விளம்பரங்களில் கலாய்க்கப்படும் மனித உழைப்பு…
  • 13:33PM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:33PM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

சமீபத்தில் வரும் சில விளம்பரங்கள் தங்கள் பொருளின் தரத்தை மேம்படுத்திக் கூறுவதாக நினைத்துக் கொண்டு, இயந்திரங்கள் இல்லாத காலத்தில் இருந்து அதை உருவாக்கி வரும் மனிதர்களையும் அவர்கள் செயல்முறைகள் தரமற்றதாக இருப்பதைப் போலவும், சுகாதாரக் கேட்டினை உருவாக்குவது போன்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்த முனைகின்றனர்.  இது பொருளின் நம்பகத் தண்மையை விளக்குவதைக் காட்டிலும் மனிதர்கள் தவறு செய்வார்கள் என்ற கூற்றை மக்களிடையே பரப்பும் விதமாக உள்ளது வருத்தமளிக்கிறது.

உங்களுக்கென சில குறிப்புகள். மர வேலைகளில் பழைய முறைகள் அதிக வலுவுள்ளதா அல்லது தற்போது உள்ளவை வலுவுள்ளதா என்பதை சோதித்துப் பாருங்கள். என்ன செய்தாலும் ஒரு இயந்திரம் தனக்கிடப்பட்ட பணிகளை மட்டுமே செய்யுமே ஒழிய. அந்த மரத்தின் தண்மை, அடி மரமா, கிளை மரமா, வலு இவற்றையெல்லாம் மனிதனால் மட்டுமே செய்ய இயலும்.  சில நேரங்களில் சமைக்கும் போது அருவருப்பான செய்கைகள், குழம்பில் தும்முவது போன்ற காட்சிப்படுத்துதலையும் பார்க்க நேர்கிறது. 

உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே பணத்தின் அடிமைகள் அல்ல.  கோவையில் உள்ள சாந்தி கேண்டீன் தன் லாபத்தில் மக்களுக்குச் சலுகை விலையில் உணவளித்து வருகிறார்கள் பல காலமாக.  தரமான சாப்பாடு 120 ரூபாயில் மட்டுமே கிடைக்கும் என்ற மாய வலையில் நிறையப் பேர் விழுகிறார்கள்.  வக்கம்பாளையம் பிரியாணி என்று பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு வயதான தம்பதி 60 ரூபாய்க்கு விற்ற பிரியாணியை, அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கும் மேம்பட்ட தரத்திலும், சுவையிலும் வெறும் 15 ரூபாய்க்கு அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அளித்தார்கள். (பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் இவர்கள் பிரியாணி வெகு பிரபலம்). 

இன்றும் வேளச்சேரியில், ஒரு வயதான பாட்டி எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடு, இந்தச் சாப்பாட்டுக்கு அம்மாக்கு என்ன குடுத்துட்டுப் போகனும்னு நினைக்கறியோ குடுத்துட்டு போ என்று சொல்லி, மூக்குப் பிடிக்க சாப்பிட்ட பின் எவ்வளவு வற்புறுத்தினாலும் 50 ரூபாய்க்கு மேல் வாங்காத அந்தப் பெண்மணியும், கண்டிப்பாக பணத்திற்காக வேலை செய்பவர்கள் இல்லை.  அம்மாவின் இத்தனை வருடச் சமையலில் எப்படி ஒருபோதும் குறையிருக்காதோ அதே போல், இவர்களின் உணவுத் தரத்திற்கும் கண்டிப்பாகக் குறையிருக்காது. உண்மையில் வருத்தப்பட வேண்டியது, கஸ்டமர்களை பணம் பண்ணும் மெஷினாக எண்ணும் கடைகளைப் பற்றித்தான்.

இயந்திரமயமாக்குதல் உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமாகப் பொருட்களின் விலையை நியாயமாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதிகரிக்கும் காரணம்??? இதைக் கூட யோசிக்காத மக்கள், இவற்றையெல்லாம் மூடத்தனமாக நம்புவதால் மட்டுமே.  மனித உழைப்பைக் கேவலப்படுத்துவது, வேலை செய்யும் ஒவ்வொரு நபரையும் கேவலப்படுத்துவது போல… நான் செல்லும் இடங்களிலெல்லாம் குடும்பமாக பாவித்து வேலைகளைச் செய்து கொடுத்த பல குரல்களை இன்று காணவில்லை.

உங்கள் வீட்டில் எப்படியோ, என் பிள்ளைகள் வளரும் வேளையில் இதைப் போல ஒன்றிரண்டு குரலையாவது அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காகவாவது, இனியும் இது போன்ற மனித உழைப்பைக் கேவலப்படுத்துவதைத் தவிருங்கள்…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top