அதிரடி ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்.
  • 14:31PM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:31PM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

       தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத காட்சியாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் திடீர் திடீர் என்று ராஜா நகர்வலம் கிளம்புவது போலக் கிளம்பி விடுகிறார்.  யார் கேட்டாலும் தனது கடமையைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டு அவர் குமரிக்குச் சென்று மக்களிடம் மொத்தமாக வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் வேறு கதை.  எதற்காக இப்படிச் செய்கிறார் ஆளுநர்? அனைத்துக் கட்சியினரும் தங்கள் வேலை மற்றும் உரிமையில் ஆளுநர் தலையிடுவதாகப் புகார் தெரிவித்தும், தொடரும் காரணமென்ன?

       இவர் மட்டுமல்ல புதுவை ஆளுநர் கிரண்பேடியும் இதே பாணியைப் பின்பற்றுவதுதான் சந்தேகத்திற்குரியது. தமிழகத்தைக் கைப்பற்றும் நோக்கில் நிரம்பவே தமிழ் ரீமேக் படங்களைப் பார்ப்பார்கள் போல இருக்கிறது, இவர்களின் ஆக்‌ஷன் பார்முலா. பிச்சைக்காரன் - Demonetisation துவங்கி இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையுமே பழசிலிருந்து புதிதாக வந்த தமிழ் அரசியல் படங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. ஹீரோ ஊருக்கு நல்லது செய்ய, ஊருக்குள் தானே நேரடியாக வந்து, அதனைப் பார்த்து பொதுமக்கள் மெய்சிலிர்ப்பதெல்லாம் ரொம்பப் பழைய டெக்னிக்.  அப்துல் கலாம், ஒரு பிரபலமாக மக்களைச் சந்தித்தார், குறிப்பாக இளைஞர்களை… அவரைப் போலவே பார்முலா வைத்திருந்தால் போதும் மக்கள் நம்பி விடுவார்கள் என்பது எந்தக் காலக் கணிப்போ தெரியவில்லை…

       ஆளுநர் சென்று வருவதற்கு என்று சில ப்ரோட்டோகால் (நடைமுறை) உண்டு. அதெல்லாம் முறையாகப் பாதுகாக்கப்படுகிறதா என்பது குறித்து தகவல் இல்லை.  குமரியைப் பொறுத்தவரை, முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் வேளையில் ஆளங்கட்சிக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு அமைச்சருடன் மக்களைச் சந்திக்கச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? பழைய சினிமா பாணியில் சென்று பார்த்தால் மட்டும் போதுமா என்று கேட்டால் மக்களை மேலும் கொபப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  காரணம், முதலமைச்சரை எதிர்பார்க்காமல் ஆளுநர் செயல்படத் தயாராக இருந்தால், குஜராத், லட்சத் தீவு போன்ற இடங்களில் தஞ்சமடைந்திருக்கும் மீனவர்களுக்கு தேவையானவற்றைச் செய்துவிட்டு அவர்களுடன் சென்றிருந்தால் சரி.

       ஒருபுறம் பிற மாநிலங்களில் சிக்கிக் கொண்ட மீனவர்கள் கையில் காசு இல்லாமல், திரும்பி வர டீசல் இல்லாமல், வழித்தேவைக்கு உணவு இல்லாமல் வாட்ஸப்பில் ஷேர் செய்து காப்பாற்றக் கெஞ்சிக் கொண்டிருக்க அவர்களுக்கு எந்த உதவியும் வழங்காமலே அவர்கள் உறவினர்களைப் பார்க்கப் போவது என்பது நிச்சயமாக ஒரு ஹீரோ செய்யும் வேலை இல்லை.  அதுவும் குறிப்பாக அவர்கள் குஜராத் மாநிலத்தில் இருக்கும் போது நிச்சயமாக இரசிக்காது.  சினிமாவுக்கு மட்டுமே செட்டாகும் இந்த மொன்னை லாஜிக்குகளைத் தூக்கியெறிந்துவிட்டு, உங்களுக்கு மக்கள் மேலுள்ள அக்கறையைச் செயலில் காட்டுங்கள். அதுதான் உண்மையாக உங்கள் மீதுள்ள நம்பிக்கையை வளர்க்கும்.  முக்கியமாக பாஜக சார்பில் தான் நின்ற அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியுற்ற பன்வாரிலால் ப்ரோஹித் போன்றவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top