#Privacy : எக்காரணத்தை கொண்டும் உங்கள் அந்தரங்கத்தை படமாக்காதீர்கள் - கசியும் மர்மம் : கதறும் பெண்கள்!
  • 16:35PM May 03,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:35PM May 03,2019 India

பேஸ்புக்கில் உலாவி கொண்டிருந்த நண்பருக்கு திடீரென்று தூக்கி வாரிப் போடுகிறது. உடனே தங்கையை நோக்கி ஓடுகிறார். அதை பார்த்த அடுத்த நொடியே தங்கைக்கும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. எப்படி இது நடந்திருக்கும்..? எங்கிருந்து போயிருக்கும் என்று இருவருக்குள்ளும் குழப்பம். குடும்பத்திடம் சொன்னால் பெரிய பிரளயமே வெடித்து விடும். முதலில் காரணத்தை கண்டறிந்து பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கின்றனர். பெண்கள் தொடர்பான ஒரு பேஸ்புக் பக்கத்தில் அவரது தங்கையின் புகைப்படத்தை போட்டு, 'என்ன பிடிச்சிருக்கா..? இந்த போஸ்ட் ஷேர் பண்ணி, கமெண்ட் பண்ணா என் மொபைல் நம்பர் கிடைக்கும்' என்று போடப்பட்டிருக்கிறது. அதுவே இத்தனை குழப்பத்திற்கும் காரணம்.

இத்தனைக்கும் அவரது தங்கை முகநூலில் ஒருமுறை கூட புகைப்படம் போட்டது கிடையாது. அதுவும் இல்லாமல், முகநூல் பக்கமும் அடிக்கடி வந்தது கிடையாது. ஸ்மார்ட் போன் வாங்கியே ஒரு மாதம் தான் ஆகிறது. அதற்கு முன்னர் வெறும் பட்டன் போன் தான் அப்படி இருந்தும், போட்டோ எப்படி பேஸ்புக் போயிருக்கும் என்று பயங்கர குழப்பம். அதன் பிறகு சங்கிலி தொடர் போல, ஒன்றன் பின் ஒன்றாக நடந்ததை யோசித்து பார்த்துள்ளனர். மொபைல வேற எதாச்சும் பண்ணியா என்று நண்பர் கேட்க, அவரது தங்கை கடையில் கூட இதுவரை கொடுத்தது கிடையாது என்று கூறியிருக்கிறார்.

சரி நல்லா யோசிச்சு பாரு என்று சொல்லும் போது தான் இடையில் ஒரு துப்பு கிடைக்கிறது. ஒரு சில வாரத்திற்கு முன்பு ஏதோ ஒரு பெயர் தெரியாத எண்ணில் இருந்து கால் வந்திருக்கிறது. அட்டென்ட் பண்ணியவுடன், பேசுவதற்குள் கட் ஆகி விட்டது. சரி தெரிந்தவர்கள் யாராவதாக இருக்கும். பிறகு விசாரித்து பெயர் கேட்டு கொள்ளலாம் என்று பெயர் குறிப்பிடாமல், அந்த நம்பரை பதிவு செய்து வைத்துள்ளார். இதில் தான்  ஆரம்பித்திருக்கிறது பிரச்சனை. வாட்ஸ்ஆப்பில் ப்ரோபைல் பிக்சர் வைக்கும் போது, நமது போட்டோ நமக்கு தெரிந்தவர்களை மீறி வெளியில் சென்று விடக்கூடாது என்று, privacy ஆப்சனில் saved contacts only என்று கொடுத்திருப்போம். அதிலும் சில முகம் தெரியாத எண்கள் எல்லாம் இருக்கும் என்று நண்பரின் தங்கை அறியாமல் விட்டுவிட்டார்.

விளைவு, நண்பரின் தங்கையும் ஒரு எண்ணை சேமித்து வைத்துள்ளார். எதிர் முனையில் மிஸ்ட் கால் கொடுத்தவனும் சேமித்து வைத்திருக்கிறார். அதனால் புகைப்படம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. அது அப்படியே பரவி முகநூல் வரைக்கும் சென்றுள்ளது. இப்படித்தான் பல புகைப்படங்கள் வேறு வேறு விதத்தில் எங்காவது கசிந்து கொண்டே இருக்கிறது. நினைவுகளை சுமக்கும் புகைப்படங்கள் எடுக்கலாம். ஆனால் அளவுக்கு மிஞ்சிய ஆர்வத்தில் அந்தரங்க புகைப்படமும் எடுத்து விடுகின்றனர் பலர். அதனை தவிர்த்து தொழில்நுட்பத்தை அதற்கான வேலைக்கு மட்டும் பயன்படுத்தினாலே பாதி குற்றங்களை குறைக்கலாம்.

Share This Story

முருகானந்தம்

Top