உண்மையான காதலைத் தெரிந்து கொள்வது எப்படி???
  • 23:12PM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 23:12PM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

தற்போதைய இளவட்டங்களின் பிரச்சினையே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பதுதான்.  ஆனாலும், அவர்கள் தாங்கள் தெரிந்து கொண்டதாக நினைக்கும் விஷயங்கள் பெரும்பாலும் திரைப்படங்களைப் பார்த்தும், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்தவற்றைப் பார்த்துமே என்பதுதான் வருத்தத்திற்குரியது.  தங்களைப் பற்றிய சரியான புரிதல் தாண்டி, மற்றொருவரின் புரிதலையும் வேண்டும் காதலில் இந்த அணுகுமுறைதான் குறுகிய கால திருமண வாழ்க்கை, கள்ளத் தொடர்பு என்று வளர்ந்து கொண்டே போய் இன்று கொலை செய்வது வரை வந்து நிற்கிறது.  உங்கள் காதல் அல்லது உங்களை விரும்புபவரின் காதல் உண்மையானதா என்று தெரிந்து கொள்வது எப்படி?

சுய புரிதல். 

இதில் இரண்டு பக்கத்திலிருப்பவர்களுமே தங்களைப் பற்றி எத்தனைத் தூரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.  உங்களுக்கு உங்களைப் பற்றியே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் காதல் வெறும் உடல் கவர்ச்சி எனப்படும் இன்பாக்சுவேசன்தான்.  உங்கள் மனதுக்கு எப்படிப்பட்ட பெண் பிடிக்கும், எந்த மாதிரியான பெண்ணுடன் உங்களால் ஒத்துப் போக முடியும், உங்கள் குடும்பத்திற்கு எந்தக் குணங்கள் சரிப்பட்டு வரும் என்பது போன்ற விஷயங்களை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே அதைப் போன்ற ஒரு பெண்ணைப் பார்க்கும் போது உங்களுக்குள் காதல் உணர்வு தோன்றும்.  கண்டதும் காதல் வெற்றியடையும் ஒரே சாத்தியம் இதுதான்.

பாதுகாப்பு உணர்வு.

இது இருவருக்கும் மிக முக்கியம். தற்போது காதலித்துக் கொண்டிருக்கும் எவரைக் கேட்டாலும் தான் காதலிக்கும் நபரைப் பற்றிய சிறு பதட்டம் இருப்பதைக் காண முடியும்.  காரணம், எதிரே உள்ளவர்கள் நம்மைப் பற்றி நினைக்கும் நினைப்பு.  காதல் முதலில் தோன்றுவதே இந்தப் பாதுகாப்பு உணர்வு காரணமாகத்தான்.  பின்னர் போகப் போக எப்படிக் குறையும்???  சிறு சிறு சண்டைகளின்போது கூட ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதுகாப்பு உணர்வைக் குறைக்கத் தொடங்குகிறது.  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  வேற ஒருத்தியைப் பார்த்தால் கொன்று விடுவேன் என்று நினைப்பது சினிமாவுக்கும், பொஸஸிவ்னெசுக்கும் வேண்டுமானால் சரியாக வரலாம்.  பிரபஞ்ச விதிகளின் படி கொன்று விடுவேன் என்பதன் எண்ண பாதிப்புதான் அதிகமாகப் பாதிக்கும்.  இது அடுத்தவருக்கு ஏனென்று தெரியாமலே பதட்டத்தை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பு உணர்வு குறைவதால் கம்போர்ட் ஜோன் குறைந்து விடும்.

பிரிவினை உணர்தல்.

Missingness. இதுதான் காலங்காலமாக காதலிப்பவரின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உணர்வு.  யாருடன் வாழ்க்கை என்பதைத் தீர்மானிப்பதல்ல காதல், ஆனால், யாரில்லாமல் வாழ முடியாதோ அவர்களுடன் ஏற்படுவதுதான் காதல் என்றொரு வாசகம் இதற்குச் சரிவரப் பொருந்தும்.  காதல் ஜோடிகளோ, தம்பதியினரோ பிரிவுக்குப் பிறகு மிகவும் அதிகமாக காதல் வயப்படுவது இதனால்தான்.  இது உங்களுக்குள் காதல் வந்ததான அறிகுறியே தவிர, அது உண்மையானதா என்பதன் அளவுகோல் அல்ல.  அடுத்தவர் அதே அளவு உங்களை மிஸ் செய்திருக்கும் பட்சத்தில், உங்கள் காதல் நிச்சயமாக உண்மையானதுதான்.

உடல் மொழி.

காதல் என்றால் படபடப்பு நிச்சயம் இருக்கும். எனக்குத் தெரிந்த பெண்கள் காதலன் அருகில் இருக்கும் போது வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போலத் தோன்றுவதாகக் கூறுவர்.  ஆண்களுக்குப் புளியைப் கரைத்தாற் போல ஒரு உணர்வு ஏற்படும்.  நிற்க. இது உடல் கவர்ச்சி.  பருவ வயதில் உடல் தனக்கான தேவையையும், அதற்கான சூழ்நிலை ஏற்படும் எனக் கருதும் பட்சத்தில் இது ஏற்படும்.  உண்மையான காதலாக இருக்கும் பட்சத்தில் படபடப்பு நெஞ்சில் ஏற்படும்.  தினமும் சந்திக்கும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில், காய்ச்சல் அடிப்பது போன்ற உணர்வு எல்லாம் உடலில் உள்ள இரசாயன மாற்றம் காரணமாக ஏற்படுவது.  மனதில் ஏற்படும் படபடப்புதான் இரசாயன மாற்றம் தாண்டி உண்மையான உணர்வுத் தூண்டலினால் ஏற்படுவது.

நம்பிக்கை.

சிவபெருமானை முன்பின் பார்க்காத பார்வதி நாரதரிடம் வரும் ஒவ்வொரு கடவுளாகப் பார்த்து இவரா, இவரா என்று கேட்டுக் கொண்டிருந்தாராம்.  சிவபெருமான் அப்போது அங்கு வர, தன்னையறியாமல் பார்வதி வெட்கத்தால் தலை குனிந்ததாகச் சொல்லுவர்.  நம் மனதில் இருக்கும் உள் உணர்வு உண்மையைத் தானே அடையாளம் கண்டுகொள்ளும்.  யாராவது ஒருவர் பால் இப்படி ஒரு உணர்வு ஏற்படும். அதுதான் உண்மை.  கேள்விகளோ, சந்தேகங்களோ துளி கூட இருக்காது, ஏற்படவும் செய்யாது.  இவள்தான் உன் மனைவி என்றோ, இவன்தான் உன் கணவன் என்றோ அடித்துச் சொல்லிவிடும்.

சுதந்திரம்.

காதல் கட்டுப்பாடுகளற்றது.  அது தன்னிடம் காதல் வயப்பட்டிருக்கும் அடுத்த உயிரையும் தன்னைப் போலவே சிறகடித்துப் பறக்க அனுமதிக்கும்.  உங்கள் சுதந்திரம் உங்கள் காதலரால் புரிந்து கொள்ளப்பட்டால் நிச்சயமாக அவர் உங்களைப் போலவே உங்கள் மீது உண்மையான காதல் கொண்டிருக்கிறார்.  அவர் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் உங்களுக்கான சுதந்திரம், அது பாழாகாத வரை அந்தக் காதலை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. 

மேலே கூறிய அனைத்துமே உங்களிடம் இருந்தால் – வாழ்த்துகள்… உங்கள் காதல் நிஜமாகவே உண்மையானது.  உங்கள் காதலர் உங்கள் மீது இதே போன்ற காதலுடன் இருக்கிறார்களா என்று தெரியாவிட்டால் கவலையை விடுங்கள்.  உங்கள் காதல் மீது நம்பிக்கை வையுங்கள்.  அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கான காதலைக் கொண்டு வந்து சேர்க்கும்.

என்னது, பொஸஸிவ்நெஸ்ஸா??? அது சொந்தம் கொண்டாடுவது.  கிடைக்காத பட்சத்தில் காயப்படுத்தத் தயங்காது.  அடுத்தவர் சொந்தம் கொண்டாட, நாமோ நம் காதலோ என்றைக்குமே அடிமைகளல்ல… நமக்கிருக்கும் ஒரே வேலை, உண்மையான காதல் வரும் வரை காத்திருப்பதுதான்.   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top