இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. கடமைக்கு நானும் ஹீரோ என்று நடிக்காமல் தரமான கதைகளை கொண்ட படங்களாக தேடித்தேடி நடிப்பவர். நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன், அண்ணாதுரை, சைத்தான் என்று தனது படங்களுக்கு வித்தியாசமான பெயரை வைப்பது அவருடைய ஸ்டைல். பிச்சைக்காரன் படம் மூலம் அவருடைய நடிப்பு மற்றும் மார்க்கெட் வசூல் தென்னிந்திய அளவில் பேசப்பட்டது.
அந்த வகையில் அவருடைய அடுத்த படமான கோடியில் ஒருவன் படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் ஈர்க்க வைத்துள்ளது. இந்த படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ட்ரைலரை பார்க்கும் போது பக்கா அரசியல் பேசும் படமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் ட்ரைலர் மிரட்டுகிறது.
இந்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா இந்த படத்தில் நடித்துள்ளார். சுல்தான் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் கே.ஜி.எப் புகழ் ராமச்சந்திர ராஜு நடித்துள்ளார். விரைவில் படம் வெளியாக இருப்பதாக ட்ரைலரில் தெரிவித்துள்ளனர். விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன் படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது கோடியில் ஒருவன் படத்தின் டிரைலரும் பட்டையை கிளப்பி வருகிறது. இதுமட்டுமல்லாமல் காக்கி, அக்னி சிறகுகள், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.