Timeless

தொலைஞ்சு போன ஒரு பொருள் மீண்டும் திரும்ப கிடைச்சா எவ்வளவு சந்தோசமா இருக்கும்! இங்க அப்படித்தாங்க ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கு!

Jun 08 2021 04:45:00 PM

ஒரு பொருளை தொலைத்துவிட்டு தேடுவது எல்லோருக்கும் இருக்கும் ஒரு பழக்கம் தான். வேலைப்பளுவின் காரணமாக பலருக்கும் மறதி அதிகரித்து வருகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் தொலைத்த பொருள் சீக்கிரமே கிடைத்து விடுகிறது. இப்படிப்பட்டவர்களை நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் கூற வேண்டும். இங்கிலாந்தில் ஒரு பெண்ணுக்கும் இப்படித்தான் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

missing-laptop

டையஸி மோரீஸ் என்ற பெண் ஒருவர் ரயிலில் பயணித்து கொண்டிருந்தார். அவர் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு ரயிலில் பயணம் செய்துள்ளார். எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து இறங்கும் சமயத்தில் தனது லேப்டாப்பை தொலைத்து விட்டார். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் அவர் புகார் அளித்துள்ளார். அவரிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்ட ரயில் நிலைய அதிகாரி அதுபற்றி தகவல் தெரிவிக்க 7 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.

missing-laptop

ஆனால் லேப்டாப்பில் வேலை செய்து வரும் அவருக்கு உடனடியாக அது தேவைப்பட்டது. லேப்டாப் கிடைக்கவில்லை என்றால் புதிதாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும் என்ற நிலைமையில் அவர் இருந்தார். இந்த இக்கட்டான நேரத்தில் தான் நிகாத் என்பவர் டையஸி மோரீசை தொடர்பு கொண்டு அவருடைய லேப்டாப் தன்னிடம் இருப்பதாகவும் அதை திருப்பி தர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

missing-laptop

தொலைந்து போன லேப்டாப்பில் தனது பெயரை முன் பக்கத்தில் எழுதியிருந்தார் டையஸி மோரீஸ். அவர் புதிதாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்துள்ளார். அவரது பெயரை கூகுளில் தேடிப்பார்த்து அவரின் விவரங்களை சேகரித்து தெரிந்துகொண்ட நிகாத் என்ற இளைஞர் சரியான நேரத்தில் மோரீசை தொடர்பு கொண்டு பேசி அவரது லேப்டாப்பை திரும்ப அவரிடமே ஒப்படைத்துள்ளார்.

missing-laptop

தனது லேப்டாப்பை திரும்ப கொடுத்ததற்காக நன்றி தெரிவித்த மோரீஸ் அதற்கு பிரதிபலனாக ஏதாவது செய்யவேண்டுமா என்று கேட்டுள்ளார். இது சாதாரண விஷயம் தான். இதற்கு ஏன் பிரதிபலன் என்று பெருந்தன்மையாக கூறிவிட்டு சென்றுள்ளார் நிகாத். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நிகாத் என்ற அந்த இளைஞரின் பெருந்தன்மை மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றை புகழ்ந்து எழுதியிருக்கிறார் டையஸி மோரீஸ்.