பெண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
 • 14:49PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 14:49PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தைகள் என்றாலே ஜாக்கிரதையாகத்தான் கையாள வேண்டி இருக்கிறது.  அந்தளவு அனைத்துக் குழந்தைகளின் மேல் வக்கிரம் பிடித்தவர்களின் பார்வை விழுந்து கொண்டேதான் இருக்கிறது.  இருப்பினும், பெண்கள் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அதிகம் பாதிப்புக்குள்ளாவதால், இன்றைய காலகட்டத்தில் தனிக் கவனம் எடுத்து அவர்களை வளர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், வக்கிரம் பிடித்தவர்களின் பார்வை ஒரே மாதிரித்தான் படுகிறது அவர்கள் மீது…

 1. குழந்தைகளைப் பிரியமாக வளர்க்க வேண்டியதுதான், இருப்பினும் உலகம் தெரிந்தவர்களாக வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். 
 2. அளவாகக் கண்டியுங்கள்.  உங்கள் கண்டிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்களிடம் தனக்கு நேரும் எதையும் சொல்லும் தைரியம் அவளுக்கு இருக்காது.
 3. எல்லாச் சூழ்நிலையிலும் உங்களால் கூடச் சென்று வந்து கொண்டு இருக்க முடியாது.  தற்காப்பு பயிற்சியளியுங்கள்.
 4. ஆண்களில் பெரும்பாலானோர் உறவுகளுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். வயதிற்கேற்ப அண்ணா, அங்கிள் போன்ற வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்த சொல்லிக் கொடுங்கள். 
 5. குட் டச், பேட் டச் என்றால் என்ன என்பதைத் தாய் மூலமாக முறையாக புரிய வையுங்கள்.  அப்படி யாராவது பேட் டச் செய்தால், உடனே அங்கிருந்து என்ன சொல்லி வெளியே வருவது என்பதையும் சொல்லிக் கொடுங்கள். தற்காப்பு தெரிந்திருந்தால் அதனைப் பயன்படுத்தி எப்படித் தப்பிப்பது என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
 6. ஒருவேளை உங்கள் பெண் வந்து இந்த விஷயத்தைச் சொல்லும் போது பதற்றமடைவது, அவளைத் திட்டுவது அவளுக்கு அடுத்த முறை உங்களிடம் இதைச் சொல்லக் கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.  அவள் பாதிக்கப்பட்டவள்.  காயத்திற்குக் கோபத்தால் மருந்து போட முடியாது.  சொன்னதற்காக பாராட்டுங்கள். முழுமையாகத் தெரிந்து கொண்டு பிரச்சினையின் தீவிரம் தெரிந்து காவல்துறைக்குச்  செல்வதா வேண்டாமா என்று முடிவெடுங்கள்.  தீவிரமாக இருந்தால் கண்டிப்பாகச் செல்லுங்கள்.
 7. தந்தையுடன் அதிகமாக விளையாடி மகிழும் பெண்கள் பெரும்பாலும் வளர்ந்த பிறகு காதல் போன்ற விஷயங்களில் அதிகமாகச் சிக்குவதில்லை.  ஆண்கள் விஷயத்தில் மிகவும் தெளிவான முடிவெடுப்பவர்களாகவும், குடும்பத்தை முதன்மையாக நினைப்பவர்களாகவும் இருப்பார்கள். தந்தை அதிகமாகப் பெண் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவது மிக அவசியம்.
 8. முடிவெடுக்கச் சொல்லிக் கொடுங்கள்.  எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்களிலும் உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்க இயலாது. இருப்பினும், நல்லது, கெட்டது இரண்டையும் எப்படி ஆலோசித்து முடிவெடுப்பது என்பதைக் கற்றுக் கொடுங்கள்.  உங்களிடம் சொல்ல முடியாத பிரச்சினைகளில் கூட, நீங்கள் சொல்லிக் கொடுத்ததைப் பயன்படுத்தி முடிவெடுக்க அவளாகவே பழகிக் கொள்வாள். இன்னொரு விஷயம், ஸ்திரமான முடிவெடுக்கும் பெண்கள் விஷயத்தில் ஆண்கள் மிக ஜாக்கிரதையாகவே இருப்பார்கள்.  அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் பாதியாகக் குறையும்.
 9. நல்ல ட்யூஷன், பீஸ் கம்மி போன்ற காரணங்களுக்காக இரவு நேரங்களில் நெடுந்தொலைவு அனுப்பாதீர்கள்.  இது வீட்டில் இருக்கும் நேரத்தைக் கெடுப்பதுடன், பாதிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகளையும் அதிகப்படுத்தி விடும்.
 10. அடிக்கொரு முறை ஆண்கள் அனைவருமே கெட்டவர்கள் அல்ல என்பதைப் பதிய வையுங்கள்.  எந்தவிதமான எதிர்மறை நிகழ்வும் வாழ்க்கையில் நடக்காத பெண்கள் கூட, இந்தத் தவறான புரிதலினால் திருமணம் ஆன வேகத்திலேயே விவாகரத்து கேட்டு படியேறியதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
 11. உங்கள் ரொமான்ஸில் அவளுக்கும் இடம் கொடுங்கள். அளவாக இருக்கட்டும்.  ஆண், பெண் அன்பு பாசம் என்பதைப் பற்றிய புரிதலைக் கொடுங்கள்.  தாய் தந்தையின் இடையே அன்பைப் பார்த்து வளரும் பெண்கள் குடும்பத்தின் மீது அதிகப் பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள்.
 12. விருப்பட்டதைப் படிக்க, செய்ய அனுமதியுங்கள்.  பிள்ளைகளின் திறமையை ஊக்கப்படுத்துவதுதான் பெற்றோரான நம் கடமை. உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்தால், அவள் வாழ்க்கையில் நிச்சயமாக நிம்மதியாக இருப்பாள்.
 13. தேவையான நேரத்தில், தேவைப்படும் அளவுக்கு பாலியல் கல்வியைத் தாய் நிச்சயம் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். பருவமடையும் முன்னே அதைப் பற்றிய அறிவு அவளுக்கு எவ்வளவு தேவையாக இருக்கும் என்பதை யோசியுங்கள். அதே போலத்தான் மற்றவையும்.
 14. அவள் முடிவுகளை மதியுங்கள்.  காதல் என்று வந்தால் பதட்டப்படாமல், முறையாக அணுகுங்கள்.  நடக்கும் என்றால் ஏன், நடக்காது என்றால் ஏன் - இரண்டையும் புரிய வையுங்கள்.  முடிவை அவளிடமே விட்டு விடுங்கள். நீங்கள் எப்போதும் அவளுக்குத் துணையாக இருப்பீர்கள் என்பதையும் புரிய வையுங்கள்.
 15. பழி வாங்குவது, பொறாமை போன்ற உணர்வுகளும், பொய் சொல்லுவது, வார்த்தைகளால் காயப்படுத்துவது இரண்டையும் மறந்து போய்க் கூட அனுமதிக்காதீர்கள். 

இதில் எத்தனை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்தாலே, பெண் தவறு செய்தால் அதற்கு யார் காரணம் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.  இதற்கு மேல் சொல்லிக் கொடுப்பதும், கொடுக்காததும் உங்கள் இஷ்டம்.     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top