காதலிக்கிறீர்களா??? செய்யக்கூடாதது என்ன???
 • 07:46AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 07:46AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்றைய தலைமுறையின் வேகம் அபரிதமாக இருக்கிறது.  வேகம் மட்டும் இன்றி, ஆர்வமும்… சுற்றி சுலபமாகக் கிடைக்கும் தொழில்நுட்பங்களால், காதல் இன்று சர்வ சாதாரணமாகப் போய்விட்டது.  எந்தளவுக்கு என்றால், “நாங்க லவ் பண்றோம், கல்யாணம் – தெரியலை…” என்று சொல்லி, அதை வேறு நவீன யுகத்தின் தெளிவு என்று விளம்பரப்படுத்தும் அளவுக்கு… ஒன்றை இழக்கும்வரை அதன் வலி என்ன என்று யாருக்கும் புரியாது.  நிறையப் பேர், “உண்மைக் காதல் என்னுடையது, ஆனால் எவனோ ஃப்ராடு பயலை லவ் பண்றா…” என்று புலம்புவதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது காதலிக்க மறுத்தால் கொலை என்ற ரீதியில் செல்லும் போது, சற்றே அனுபவ பதிவு இந்த விஷயத்தில் தேவை என்பதால் இதனை எழுத வேண்டியுள்ளது.

ஆண்களுக்கு:

 1. முதலில் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். “அவ என்னைத் தவிர எவனையாச்சும் பார்த்தா கூட…” போன்ற எண்ணங்கள் நேர் எதிர் விளைவையே ஏற்படுத்தும்.  பாதுகாப்பு உணர்வு யாரிடம் வருகிறதோ, அவர்களிடம் மட்டுமே ஒரு பெண் நட்பையோ, காதலையோ காட்டுவாள்.
 2. இல்லாத விஷயங்களைக் கூறி மடக்க முயற்சி செய்ய வேண்டாம். அம்பாணி பேரன், 10 லட்சம் பேங்க் பேலன்ஸ் எல்லாம் லவ் பண்றதுக்கு ஈசியா இருக்கலாம்.  ஆனால், திருமணத்திற்குப் பிறகு அதுவே தலைவலியாகக் கூட மாறும்.
 3. புரிதல் இல்லாத எந்த உறவுமே நிலைத்து நிற்காது.  அதிலும் காதலைப் பொறுத்தவரை புரிந்து கொண்டவர்களே நெடுநாள் இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள்.  எனவே, புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 
 4. நமக்கு எப்படி சுதந்திரம் தேவையோ, அதே போல் அவர்களுக்கும் தேவை என்று எண்ணுங்கள்.  Private Space என்பது அவளுக்கும் தேவை.  அவளும் நம்மைப் போல் உணர்வுள்ள சாதாரண மனுஷிதான் என்பதை நீங்கள் மதிக்கத் துவங்கினாலே, பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் முடிந்துவிடும்,
 5. காதலிக்கும் போது வேலை இருந்தால் தெரிவியுங்கள்.  அழைக்கும் போதெல்லாம் வேலையை விட்டுவிட்டுப் பேசுவது என்று நீங்கள் பழக்கப்படுத்தினால், அதுவே திருமணத்திற்கு பின் நீங்கள் முன்மாதிரி இல்லை என்ற எண்ணங்களைத் தோற்றுவிக்க கூடும். 
 6. நான் இப்படித்தான் என்பதைத் தெளிவாக சொல்வது நல்லது. நல்ல பையனாக நடிப்பது, சீக்கிரமே உங்கள் காதலுக்கு உலை வைத்து விடும். நம்பிக்கையைக் காப்பாற்றுவது ஒன்றே நீண்ட நாள் உங்கள் காதல் வாழ்வதற்கு இன்றியமையாதது.

பெண்களுக்கு:

 1. உறுதியாக இவன்தான் என்று முடிவான பின் மட்டுமே காதலை வெளிப்படுத்துங்கள்.
 2. பார்வையை கவனியுங்கள். நல்ல வளர்ப்பு கண்ணியம் இவற்றை ஒரு ஆணின் பார்வையிலேயே கண்டுபிடித்து விட முடியும்.
 3. உங்களுக்கு ஏற்றபடி இல்லையென்றால் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.  எனக்குத் தெரிந்து சிகரெட் பிடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த 95 சதவீதம் ஆண்கள், திருட்டுத்தனமாக தம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஒரு திருட்டுத்தனம் செய்யப் பழகினால், அது மேலும், மேலும் பல திருட்டுத்தனங்களுக்கு வழி வகுக்கக்கூடும். ஜாக்கிரதை.
 4. பெண்களுடன் பழகினால் நாகரீகமாகக் கண்காணியுங்கள்.  நீங்களாக மொபைலை நோண்டுவது, அடிக்கடி குத்திக் காட்டி பேசுவது என்பது நீங்களே ஐடியா கொடுத்தது போலாகிவிடும். 
 5. Personal Space-ஐ மதித்துப் பழகுங்கள்.  நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்காதீர்கள். ஏதாவது பிரச்சினை என்றால், நண்பர்களுடன் பேசும் ஆண்கள் சீக்கிரமே வெளிவந்து விடுகிறார்கள்.
 6. அவருக்கும் வேலை இருக்கும் என்பதை உணருங்கள்.  அளவாகப் பேசிக் கொண்ட எந்த உறவும் எப்போதும் கசக்காது, 24 மணி நேரமும் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால், நாளை திருமணத்திற்குப் பிறகு நீங்களும் அவருடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று மறவாதீர்கள்.
 7. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.  அவனுக்குப் பிடிக்கும் என்று சேலை அணிந்து, அதையே அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் – அது உங்களுக்கு சேலை மீது மட்டுமல்ல, அவன் மீதும் எரிச்சலை வரவழைக்கக் கூடும்.
 8. பொதுவான ஒன்று புரிந்து கொள்ளுதல்.  சரியாகப் புரிந்து கொண்ட எந்தக் காதலியையும், எந்த ஆணும் விட்டுக் கொடுக்கும் வாய்ப்பேயில்லை.
 9. உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். ஆண்கள் அதிகப்படியான பொறுப்புகளையும், சுதந்திரமின்மையும் மிகவும் வெறுப்பவர்கள்.  நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கட்டுப்படுத்த முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வெளியே தப்பிச் செல்ல மறைமுகமாக முயற்சி செய்து கொண்டேதான் இருப்பார்கள்..

இன்னும் பல விஷயங்கள் இருப்பினும், முக்கியமானவற்றின் தொகுப்பு இது. இதை மட்டும் கடைப்பிடித்துப் பாருங்கள். காதல் எவ்வளவு சுவையானது என இருவருமே புரிந்து கொள்வீர்கள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top