MURDER: மனைவியை கொலை செய்து வீசிவிட்டு மது அருந்தித் தூங்கிய கணவன்!!!
  • 15:36PM Dec 05,2018 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:36PM Dec 05,2018 Chennai

வாழ்க்கையில் தவறு செய்வது யதார்த்தம்தான். அந்தத் தவறுகளே வாழ்க்கையானால் அப்புறம் வாழ்க்கையே பிரச்சினைதான். சமூகத்தில் எந்த நிலையில் இருக்கும் மனிதருக்கும் இது பொதுவான ஒன்றுதான். அப்படித்தான் பொன்னேரி பக்கத்திலிருக்கும் காவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாத்து மேய்க்கும் அருள் சோனியா, சூர்யா என்ற அக்காள் தங்கையைத் திருமணம் செய்து தலா இரண்டு குழந்தைகள் பெற்றிருக்கிறார். இது போதாதென்று கூட்டுக் குடும்பமாக வேறு வசித்து வருகிறார்கள். சோனியா கணவனுடன் வாத்து மேய்க்கும் வேலையில் ஈடுபட்டு வர, தங்கையும் இரண்டாவது மனைவியுமான சூர்யாவோ அருகில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பொன்னேரியில் இருந்து பழவேற்காடு செல்லும் தனியார் பஸ் டிரைவருடன் சோனியாவுக்கு நெருக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக அருளுக்கும், சோனியாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அருள், சோனியாவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த அலறல் சத்தத்துடன் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த சோனியா, சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இறந்த மனைவியின் உடலை மறைப்பதற்காகக் கோணியில் மூட்டையாக கட்டி, அருகில் உள்ள மடிமை கண்டிகை ஏரியில் வீசி விட்டார் அருள்.  பின்னர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு எதுவும் தெரியாதது போன்று வீட்டில் தூங்கியும் இருக்கிறார்.

மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சூர்யா, ரத்தக்கறை படிந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, விசாரிக்க அக்கா சோனியாவைத் தேடி, காணவில்லை என்றதும் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று உணர்ந்து, பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வீட்டில் படுத்திருந்த அருளை எழுப்பி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். நள்ளிரவில் போதை தெளிந்ததும், மனைவியை அடித்துக் கொலை செய்து ஏரியில் உடலை வீசியதை அருள் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அருளை அழைத்து கொண்டு ஏரிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு, கோணியில் கிடந்த சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோபம் என்னவோ ஒரு நொடிதான். இரண்டு மனைவிகளைக் கட்டி நான்கு குழந்தைகளுக்குத் தகப்பனான இவருக்கு ஏற்பட்ட கோபம், இரண்டு பிள்ளைகளை அனாதைகளாக்கியதோடு இல்லாமல், இரண்டாவது மனைவியையும், இரண்டு பிள்ளைகளையும் வேறு தவிக்க விட்டுவிட்டுச் சென்று விட்டனர். இனி சிறையில் கிடந்து வெளியே வரும்போது எதுவும் மிச்சமிருக்கப் போவதில்லை. நான் எப்படி வேணும்னாலும் திரிவேன், என் பொண்டாட்டி பத்தினியாத்தான் இருக்கனும் என்று நினைக்கும் ஆண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்!!!

You Might Also Like These
Related Stories
Top