குழந்தைகளும் விளையாட்டுகளும்…
  • 13:08PM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:08PM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

குழந்தைகள் விளையாடுவதைக் கண்காணித்து, அதனைக் கண்ட்ரோல் செய்யும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.  குழந்தைகள் விளையாடுவது தன்னிச்சை செயல் போலத் தெரிந்தாலும், உண்மையில் இயற்கை அவர்களை இந்த உலகின் சூழ்நிலைகேற்பத் தயார் செய்யும் ஒரு ப்ராசஸ் இந்த விளையாட்டு.  உங்களுக்குத் தெரியுமா, உலகில் ஒன்றை ஒன்று கொல்லும் தன்மையுள்ள விலங்குகள் கூட, விளையாட்டினால் நண்பர்களாக இருப்பதற்கு ஏகப்பட்ட சான்றுகள் இருக்கின்றன.  விஞ்ஞானிகள் அது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தன்னிச்சையாக ஏற்படும் உணர்வு என்றும், எதிரே இருக்கும் விலங்கு விளையாட அழைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் எல்லா விலங்கிற்குமே உண்டு என்றும் சொல்கின்றனர்.

       ஐந்தறிவு பெற்ற விலங்குகளுக்க விளையாட்டு தன்னிச்சை மற்றும் உடல் தகுதிக்கான பயிற்சி எனும் போது மனிதக் குழந்தைகளுக்கு அவை அவசியமா இல்லையா??? மண்ணில் விளையாடும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்புத் திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன.  அதே போல மரங்களின் கிளைகளில், குரங்குகளைப் போல் விளையாடும் பிள்ளைகளின் கைகள் அதிக நீளமுடையதாகவும், அதிக பலம் வாய்ந்ததாகவும் இருக்கின்றன.  இப்படி குழந்தைகள் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டின் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.  ஓடி விளையாடும் குழந்தை அடிபட்டுத்தான் வலியையும் அதைத் தாங்குவது எப்படி என்பதையும் கூடக் கற்றுக் கொள்கிறது.

       பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அதீத பாசம், அவர்களுக்கே எதிராக வினையாக மாறிவிடக் கூடாது.  எனக்குத் தெரிந்து அக்கா, தங்கையுடன் ஓடி விளையாடிய ஆண்கள் பெண்கள் விஷயத்தில் நல்லவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.  நாம் அடிபட்டு விடக் கூடாது, ஆண் பெண் சேர்ந்து விளையாடக் கூடாது என்று நூறு கண்டிசன் போட்டு இவர்கள் இயற்கையாகவே கற்றுக் கொள்ளும் விஷயங்களைக் கூட கவுன்சிலிங் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையை நாமே உருவாக்கி விடக் கூடாது.  உண்மையில் வயதானாலும் மனதளவில் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கு மழையில் நனைவதென்றால் பிடித்தமான விஷயமாக இருக்கும்.

       இது எல்லாவற்றுக்கும் மேலாக, வீடு, பெற்றோர் என நினைக்கும் போதே அந்தப் பிள்ளைக்கு நல்ல நினைவுகள் நிறைய இருக்க வேண்டும்.   அப்பொழுதுதான் நாளை படித்து வேலைக்குப் போன பின்னே வீட்டை நினைத்துக் கொள்வான்.  அடிக்கடி திரும்பவும் வருவான்.  நல்ல நினைவுகள் எதுவுமே இல்லை என்ற பட்சத்தில், பிடிக்காததை நினைக்க மறுத்து உங்களைக் கூட ஒதுக்கும் நினைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குழந்தைகளை அவர்கள் இஷ்டப்படி விளையாட விடுங்கள். தோல்வி, ஏமாற்றம், வெற்றி, சமாதானம் என அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் அது அவனுக்கு.  முக்கியமாக வீட்டை விட்டு வெளியே நண்பர்களுடன் விளையாட விடுங்கள். தனிமைதான் இன்று உலகிலேயே அதிக நபர்களைக் கொல்லும் நோய் என்பது உங்கள் குழந்தைகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், உங்களுக்குத் தெரியும் அல்லவா???

       குழந்தைகளுடன் நல்லபடி விளையாடுங்கள்… எதற்குப் பிறந்தோம் என்று உங்களுக்கே புரியும்… 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top