ஆறாயிரம் பேரை பலிகொண்ட பனிப்புகை மூட்டம் - உலகை மிரள வைக்கும் 5 நாட்கள் : தலைகீழ் மாற்றம்.!
  • 16:09PM Dec 05,2018 London
  • Likes
  • 0 Views
  • Shares

your image

 

1952 ஆம் ஆண்டு 5 நாட்களுக்கு நீடித்து, சுமார் ஆறாயிரம் பேர்வரை பலிகொண்ட, லண்டன் பெரும் பனிப்புகைமூட்டம் ஏற்பட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மூச்சுக்குழல் தொடர்புடைய உடல்நலக்குறைவுகளும் ஏற்பட்டன. முந்தைய நாளில் ஏற்பட்ட எதிர் புயலின் காரணமாக, வீசும் காற்று இல்லாத நிலையை ஏற்படுத்தியதுடன், வெப்பக் கவிழ்ப்பையும் ஏற்படுத்தி, குளிர்ந்த காற்றை, அடி வளிமண்டலத்திற்குக் கீழே தேங்கச் செய்தது.

தாழ்வழுத்த மண்டலம் என்பது புயல். அதற்கு மாறாக நிலவும், உயர்ந்த காற்றழுத்தம் எதிர் புயல் என்றழைக்கப்படுகிறது. வெப்பநிலை தலைகீழாக மாறுதல், நிலையான, உலர்ந்த குளிர் காற்று, இவற்றால் பனிமூட்டம் முதலானவை இதனால் உருவாகும். இந்தக் குளிரை எதிர்கொள்ள லண்டன் மக்கள் நிறைய நிலக்கரியை எரித்தனர்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், தரமான நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டதால், வீடுகளில் கனப்புக்குப் பயன்படுத்த கந்தகம் அதிகமாகக் கொண்ட, தரம் குறைந்த நிலக்கரியே பயன்படுத்தப்பட்டது. நிலக்கரியால் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஏராளமாக இருந்ததுடன், பழங்கால வாகனம் என்று, மின்சார டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு, டீசல் பேருந்துகள் புழக்கத்துக்கு வந்ததும் மாசுபாட்டை அதிகரித்திருந்தது.

1000 டன் புகைத்துகள்கள், 140 டன் ஹைட்ரோகுளோரிக் அமிலம், 14 டன் புளோரின் சேர்மங்கள், 800 டன் கந்தக அமிலத்தை உருவாக்கவல்ல 370 டன் கந்தக டை ஆக்சைட் ஆகியவை அக்காலத்து லண்டனில் ஒவ்வொரு நாளும் வெளியானதாக வளிமண்டல ஆய்வகம் பதிவு செய்துள்ளது.

காற்றிலிருந்த எண்ணெய்ப் பிசுக்குடன் கூடிய கரித்துகள்களால் மஞ்சள் கலந்த கருமை நிறத்தில் ஏற்பட்ட புகையும், பனியும் கலந்த மூட்டம், சில அடி தூரத்துக்குமேல் பார்க்க இயலாமல் செய்ததால், சமிக்ஞைகளைப் பார்க்க முடியாத நிலையில், சிறிய குண்டுகளை வெடித்து ரயில்களுக்கு சமிக்ஞைகள் செய்யப்பட்டது.

13 ஆம் நூற்றாண்டிலிருந்தே காற்று மாசு நிறைந்த நகராக லண்டன் இருந்திருந்தாலும், இவ்வளவு மோசமான நிலையைச் சந்தித்ததில்லை. உடனடியாக ‘1952இன் தூய காற்றுச்சட்டம்’ இயற்றப்பட்டு, மாசுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top