ஏமாற்றம் தாங்கிப் பழகு…
  • 11:10AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:10AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகத் தற்கொலைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.  அரசும், தன்னார்வலர்களும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், இந்த எண்ணிக்கை கூடுகிறதே ஒழியக் குறையவில்லை.  முன்பெல்லாம் தீவிரமாகச் செயல்பட்டு வந்த சுசையிட் ஹெல்ப்லைன்கள் குறித்தும் நாம் இப்பொழுது அதிகம் கேள்விப்படுவதில்லை.  காரணங்கள் எதுவாயினும், மனித உயிர் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று.  டாக்டர் அனிதாவைப் போல சில மரணங்கள் விதையாகிப் போனாலும், மற்ற அனைத்துமே ஒரு நாலு வரிச் செய்தியுடன் முடிந்து போய்விடுகிறது.  சரி, இதிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற என்னதான் வழி???

முதலில் குழந்தைகளைத் தோல்விக்குப் பழக்குங்கள்.  கேட்ட உடனே கிடைப்பது அவர்களுக்குப் பெற்றோர் தான் விரும்பிய அனைத்தையும் தனக்கு வாங்கிக் கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை தோற்றுவித்து விடும். விளைவு உங்களால் முடியாத ஒன்றை அவர்கள் கேட்கும் போது, நீங்கள் வாங்கிக் கொடுத்தேயாக வேண்டும் அல்லது உங்கள் பிள்ளை வேறு முடிவெடுத்து விடும்.  இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஒரு iPhone காக வகுப்பில் படிக்கும் சக மாணவனுடன் நெருக்கமான இருக்க ஒரு பெண் சம்மதித்தது வரை போயிருக்கிறது. எதுவும் பலனளிக்காத பட்சத்தில், திருடவோ அல்லது தற்கொலைக்கு காரணமாகவும் மாறி விடுகிறது. எனவே, தோல்விகளைப் பழக்குங்கள்.  எல்லா நேரத்திலும் எல்லாம் கிடைக்காது என்பதைப் பழக்குங்கள்.

போராடச் சொல்லிக் கொடுங்கள்… போராட என்றால் கம்புடன் வீதியில் இறங்குவது அல்ல.  அதற்குத் தற்காப்பு சொல்லிக் கொடுங்கள்.  சரியென்று பட்டதை நேரடியாகப் பேசக் கற்றுக் கொடுங்கள்.  அது அவர்களின் வாழ்க்கை முறை மீதான புதிய தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுக்கும். வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை நீங்கள் எப்படிச் சமாளித்தீர்கள் என்பதை சொல்லிக் கொடுங்கள்.  இதன் மூலம் காதலைப் பற்றிய புரிதலையும் அவர்களுக்கு அளிக்க முடியும்.  தற்கொலைகளில் பெரும்பங்கு வகிக்கும் பிரச்சினை இது.  சுயமரியாதையை சொல்லிக் கொடுப்பது, அவர்களுக்குத் தன்னையும், மற்றவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க கற்றுக் கொடுப்பதோடு, வேண்டாமென உதறிவிட்டுப் செல்பவர்களின் பின்னால் ஒருதலைக்காதல் என்று அலைவதைத் தவிர்க்க உதவுகிறது.

அன்பு காட்ட கற்றுக் கொடுங்கள்.  நாம் அடிக்கடி கடைகளில் சிலரை கவனித்திருப்போம்.  ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி அங்கு சுற்றும் தெரு நாய்களுக்குப் போட்டுவிட்டு செல்வார்கள்.  சிலர் வீட்டின் மீது பறவை சாப்பிட நெல்லும், தண்ணீரும் வைத்திருப்பார்கள்.  இப்பொழுது சாப்பிடப் பிடிக்காமல் கொட்டுவது தவிர, எந்தப் பிள்ளையும் அப்படிச் செய்வதாக தோன்றுவதில்லை.  உங்கள் பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்துங்கள்.  மிருகங்கள் சில வேளைகளில் பெற்றோரை விட, விரைவாகக் குழந்தைகளை சமாதானப்படுத்தி விடுகிறது.  தன்னையறியாமலே இது போன்ற குழந்தைகளின் பொறுப்புணர்வு அதிகரிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணுங்கள்.

எல்லாம் சரி, நான் வளர்ந்தவன், வேலை இல்லாப் பட்டதாரி, விவசாயி என்று சொல்பவர்களுக்கெல்லாம், ஓட்டுப் போட சொல்லிக் கொடுங்கள்.  தலைமை, விசுவாசம், மதம், ஜாதி இதனைத் தாண்டி நமது காரியத்தை எப்படிச் சாதிப்பது என்று சொல்லிக் கொடுங்கள்.  மக்களுக்கான அரசை எப்படி மக்களுக்கான அரசாகவே வைத்திருப்பது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தால் 51% வாக்களித்த மக்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால் அந்த அரசியல்வாதி பதவி விலக வேண்டும் என்று எழுதிக் கூட வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், வோட்டுப் போடக் காசு மட்டும் வாங்காமல் இருந்தால், உங்கள் பிரச்சினைகள் தானே தீரும்போது, இதைப் போல நூறு மடங்கு சம்பாதிக்க முடியும் என்பதை உணருங்கள்.  மக்கள் அரசு, மக்கள் அரசாகவே இருந்தால் போதும் நாம் போராடாமல் பிழைப்பு பார்க்க போகலாம் என்பதை ஆழமாகப் பதியுங்கள்.

உலகில் அனைத்து பிரச்சினைகளுக்குமே ஒரு மாற்று வழி இல்லாமல் இருக்காது.  தலையில் சுடப்பட்டும் இன்றும் உலகில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சிறுமி மலாலா, சிறையிலேயே ஏறக்குறைய வாழ்நாளையே கழித்த நெல்சன் மண்டேலா – இப்படி எந்த நாடு, எந்தத் தேசத்தை எடுத்தாலும், கண்ணில் படக்கூடிய நம்பிக்கை சரித்திரங்கள் ஏராளம்… அவர்களைக் கொண்டு மதங்களைத் தவிர்த்து, பிள்ளைகளுக்கு மனிதம் சொல்லிக் கொடுப்போம்… 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top