சுட்டெரிக்கும் கோடை வெயில் ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளவில்லை என்றால் பல நோய்கள் நம்மை தாக்கும். கோடை வெப்பத்தை சமாளிக்க பெரியவர்கள் நமக்கு கூறும் நெறிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இறைச்சி, சீஸ் கலந்த உணவுகளை கோடையில் குறைத்து கொள்ளவேண்டும். உங்களை குளிர்ச்சியாக உணர வைக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். தர்பூசணி, ஆப்பிள், பேரீச்சம்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். கீரைகள், கொத்தமல்லி, தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் கோடையில் அதிக உடற்பயிற்சி செய்யாமல் அளவாக செய்வது நல்லது.
சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். நேரம் தவறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் வரக்கூடும். வெப்பத்தை தடுக்க குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் தோன்றினால் மோர், இளநீர் இவற்றை குடியுங்கள். பழச்சாறு குடிக்கலாம். ஆனால் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் வாட்டர் போன்றவை குடிக்க கூடாது. இவை செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று வலி உண்டாக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் உடல் உஷ்ணம் குறையும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது கோடை வெயிலுக்கு ஏற்றது.