கடலை போடுவது நல்லதா???
  • 09:43AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:43AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

 

ஆதி முதலே நமக்கு ஒரு குறிப்பிட்ட பருவத்தில் எதிர்பாலின ஈர்ப்பு ஏற்பட்டு, ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் பழகி வருகிறோம்.  தற்போது கடலை போடுவது எனக் கலாய்த்தாலும், எந்நேரமும் மொபைலில் சாட்டிங்கில் ஈடுபடுவது ஏறக்குறைய அனைவருமேதான்.  ஆண்கள் இதை வெளிப்படையாகச் செய்தாலும். பெண்கள் செய்வதேயில்லை என்றும் சொல்லிவிட முடியாது.  இது வெறும் ஆர்வமா அல்லது ஒரு அத்தியாவசியமான தேவையா என்பதை தற்போது பார்ப்போம்.

உளவியல் ரீதியாக :

உளவியல் ரீதியாகக் கடலை போடுவது ஒருவரின் தன்னம்பிக்கையையும், எதிர்கொள்ளும் திறனையும் வளர்க்கிறது.  மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்ற புரிதலை வளர்ப்பதில் பெரும்பங்கு இதற்கு உண்டு.  ஏமாற்றத்தினை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தையும், யாரும் சொல்லிக் கொடுக்காமலே மனிதர்களை எடை போடும் திறனும் இதனால் வளர்கிறது.

ஒருவேளை அதிகப்படியான கூச்சம் இருப்பினும், கற்பனையிலாவது கடலை போடுவது என்பது கண்டிப்பாக நடக்கும்.  இதன் காரணமாகவே மனிதன் உருவான நாளிலிருந்தே குறிப்பிட்ட பருவம் வந்ததும் தன்னை அறியாமலே இதை ஒரு தன்னிச்சை செயலாகச் செய்து வருகிறான்.  இனப்பெருக்கத்திற்கான ஆரம்ப கட்டமாக இதுவே விளங்குகிறது.  கோபப்பட முடியாத இடத்திலிருந்து வரும் நிறை, குறை விமர்சனங்கள்தான் ஏறக்குறைய அனைத்து மனிதர்களையுமே ஒரு சரியான பாதையில் இட்டுச் சென்றிருக்கின்றது.

என் மகனுக்கு எதுவும் தெரியாது, பெண்களைப் பார்த்தாலே பத்தடி தள்ளிப் போய்விடுவான் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுமானால், நீங்கள் ஒரு மிகச் சிறந்த ஏமாளியை, ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாதவனைத் தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே யதார்த்தம்.  அதே சமயம் எதில் தோற்றவனாயிருப்பினும் அவனைப் போராடி வெற்றிப் பெறச் செய்யும் தூண்டுதலும் கடலை போடுவதால் கிடைக்கும்.

உடல் ரீதியாக :

அட்ரினலின் எனும் திரவத்தை “தி லாஸ்ட் ரிசார்ட்” எனவும் நான் தைரியமாகக் குறிப்பிடுவேன்.  காரணம், சரியாக நடக்க முடியாத ஒருவனை சிங்கம் துரத்தும்போது அவனை ஓடச் செய்யும் வல்லமை படைத்தது இந்த அட்ரினலின்தான்.  கடலை போடுபவர்களுக்கு இது உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்கிறது.  இதன் பற்றாக்குறை அல்லது அதீத தேவைதான் கொடூரமான காட்சிகளைப் பார்ப்பது, கொடூரமான வீடியோகேம்கள், ப்ளூ வேல் உட்பட - விளையாடத் தோன்றுவது, வேகமாய் உயிரைப் பொருட்படுத்தாமல் வாகனத்தை ஓட்டச் சொல்வது எல்லாமே!!! 

அது மட்டுமல்லாமல், அந்த நேரத்தில் சுரக்கும் மற்ற சுரப்பிகள் மலட்டுத்தன்மையைக் குறைக்கும் ஆற்றல் பெற்றவையாக இருக்கும்.  அவை உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.  இதனாலேயே விடிய விடியக் கடலை போட்டாலும், அடுத்த நாள் அலுவலகத்தில் எதுவுமே நடக்காத மாதிரி செயல்பட முடிகிறது.  தூக்கமின்மை உடலுக்குக் கண்டிப்பாக நல்லதில்லை என்றாலும், அதனைச் சமாளிக்கும் ஆற்றலைத் தற்காலிகமாக இவை வழங்குகின்றன.

கடலை போடுவது நல்லதுதான் என்றாலும், நமது சமூக அமைப்பும் அதன் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளையும் மறந்து, அதையே வேலையாகக் கொண்டு சுற்றி சிக்கிக் கொண்டால் அதற்கு இந்தக் கட்டுரை எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பெற்றோர்கள் மன்னிக்கவும்!!!

 

  

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top