ஹிந்தித் திணிப்பு எனும் பொருளாதார மோசடி!!!
  • 09:04AM Oct 23,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:04AM Oct 23,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஹிந்தித் திணிப்பு என்பது இதுநாள் வரையிலும் ஒரு உணர்வு அல்லது உரிமைப் போராட்டமாகத்தான் பார்க்கப்பட்டிருக்கிறது.  நிஜமாகவே ஹிந்தித் திணிப்பு என்பது அவை மட்டும்தானா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அதன் பின்னால் உள்ள பெரிய பொருளாதார மோசடி பற்றி அறியாமலேயே நாம் ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கறோம்.  எப்படி என்று பார்க்கும் முன் ஹிந்தியைப் பற்றிக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

நாம் காலம்காலமாக படித்து வந்த, படித்துக் கொண்டிருக்கிற ஒரு மிகப் பெரிய வரலாற்றுப் பொய் ஹிந்தி நமது தேசிய மொழி என்பது.  உண்மையிலேயே இதற்கான அரசாணையோ, கெசட்டோ இன்றுவரை வெளியிடப்படவில்லை. உண்மையில் அப்படி ஒரு அரசாணையே கிடையாது. (நன்றி : விக்கிபீடியா…) அப்படியென்றால் ஹிந்தி என்பது என்ன? அது இந்தியாவின் அலுவலக மொழி.  அவ்வளவுதான். அதிலும் ஒரு சின்ன குளறுபடி இருக்கறது.  வெள்ளைக்காரர்கள் பெரும்பாலான ஆட்சி கொல்கத்தாவிலுள்ள விக்டாரியா பேலஸிலேயே நடந்திருக்கிறது.  கடைசி சில காலம் மட்டுமே ஆட்சி தில்லிக்கு மாறியது.  அப்படியிருக்க நியாயமாக, பெங்காலி மொழிதானே அலுவலக மொழியாக இருந்திருக்க வேண்டும்??? ஹிந்தி ஆனதெப்படி??? சுதந்திர போராட்ட காலத்தில் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களின் மொழி ஹிந்தி அல்லது உருது (முகம்மது அலி ஜின்னா போன்றோர்) ஆக இருந்திருந்த ஒரே காரணத்தாலும், தேவநகரி எனப்படும் தேவபாஷையின் எழுத்து வடிவமாக பயன்பட்டிருக்கற காரணங்களால் மட்டுமே ஹிந்தி அலுவல் மொழியாக மாறியது. 

சரி, இதில் பொருளாதார மோசடி எங்கு வந்தது??? ஹிந்தி படிப்பதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் இந்தியாவில் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று பல்வேறு பரப்புரைகள் இருந்தாலும், நாம் கண்கூடாகப் பார்ப்பது என்னவென்றால் நம்மில் 80 சதவீதம் இருந்த ஊரை விட்டுக் கூட மாறாமல் தொழில் செய்திருக்கிறோம்.  ஆனால், மற்ற மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வெளி மாநிலங்களில்தான் வேலை செய்கிறார்கள்.  காரணம்??? தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டி மிகப் பிரபலமாக, அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு துறையை வைத்து விளக்க முயற்சிக்கிறேன்.

திரைத்துறை.  சற்று கவணித்தீர்களானால் திரைத்துறையின் துவக்கம் 1913 ம் ஆண்டு வெளியிடப்பட்ட ராஜா ஹரிஷ்சந்த்ரா. தாதா சாகிப் பால்கே இயக்கிய இந்த மௌனப் படம்தான் இன்றைய இந்திய சினிமாவின் முதல் படி.  நமது தமிழ்த் துறையின் முதல்படி என்பது நடராஜ முதலியார் இயக்கிய கீசக வதம். முதல் பேசும்படம் பம்பாயில் 1931 ல் தயாரிக்கப்பட்ட உருது மொழிப்படம் ஆலம் ஆரா. தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானதும் அதே 1931ல்தான்.  அப்படியென்றால் 90 கள் வரை திடீரென்று ஹிந்தி திரைத்துறையின் அதீதமான வளர்ச்சிக்கு காரணம் என்ன தெரியும்??? ஹிந்தித் திணிப்பு. இன்று தென்னகத்தின் திரைப்படங்களைத் தவிர மற்ற எத்தனை மொழித் திரைப்படங்களை நாம் அறிந்திருக்கறோம்??? ஹிந்தி தவிர்த்து??? மராத்தி அதுவும் சினிமா பைத்தியங்களாக இருக்கும் வரையில். பெங்காலி சில படங்கள்… வேறு???

திரைத்துறை மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களிலும், துறைகளிலும் வெள்ளைக்காரர்களைப் போலவே சந்தையை விரிவாக்கும் ஒரு முயற்சியாகவே ஹிந்தி திணிக்கப்பட்டது.  திணிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.  படிப்பு சரியாக ஏறாமல் அல்லது படிக்காமல் தொழில் செய்யும் எவராலும் புதிதாய் ஒரு மொழியை சரிவர சுலபமாய் படிக்க முடியாது என்ற ஒரே காரணத்தாலே ஹிந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. (அந்தக் காலகட்டத்தில் அப்படிப்பட்டோர் எண்ணிக்க கிட்டதட்ட 70 சதவீதம்) முதலில் எடுக்கப்பட்ட இரண்டு படங்களில் ஒன்று மராத்தி, ஒன்று உருது. ஹிந்தி எங்கிருந்து, எப்போதிருந்து கோலேச்ச ஆரம்பித்தது என்பது புரிந்தால் போதும் மற்றது தானாகப் புரியும். 

எதிர்த்துப் போராடியதால்தான் நமது திரைத்துறையும், தொழில்துறையும் தனித்தண்மை- யுடையதாக இருக்கறது.  சரி, தவறு என்று யோசித்தால் மட்டுமே மற்ற அனைத்து மாநிலங்களின் திரைத்துறையையும் தன் வசம் வைத்திருக்கும் ஹிந்தித் திரைத்துறையோடு போட்டி போட முடிகிறது.  நம்மைச் சுற்றி இருந்த காரணத்தாலே அண்டை மாநிலங்களும் அந்தளவுக்கு வளர்ந்து வருகிறார்கள்.  தொழில்கள் அனைத்தும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்களில் அதிகமாக இருக்கின்றது. 

நான் என்றுமே ஒரு மொழியை அறிவதற்கு எதிரியல்ல, எனக்கும் ஹிந்தி தெரியும்.  ஆனால், அதைக் காரணம் காட்டி என் கைகள் கட்டப்படுவதையோ, பொருளாதாரம் சுரண்டப் படுவதையோ ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஹிந்தி படித்தால் பெருவாழ்வு வாழலாம் என இனியும் எவரேனும் சொல்வார்களானால் - சற்று தென் மாநிலங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களையும் - அதன் வாழ்க்கை முறையையும், வளர்ச்சியையும் பார்த்துவிட்டு வந்து பேசுங்கள் என்றுதான் பரிந்துரைக்க வேண்டியிருக்கும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top