போனுக்கு ஆசைப்பட்டு…
  • 11:52AM Nov 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 11:52AM Nov 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

நான் வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கிப் படித்த மாணவி.  இந்தச் சம்பவம் நான் காலேஜ் படிக்கும் சமயத்தில் நடந்தது.  தற்போது ஒரு நல்ல கணவருடன் திருமணமாகி நல்லபடியாக வாழ்ந்து வந்தாலும் சில நேரங்களில் அவர் காட்டும் பிரியமே என்னைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது.  காரணம் நான் சொன்ன சம்பவம்.   என் நிலை வேறு எந்த மாணவிக்கும் வரக் கூடாது என்ற காரணத்தாலேயே இதை எழுதுகிறேன்.  நான் வீட்டில் ஒரே பெண், செல்லம் வேறு.  நடுத்தர வர்க்கம் என்று கூட சொல்ல முடியாத அளவுதான் வசதி என்றாலும், அப்பா தன் சக்திக்கு அதிகமாகவே எனக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். வெளி உலகம் என்று நான் பார்த்ததே என் பள்ளியில்தான்.  மற்றபடி சென்னையில் படிக்க வரும் வரை பெரிதாக எதுவும் தெரியாது.

சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கிய சில தினங்களிலேயே எனக்குப் புதிதாக ஒரு மோகம் பிடித்துக் கொண்டது.  அது கூடத் தங்கிப் படிக்கும் சில மாணவிகளின் கையில் இருந்து ஒரு பிராண்டட் போன்.  அதைக் கையில் வைத்திருந்தாலே மரியாதை என்பது போல அந்தப் பெண்கள் நடந்து கொள்வதும், என் அறைத் தோழிகள் அந்தப் போனைப் பற்றிப் பேசியதும் எனக்கு அந்தப் போன் மேல் காதலே வந்துவிட்டது.  என் அழகு என்ன என்பது கல்லூரி செல்ல ஆரம்பித்த பிறகுதான் எனக்கே தெரிந்தது.  பையன்கள் விடாமல் சுற்றுவதும், நட்பு பாராட்டுவதுமாக முதல் செமஸ்டர் வரை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.  கூடவே, அந்தப் போன் விஷயத்தில் நான் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டேன் என்று கூடச் சொல்லலாம்.  விலை சத்தியமாக என் வீட்டிற்கோ எனக்கோ கட்டுப்படியாகாத விலை. 

அப்பொழுதுதான் என்னைத் தீவிரமாகக் காதலிப்பதாக அவன் அறிமுகமானான்.  எனக்கு அவன் என்னிடம் பேசியதை விட, அவன் கையில் இருந்த போன் மீதுதான் கவனம் இருந்தது.  யோசித்துச் சொல்கிறேன் என்று ரூமிற்கு வந்த நான் தோழிகளுடன் அவனைப் பற்றிப் பேசும் போது அவன் என் ஊரருகே உள்ள கிராமத்தில் பெரிய வீட்டுப் பையன் என்பதும், கல்லூரிக்கே காரில் வந்து போகும் வசதியுடைவன் என்று கேள்விப்பட, அன்று இரவு முழுவதும் தூக்கமே இல்லை.  காலையில் தெளிவாக இருப்பது போலிருந்தது.  எனக்கு அந்தப் போனை வாங்கிக் கொடுக்க வந்தவன் போல எனக்குத் தோன்றினான்.  பின்னால் வந்த அனைவரையும் உதாசீனப்படுத்திவிட்டு அவனுக்கு சம்மதம் தெரிவித்தேன்.  இரண்டாவது செமஸ்டரில், முழுக் காதலர்களாக மாறிவிட்டோம்.  நான் அவனிடம் பேசியதில் பெரும்பகுதி அந்தப் போனைப் பற்றித்தான் இருக்கும்… என் பிறந்தநாளன்று வெளியில் கூட்டிச் சென்று, அவன் அந்தப் போனைப் பரிசளிக்க மிக நெகிழ்ந்து போன நான் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்ல – அன்றிரவே எங்களுக்குள் உடலுறவு நிகழ்ந்தது. 

மறுநாள் காலேஜில் அந்தப் போனை எடுத்துக் கொண்டு பெருமையுடன் சுற்ற, என் அறைத் தோழிகள் இருவரும் என்னுடன் பேசுவதை குறைக்கத் துவங்கிவிட்டனர்.  இரண்டு வருடங்கள் இப்படியே எங்கள் உறவு அன்னியோன்மாகப் போனது.  கடைசி வருட முடிவில் அவன் வீட்டில் பெண் பார்ப்பதாகத் தகவல் வர, அவனை வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொல்ல அவன் அதே போனின் புதிய வெளியீடு ஒன்றுடன் வந்தான்.  அங்குதான் என் புத்தி பிசகிப் போனது.  அந்தப் போனைப் பார்த்ததும், மகிழ்ந்து போய் பேச வந்ததை மறந்து அதை வாங்கிக் கொண்டேன்.  சில தினங்கள் கழித்து, அந்தப் பிரச்சினை மீண்டும் வர, அவனோ நிதானமாக – போன வாரம் எதற்கு வரச் சொன்னே என்று கேட்டான்.  இதைப் பத்திப் பேச என்று நான் சொல்ல, பிரச்சினை பெரிதாக - அவனோ போனுக்காகத்தான பழகினே என்று என்னை அசிங்கமாகப் பேசிவிட்டான்.  என் கையில் இரண்டு போன்கள் இருந்தாலும் தற்போது நிம்மதி தொலைந்து போன பிறகுதான் உணர்ந்தேன், வாழ்க்கையில் ஒன்றுமில்லாத ஒன்றுக்காக எதை இழந்திருக்கிறேன் என்று.  அந்தக் கணத்தில் கூட, எனக்குப் போனை திருப்பிக் கொடுக்கத் தோன்றவில்லை.

திருமணத்திற்குப் பின்னும் அவன் இரண்டு மூன்று முறை என்னை அழைக்க, அப்பொழுதுதான் அந்தப் போன் பரிசல்ல என்பது புரிய, அவனை வரச் சொல்லி அதனைக் கொடுத்தனுப்பி விட்டேன்.  இரண்டு மூன்று வருடங்கள் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டிலேயே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.  வந்தவர் கெட்டவராக இருந்திருந்தால் எனக்கு இது தேவைதான் என்று நினைத்திருப்பேனோ என்னவோ… மிகவும் நல்லவராக இருந்து என்னைத் தாங்கு தாங்கென்று தாங்க, தற்போது தினம் தினம் குற்ற உணர்ச்சியினால் செத்துக் கொண்டிருக்கிறேன்.  தயவு செய்து அல்ப விஷயங்களுக்காகப் பெண்கள் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்…  என்னைப் போல ஒரு வாழ்க்கை சத்தியமாக வேறு யாருக்கும் அமையக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். கவனமாக இருங்கள்…    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top