இந்தியாவில் செக்யூரிட்டி!!!
  • 12:58PM Nov 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 12:58PM Nov 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

பல்வேறு உலக நாடுகளில் செக்யூரிட்டி என்பது மிகவும் மதிப்பிற்குரிய ஒரு பதவியாகக் கருதப்படுகிறது.  ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை செக்யூரிட்டி கார்டுகளின் வேலை என்பது மிகக் கேவலமான ஒன்று.  நான் ஒரு செக்யூரிட்டி கார்டு, என் வேலையின் போது நடந்த சம்பவங்கள் இந்தக் கட்டுரை எழுதத் தூண்டியது.  ஒரு பெரிய நிறுவனத்தின் வணிக வளாகத்தில் செக்யூரிட்டி கார்டாகப் பணி புரிகிறேன்.  பணி நேரம் என்பது 12 மணி நேரம்.  லீவ் என்றால் சம்பளத்தில் பிடித்தம் செய்து விடுவார்கள்.  அதாவது, சாதாரணமாக நான்கு ஞாயிறும் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் 10,000 சம்பளத்தில் 1500 பிடித்தம் செய்து விடுவார்கள். இது போதாதென்று, EPF, PF போன்ற பிடித்தங்கள் போனால் கையில் மிஞ்சுவது வெறும் 7,000 சொச்சம் மட்டுமே, இதை சரிக்கட்ட வேண்டுமானால், OT போட வேண்டும்.  அதாவது, இங்கே 12 மணி நேர வேலை முடிந்து, வேறொரு இடத்தில் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு மீண்டும் ரெகுலர் டூட்டிக்கு வந்துவிட வேண்டும்.

ஒரு OT என்றால் விடாமல் 36 மணி நேர வேலை. பணி நேரத்தில் தூங்கவோ, அதிக நேரம் உட்கார்ந்திருக்கவோ முடியாது.  மீறித் தூங்கினால் அதற்கும் ஃபைன்.  சாப்பாடு கூட அந்த நேரங்களில் வெளியில் சாப்பிடுவதென்பதால் கணக்குப் போட்டுப் பார்த்தால் மாதம் 6,000 மிஞ்சினாலே பெரிய வருமானம்.  இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை பார்த்தால், வீடுகளாக இருந்தால் காய்கறி வாங்கி வருவது, பெரிய அலுவலகங்களில் சாப்பாடு வாங்கி வருவது எனக் கூடுதல் வேலை வேறு.  மழை நேரங்களில், ஒரு சிறிய கூண்டு போன்ற அறை மட்டுமே, நிற்கக் கூட உயரம் இல்லாத இடத்தில் மூன்று நான்கு பேர் சமாளித்தாக வேண்டும்.  வேண்டாம் என்றால் காட்டுவாசிகள் போலக் கிடைக்கும் இடத்தில்தான்.  வீட்டிற்கு வரும் போது நமக்குத் தெரியும் ஒரே உணர்ச்சி களைப்பு மட்டுமே.  சாப்பிட்டுச் சற்று நேரம் முடியும்போதுதான் தூக்கமே ஞாபகம் வரும்.  நாயை விடக் கேவலமான பிழைப்பு. சரி, வேறு வழியின்றி செய்தாலும் வரும் சில வாடிக்கையாளர்கள் ஏதாவது சொன்னாலே, “நீயெல்லாம் ஒரு ஆளுன்னு என்கிட்ட சொல்ல வந்துட்டே…” என்றுதான் முதலில் ஆரம்பிப்பார்கள். கைநீட்டி அடிப்பவர்கள் கூட உண்டு.

நினைத்தால் திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது.  ஆனால், புகாரென்று அலுவலகத்திற்குப் போனால், நியாயம் என்ன என்று கேள்வி கூட வராது.  நேரடியாக மன்னிப்பு கேட்கச் சொல்லி நம் மேல் நடவடிக்கை வேறு.  தெரியாமல்தான் கேட்கிறேன், நாங்கள் வெளியே தூங்காமல் இருப்பதால்தானே நீங்கள் உங்கள் பொருட்களை வைத்துக் கொண்டு பத்திரமாக வீட்டினுள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.  உங்களுடைய சொந்த விரோதத்தில் உங்களின் வீடு புகுந்து யாரேனும் தாக்க முற்பட்டால், அதற்குச் சம்பந்தமே இல்லாமல் முதல் பலி ஆவது நாங்கள் தானே.  இப்படி உங்களையும், உங்கள் பொருட்களையும் பத்திரமாகப் பாதுகாக்கும் எங்களுக்குத் தேவை என்ன???

இத்தனை கஷ்டங்களையும் தாண்டி வேலை செய்து வரும் எங்களுக்கு நீங்கள் அள்ளிக் கூட கொடுக்க வேண்டாம், குறைந்த பட்சம் மனிதனாகவாவது நடத்தலாமே… சுயமரியாதை எங்களுக்கும் உண்டென்ற புரிதல் தவிரப் பெரிதாக என்ன தேவைப்படுகிறது எங்களுக்கு??? பணம் OT மூலமாகக் கூட சம்பாதித்துவிட முடியும்.  ஆனால், இழந்த மரியாதை???  ஒரு வேளை நாளை வணிக வளாகத்தில் ஏதேனும் நபர் வன்முறையில் ஈடுபட்டால், நாம் காப்பாற்ற வேண்டும் என்று சிந்திக்கவா, அல்லது காப்பாற்றினாலும் நிர்வாகம் நம்மை ஆதரிக்காது.   பேசாமல் ஒதுங்கி விடலாம் என்று எண்ணத் தோன்றுமா??? அனைத்துத் தரப்பினரும் மிதிக்க நாங்கள் என்ன மிதியடிகளா??? இனியேனும் சிந்தியுங்கள்…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top