மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றத்தின் அருமையான யோசனை..??
  • 13:22PM Feb 08,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 13:22PM Feb 08,2019 Chennai

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு வலியுறுத்தியுள்ளது. கிராமசபைக் கூட்டங்களைக் கூட்டி, அதில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினால், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடச் செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. இந்த யோசனை மிகவும் வரவேற்கத்தக்கது என மருத்துவரும் பா.ம.க நிறுவனருமான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்த இவரது விரிவான அறிக்கை.,

மதுக்கடைகளில் மதுவிற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிட வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநலவழக்கை விசாரித்த நீதிபதிகள்,‘‘ மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும்’’ என்று கவலையுடன் கூறியுள்ளனர். மதுவைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகளைப் பட்டியலிட்ட நீதிபதிகள், மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது மிகவும் சிறப்பான யோசனை என்பது மட்டுமின்றி, இதையே தான் பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது என்பதையும் நினைவூட்டுகிறேன்.

மராட்டிய மாநிலத்தில் ‘1949ஆம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்கு சட்டத்தின்’படி மதுவிற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகரிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25% பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப்பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. இதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

மதுவின் தீமைகள் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். நோய்களால் பாதிக்கப்பட்டும், விபத்துகளில் சிக்கியும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதால் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன; இளம் விதவைகள் உருவாகின்றனர். கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகிறார்கள் என்ற நிலை மாறி, பள்ளிக்கூட குழந்தைகளும் மதுவுக்கு அடிமையாகின்றனர்; பல குழந்தைகள் பள்ளிகளில் வகுப்பறைகளிலேயே மது அருந்தி சிக்கிக் கொண்ட செய்திகள் அடிக்கடி வெளியாவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலை விரைவிலேயே மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

மதுக்கடைகளை மட்டும் நம்பியிருக்காமல் வருவாய்க்கு வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. மதுக்கடைகளை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடு செய்ய ஏராளமான யோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி நிழல் நிதிநிலை அறிக்கைகளில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கான மாற்று மதுவிலக்குக் கொள்கை என்ற ஆவணத்தில் மதுவிலக்கை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

மதுக்கடைகள் தமிழகத்திற்கான வருவாய் ஆதாரங்கள் என்பதே மாயை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். மதுவிற்பனை மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், மதுவால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய ரூ.180 கோடி செலவாகிறது என ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு இவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் மது அரக்கனை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு; அது அரசின் கடமையும் ஆகும்.

எனவே, மக்கள் விருப்பப்படி மதுக்கடைகளை மூட வசதியாக, கிராமசபைகளில் வாக்கெடுப்பு நடத்தி மதுக்கடைகளை மூட வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும். அதற்கெல்லாம் மேலாக ஒரே கட்டமாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தால் அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் என கூறியுள்ளார்.

 

Share This Story

You Might Also Like These
Related Stories
Top