மலிவாகிப் போன மனித உயிர்கள்…
  • 08:27AM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 08:27AM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

       இரண்டு நாட்களில் இரண்டு வீடியோக்கள்.  ஒன்று ஊரே கூடி வேடிக்கை பார்க்க, ஒருவனை இரண்டு பேர் பெரிய கட்டைகளைக் கொண்டு தலையிலேயே அடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவன் சுத்தமாக நினைவிழந்து விழுந்த பிறகுதான் மண்வெட்டியால் தலையைக் குறி பார்த்துத் தாக்கி உயிரைப் பறிக்கிறார்கள். வீடியோவின் முதல் காட்சியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம்.  இருப்பினும் வீடியோவின் பின்புலத்தில் எடிட் செய்து அருந்ததியில் தலையில் தேங்காய் உடைக்கும் போது வரும் பாடலைப் போட்டதால் மற்ற தகவல்கள் ஏதும் தெரியவில்லை. 

இரண்டாவது நேற்று பார்த்த ஒரு வீடியோ.  அதில் ராஜஸ்தானில், மண் குத்தியை (மண் வெட்டி அல்ல, இருபுறமும் கூராக இருக்கும் மண் குத்தி) ஏடுத்துக் கொண்டு வந்து ஒருவனைக் கொடூரமாக அதைக் கொண்டு விடாமல் தாக்கிக் கொண்டே இருக்கிறான்.  அடிபட்டவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவனை அப்படியே உயிரோடு கொளுத்தி விட்டு, கொடூரமாகக் கொலை செய்த குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி லவ் ஹிகாத்திற்கு எதிராக இதைச் செய்ததாகவும், இதைப் பார்க்கும் போது இனி எவனுக்கும் இப்படி ஒரு எண்ணம் வரக்கூடாது என்று அந்த வீடியோவிலேயே பேசியுமிருக்கிறான். இதில் உச்சகட்ட கொடுமை எண்ணவென்றால் இதில் கொலை செய்தவன், தான் செய்ததைப் படம் பிடிக்கச் சொல்லி, ஒரு ஹீரோ மாதிரி உடையணிந்து வந்ததுதான். 

இரண்டு வீடியோக்களுமே பெரும் பரபரப்பாகித் தற்போது, இரண்டாவது வீடியோவில் இருந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  ஆனால், அது வெளிப்படுத்திய தாக்கம் இன்னும் உள்ளுக்குள்ளே ஏதோ செய்து கொண்டிருப்பது உண்மை.  மாட்டுக்கறி உண்பதற்காக அடித்துக் கொல்வதில் துவங்கி, இந்த வீடியோ வரை இப்படிப் பலியான உயிர்கள் எத்தனை என்பது அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.  இது குறித்து Times Now தொலைக்காட்சியில் நேற்று நடந்த உரையாடலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர் தொடர்ச்சியாக லவ் ஹிகாத்திற்கு எதிராக இதெல்லாம் சகஜம் என்பது போலப் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. 

       முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்று தலையெடுத்த மத்திய அரசோ, இது குறித்து என்ன செய்கிறது என்ற கேள்விகள் பதிலில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.  அவர்களின் ஒரே வாதம், ஆர்எஸ்எஸ்காரர்களைக் கொல்ல ISIS பணம் கொடுக்கிறது என்பதுதான்.  அப்படியென்றால் மற்றவர்கள்??? கடைசியாக அந்தத் தொலைக்காட்சி விவாத மேடையில் அந்தத் தொகுப்பாளினி சொன்ன ஒரு விஷயம்தான் இப்போது ஞாபகம் வருகிறது. “இந்திய சட்டங்களின் படி எந்த மதத்தை சேர்ந்தவர்களும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் காதலிப்பது குற்றமில்லை… அதே இந்திய சட்டத்தின்படி வன்முறையைத் தூண்டுமாறு பேசுவது, உயிரைக் கொல்வது இவை தண்டனைக்குரிய குற்றம்… உங்கள் தேசப்பற்றை சட்டத்தினை மதிப்பதன் மூலமாகக் காட்டுங்கள்…”       

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top