரணமாய் ஒப்புக் கொள்ளவும் தைரியமளிக்கறது. 

பள்ளிப் பருவத்திலேயே இதைக் கண்டுபிடித்து இவர்களையும். இவர்களால் பாதிக்கப்படப் போகும் பெண்களையும் காப்பாற்றியாக வேண்டும்.  இல்லாவிட்டால், அடுத்த தலைமுறை என்பது டாக்டராகவோ, எஞ்சினியராகவோ இருப்பதை விடவும் - தலைப்புச் செய்திகளாக இருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை…     

Top