மணலும், நீர்வளமும்…
  • 14:06PM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:06PM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கை வளங்கள் மிக அதிகம்.  குறிப்பாக ஆறுகள்.  இன்று ஆற்று நீரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.  எத்தனை நீர் வந்தாலும் நமக்குப் போதவில்லை. ஒரு புறம் மழை பொய்த்து போவது என்ற நிலை. மறுபுறம் தேவையான நேரத்தில் வாங்க முடியாத அண்டை மாநில நீர் எனப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக, மிக முக்கியமாக விளங்கும் காரணம், மணல்.

மணலின் தன்மையை தெரிந்து கொள்வதற்கு முன் அவை ஏன் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு மிக அவசியமானது எனத் தெரியுமா??? காரணம் மணல் நீரை ஓரளவுக்கு மேல் உறிஞ்சாது. அப்படி உறிஞ்சும் நீரையும் தன்னுள்ளே வைத்து உடனடியாக காய விடாமல் மெதுவாகத்தான் காய விடும்.  குறிப்பிட்ட அளவு நீரை உறிஞ்சியபின் மணல் தண்ணீர் கடத்தி போல செயல்படத்துவங்கும். இதன் காரணமாகவே மணல் அதிகமுள்ள நீர் படுகைகளில் நீரின் ஓட்டம் தெளிவாகவும், வேகமாகவும் இருக்கும்.  தற்போது பெய்த மழையில் மெரினா கடற்கரையில் தேங்கிய தண்ணீர் சுத்தமாகக் கலங்காமல் இருந்ததன் இரகசியம் இதுதான்.  இதன் தன்மை வீடு கட்டும் பொழுது சிமெண்ட் கலவையை உடனடியாகக் காய விடுவதைத் தடுப்பதோடு, சுவர் எழுப்பிய பின் ஊற்றப்படும் நீரை உறிஞ்சி கான்கிரீட் கலவை மேலும் உறுதியாகவும் பிடிக்க உதவும்.  மணல் போல அரைக்கப்பட்ட கல் தூள் மணலைப் போல இல்லாததன் காரணம், மணலின் வடிவமைப்பு.

இப்படி அனைத்து விஷயங்களிலும் மிகச் சரியாக பொருந்துவதாலேயே கட்டிடம் கட்டுவதற்கு மணலை விடச் சிறந்த ஒரு மாற்றுப்பொருள் இன்றளவும் இல்லை.  இந்தத் தன்மைகளினாலேயே மணல் ஆற்றுப் படுகைகளின் மிகவும் அவசியமான ஒரு பொருளாகவே நாம் பார்க்கப் பழக வேண்டும். இதைப் புரிந்து கொண்ட பிற மாநிலங்கள் தங்கள் மண்வளத்திற்கு மாற்று ஏற்பாடுகள் தேடத் துவங்கிவிட்டனர்.  இன்று சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள ஆறுகளில் நினைத்தபடியெல்லாம் மணல் அள்ள முடியாது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று மணலை வாங்குகிறார்கள் என்றால் அதன் பின்னே என்ன உள்ளது என்பதை நாம் கவணிக்கத் தவறிவிட்டோம்.

சரி. மணல் இல்லாத ஆற்றுப்படுகை என்னவாகும்.  முதலில் மேலோட்டமாக ஆற்று நீரின் வேகம் பாதிக்கப்படும். இதனால் பாய வேண்டிய தூரம் குறையத் துவங்கும்.  தரை வரை தோண்டி மணல் எடுக்கப்பட்டிருந்தால், கீழே உள்ள மண் சகதியாகி, நீரையும் மாசுபடுத்தும்.  மேலும் மண் நீரை உறிஞ்சிக் கொண்டே இருக்கும். இது கிட்டத்தட்ட ஒரு ஓட்டை அண்டாவில் நீர் பிடிப்பதைப் போன்றதுதான்.  நீரின் ஓட்டம் இந்தத் துவாரத்தை பெரிதுபடுத்திக் கொண்டே போகும்.  ஆற்றுத் தலையின் அருகில் எடுக்கப்படும் மணல், நீரின் வழி வந்து மற்ற படுகைகளில். துணை வாய்க்கால்களில், கால்வாய்களில் தங்கும் வாய்ப்பு குறைகிறது.  இதனால், அண்டாவில் உள்ள ஓட்டை பெரிதாகிக் கொண்டே போவதுடன் சகதியும், மண்ணும் நீரை மாசுபடுத்தி பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல் மாற்றி விடுகிறது.

 

தமிழகத்தின் மொத்தத் தேவைகளுக்கும் வருடா வருடம் அணைக்கட்டுகளில் தேங்கும் மணலை அள்ளினாலே போதும்.  ஒரு பெரிய அணைக்கட்டில் வருடத்திற்கு ஏறத்தாழ 30 அடி ஆழத்திற்கு மணல் தேங்கும்.  இவற்றை அகற்றாமல் போவதால், தண்ணீர் பிடிப்பு பார்க்கப் பெரிதாகத் தெரிந்தாலும், உண்மையில் பற்றாக்குறையே… செலவு அதிகம் என்பதால் பெரும்பாலும் இந்தப் பக்கம் அரசு கவனம் கொள்வதே இல்லை… இதனால், தண்ணீர் பற்றாக்குறை மட்டுமன்றி, இருக்கும் நீரும் மாசடைந்து போகிறது. 

  இவை மீண்டும் அங்கும் இங்கும் சுற்றி நமது வீட்டிற்குள்ளேயே வந்தும் விட்டது. ஆற்று நீரை மோண்டு குடித்த காலமெல்லாம் போய், இன்று கேன் வாட்டர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். விவசாயத்திற்குத் தேவையான நீர் விவசாய நிலங்கள் அனைத்திற்கும் செல்வதே இல்லை. பூமி அதிகளவு நீரை உறிஞ்சுவதால், பருவத்தில் மழை பெய்யும் அளவிற்கு எவ்வளவு சுட்டெரித்தாலும், சூரியனால் நீரை மேகமாக மாற்ற முடிவதில்லை.  மொத்தத்தில், நீர் என்பது நமது பூமியின் இரத்தம் என்றால், மணல் என்பதுதான் இரத்த நாளமாக விளங்குகிறது.  அறுக்கவா, வேண்டாமா என்பது நமது கைகளில் மட்டும்தான் உள்ளது.         

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top