NEET-ன் முதல் இரத்தக் காவு – அனிதா!!!
  • 07:56AM Oct 03,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:56AM Oct 03,2017 Chennai, Tamil Nadu 600003, India

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற கேள்வி பதில்கள், அது நல்லதுதான் என்றெல்லாம் அனைவரும் மூச்சுமுட்ட பேசியவை அனைத்தும் சற்று அமிழ்ந்துதான் போயிற்று நேற்று – அனிதா…அரியலூர் மாவட்டத்தை, சார்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளுக்கு மருத்துவப் படிப்பெதற்கு என்று வழக்கம் போல் சட்டமும், வழக்கும், வழக்காடு மன்றங்களும், அரசுகளும் கூவிய கூச்சலில், கருகிப் போகும் வரை இந்தப் பட்டாம்பூச்சியின் கனவுகள் யாருக்குமே தெரியாமல் போனது. கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என சொல்லிக் கொள்ளும் சிலரின் முகப்புத்தகப் பதிவுகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய கதையாகிப் போனதுதான் உச்ச கட்டம்.

மருத்துவத்துறையின் மருத்துவர்கள் தரம் உயர்த்த என சப்பைக் கட்டு கட்டப்பட்டாலும், உ,பி யில் கோரக்பூரில் மரித்துப் போன 63 குழந்தைகள், சில நாட்களுக்கு முன் ஜோத்பூர் மருத்துவமனை அறுவை சிகிச்சை அறையில் சிசேரியன் செய்யும்போது சண்டையிட்டு, பிறந்த குழந்தையின் மரணத்திற்குக் காரணமான மருத்துவர்களைப் பார்ப்பதில்லையோ என்ற கேள்வி ஏழாமல் இல்லை.  அந்த அறுவை சிகிச்சை அறையில் உள்ள அனைவரது மொபைலும் ஆன் செய்யப்பட்டு, முழுமையான டேட்டா-வுடன் இருந்ததும், அதில் ஒரு மொபைலில் இந்தச் சண்டை பதிவு செய்யப்பட்டதும் (கிட்டத்தட்ட 30 மொபைல்கள்) தனிக்கதை.  பணத்துடன் படிக்க வரும் அனைவரின் ஒட்டுமொத்த தகுதியையும் பறைசாற்றும் இந்த நிகழ்வுகள் யாருக்குமே தெரிவதில்லையா???

சரி, அந்தக் கடவுளுக்கு நெருக்கமானவர்களின் வாதத்திற்கு வருவோம். 3 ஆண்டுகள் நீட் தேர்வு எழுதி பாஸாகி விடலாம் என்று ஒரு பதிவு.  மூட்டைத் தூக்கி தன் மகளை நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்த்து படிக்க வைக்குமளவுக்கா, உங்கள் நீட் பயிற்சி வகுப்புகளின் கட்டணங்கள் உள்ளது??? அல்லது அரசுதான் அவற்றை இலவசமாக சொல்லிக் கொடுக்குமா என்ன??? உறுதியாகக் கொடுக்காது… காரணம், சி.பி.எஸ்.சி கல்வி முறை வளர வேண்டும், அதன் மூலம் இந்தித் திணிப்பை திறம்படச் செய்ய வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம்.  அல்லது, ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் பணப்பிரச்னையை சரி செய்வதற்காக கூட இருக்கலாம்.  அரசு நீட் பயிற்சி வகுப்புகளைத் தானே ஏற்று இலவசமாக நடத்தாத வரையில் அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது, நினைக்கவும் தோன்றும்…

சி.பி.எஸ்.சி என்பது எந்த அடிப்படையில், அடிப்படைப் பாடத்திட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதிலில்லை.  ஒரு விதத்தில் ரிசர்வேசனுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே நீட் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழாமலில்லை.  இன்று ஏழைகள் ப்ரொபஷனல் கோர்ஸஸ் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்ற மாயையைக் கோர்ட்டும், மத்திய, மாநில அரசாங்கமும் உருவாக்கிவிட்டது.  கூடிய சீக்கிரம் கலந்தாய்வுகள் நிறம் மாறும்.  அப்பொழுது வர்ணாசிரமம் மீண்டும் தலை தூக்கும்… இறுதியாக, வேறு முகத்திரை அணிந்து, குலக்கல்வி என்பது அரசியலமைப்பின் ஆசியோடு அனைவரையும் அரவணைக்கும்… அனிதாக்களின் கனவுகள், முளைக்க கூட முடியாமல் கிள்ளி எறியப்படும்… மீறிக் கனவு காணும் அனிதாக்கள் இப்படித்தான் பொசுக்கப்படுவர்…

எழுமின்! விழிமின்!! 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top