FOREST FIRE: குமரியில் 600 மரங்கள் எரிந்த விவகாரம்!!! வனத்துறை ஊழியர் காரணம்!!!
  • 20:11PM Feb 08,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:11PM Feb 08,2019 Chennai

குமரியில் உள்ள மருந்துவாழ்மலை, தெக்குமலை, சுங்கான்கடை மலைப்பகுதி, செண்பகராமன்புதூர், சீதப்பால், தெள்ளாந்தி, இறச்சகுளம், திடல், காட்டுப்புதூர், கடுக்கரை ஆகிய மலைப்பகுதிக்குள் கடந்த 2 ஆண்டாக கால் நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கு வனத்துறையினர் தடை விதித்து விட்டனர். வன பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் 3 நாள் அரசு ரப்பர் கழகம், பரளியாறு டிவிசனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 4 வயதான ரப்பர் மரக்கன்றுகள் எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த தீ விபத்துக்கு யார் காரணம்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. வனத்துறை மற்றும் அரசு ரப்பர் கழக உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர்ந்து பெய்த மழையால், அனைத்து மலைகளிலும் புற்கள் பெரும் புதர்களாக வளர்ந்து நிற்கின்றன.

பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் வனத்துறை தீ தடுப்பு காவலர்களால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புற்களை ஒரே நேர்கோட்டில் வெட்டி, அதனை தீ வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் ஒரு வேளை தீ பரவாமல், காட்டில் உள்ள மரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பரளியாறு டிவிசன் பகுதியிலும், இதுபோன்று வனப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைக்கப்பட்ட தீயை முறையாக அணைக்காமல் விட்டதால், அது அரசு ரப்பர் கழக கூப்பில் பரவியிருக்கலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அரசு ரப்பர் கழகத்தில் தற்போது எரிந்துள்ள மரங்கள் 4 வயதானவை. இங்கு முதலாம் ஆண்டு ரப்பர் கழகம் மரங்களை வளர்த்து விட்டு, அதன் பிறகு ஊடுபயிரிட வளர்க்கும் தனியாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஆனால் ஊடுபயிர் வளர்த்தவர்கள், பலனை எடுத்துவிட்டு, களைகளை அகற்றாததால் பெரும் புதர்களாக ரப்பர் மரங்களிடையே வளர்ந்து நிற்கின்றன.

தீ தடுப்பு நடவடிக்கையாக, ரப்பர் கழகமும், தங்களது எல்கையில், பள்ளங்களை வெட்டி, வனத்தில் ஏற்படும் தீயில் இருந்து ரப்பர் மரங்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த கூலியை இதுபோன்ற பணியில் ஈடுபடும் தற்காலிக பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ளதால், இந்த பணிக்கு யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. எனவே ரப்பர் மரங்கள் எரிந்து சாம்பலாக ரப்பர் கழக மற்றும் வனத்துறை ஊழியர்கள் காரணமாக இருக்கலாம் என்ற புகாரையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இதற்கிடையே அரசு ரப்பர் கழக அதிகாரிகள் தரப்பில், தீ விபத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள கீரிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் உண்மை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையே நேற்று இரவு கீரிப்பாறை - காளிகேசம் இடையே 4 இடங்களில் சாலையோரம் நின்ற ரப்பர் மரங்கள் திடீரென தீ பற்றி எரிந்தது. சாலையோரம் என்பதால், உLனடியாக தீ அணைக்கப்பட்டது.

இதில் 500 முதல் 600 மரங்கள் வரை எரிந்த சாம்பலானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து  ரப்பர் கழகம் மற்றும் வனத்துறை விசாரணையில், வனத்துறையை சேர்ந்த வேட்டை  தடுப்பு காவலர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ரப்பர் கழகத்தில் பணியாற்றி  வருகிறார். அவருக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாம். ஏற்கனவே பார்த்து வந்த பணியை விட தற்போதைய பணி கடினம் என்பதால், வேட்டை தடுப்பு காவலர் ரப்பர் கழக அதிகாரிகள் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதன் விளைவாக நேற்றிரவு 4 இடங்களில் தீ வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ஊழியர் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும்போது பொதுவாக பயந்து ஓடுவதால், தீயில் சிக்கி இறக்க நேரிடும். மாறாக தீ வரும் திசைக்கு எதிராக தீயை வைப்பதால், மனிதர்கள் இருக்கும் பகுதியில் தீ பிடிக்க காரணமாக உள்ள சருகுகள் எரிந்து சாம்பல் ஆவதால் அந்த பகுதியில் வேகமாக வரும் காட்டுத் தீ பரவாது. ஒரு வேளை காயம் ஏற்பட்டாலும் லேசான காயங்களே ஏற்படும் எனவும் வன தீ தடுப்பு காவலர்கள் தகவல் தெரிவித்தனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top