Misc

உண்மையில் உங்கள் ஆயுள் உறிஞ்சப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆதாரம் இதோ!

Sep 21 2021 03:23:00 PM

நேற்று நெருங்கிய உறவினர் ஒருவரின் தாயார் காலமாகி இருந்தார். அவரது இறுதி ஊர்வலத்திற்கு சென்றிருந்தேன். அனைவரும் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தனர். இறந்துபோன பாட்டிக்கு மரியாதை செலுத்திவிட்டு, சற்று வெளியில் வந்து அமர்ந்தேன். அப்போது அருகில் அமர்ந்திருந்த கூட்டத்தின் அரட்டை சத்தம் காதில் விழுந்தது. அந்த கூட்டத்தில் ஒருவர், "இறந்த பாட்டிக்கு 95 வயது, இயற்கையான மரணம். இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நம்ம எல்லாம் 60 வயது தாண்டிவிட்டாலே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவேண்டும். எப்போது போவோம் என்று தெரியாது" என்று பேசிக் கொண்டிருந்தார். மற்றொருவர், "எங்க அப்பா சாகும்போது அவருக்கு 102 வயது. இயற்க்கை மரணம் தான்", என்று கூறவே எனக்குள் ஒரு கேள்வி, நமது முன்னோர்களின் ஆயுட்காலம் எப்படியும் சராசரியாக 90 முதல் 100 ஆண்டுகள். ஆனால் தற்போதைய இயற்கை மரணங்களில் உயிரிழப்போரின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள் மட்டும் தான். எதனால் இந்த வித்தியாசம் வருகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

death-funeral life-of-men

இந்த இடைவெளியில், அந்த கூட்டம் கலைந்து செல்லவே நானும் அங்கிருந்து நகர்ந்து மற்ற உறவினர்களிடம் சென்று அமர்ந்து கொண்டேன். அந்த இடத்தில் இருந்த மற்றொரு உறவினரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். அவருக்கு 50 வயது இருக்கும். அவர் ஒரு கைதேர்ந்த மருத்துவர். இந்த கேள்வியை அவரிடம் கேட்க துவங்கினேன். நாம் நன்றாகவே பிறக்கிறோம், நன்றாகவே வளர்கிறோம், இவ்வளவு ஏன்? மருத்துவ டெஸ்டில் கூட நமது உடலில் எந்தவித குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று கூறப்பட்டாலும், தற்போதைய நிலையில் இயற்கையாக மரணித்தால் கூட, மனிதரின் ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள் தான். இது குறித்து சற்று தெளிவுபடுத்துங்கள் என்றேன்.

death-funeral life-of-men

அவர் சற்று சிரித்தவாறே, இது உண்மையல்ல, உங்களின் சராசரி ஆயுட்காலம் இன்னும் கூட குறையலாம் என்று கூறினார். எனக்கு அ திர்ச்சியாக இருந்தது. அதாவது நமது முன்னோர்களின் வாழ்க்கை இயற்கையை சார்ந்து இருந்தது. அதிலும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகள் அவர்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருந்தது. கடுமையான உழைப்பு அவர்களின் தேகத்தை வலுப்படுத்தியது.

death-funeral life-of-men

விவசாயம் மூலமாக அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்துகொண்டனர். அது அவர்களின் ஆயுட்காலத்தை மேலும் அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் அவர்கள் உண்ட உணவு, பருகிய குடிநீர், சுவாசித்த காற்று ஆகிய அனைத்தும் சுத்தமானதாக இருந்தது. மேலும் அனைவரும் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் எவ்வித குறையும் இல்லாமல் வாழ்ந்தனர். தற்போது இருப்பது போன்ற அவசரமான வாழ்க்கையோ, அரைகுறை உணவோ அப்போது கிடையாது. சமீபத்தில் கூட டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு அங்கு வாழும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தில் 1 முதல் 2 ஆண்டுகள் குறைவை ஏற்படுத்தி உள்ளதாக சில ஆய்வுகள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

death-funeral life-of-men

உழைக்காத உடலுக்கு உபாதைகள் அதிகம் ஏற்படும். தற்போது இருக்கும் சூழ்நிலைகள் நமது உடல் உழைப்பை குறைத்து, மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இதனால் நாம் உண்ணும் உணவில் இருக்கும் சில மூலக்கூறுகள் உடலில் அப்படியே தேக்கம்பெறுகின்றன. அதனை செரிமானம் செய்யவே நமது உடல் மிகவும் சிரமப்படுகிறது. நாட்கள் அதிகரிக்கும்போது அது உடலில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அவைகள் நோய்களாக மாற்றம் பெறுகின்றன. அந்த நோய்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நமது உடலின் சீரான இயக்கம் தடைபடுகிறது.

death-funeral life-of-men

ஒருசில உடலியல் பிரச்சனைகளை மருத்துவர் சரிசெய்ய இயலும், இருந்தாலும் அது முற்றிலும் குணமடையாது. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும்போது உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்கு வந்துவிடும். இதனால் தான் மனிதனின் ஆயுட்காலம் பெரும்பாலும் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், உடலளவில் இருக்கும் பிரச்சனைகளை விட மனதளவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உடலியல் பிரச்சனைகளை இருமடங்காக்கி உங்களின் ஆயுட்காலத்தை அதிகம் உறிஞ்சிவிடுவதாக அவர் தெரிவித்தார். பிறகு நேரம் கடக்கவே அவரும் அந்த இடத்தை விட்டு செல்ல, நானும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.