Exquisite

ஊத்துக்குளி வெண்ண.. ஈரோட்டு மஞ்சள் : மார்தட்டிக்கொள்ளும் கொங்கு மண்டல மக்கள் - தமிழகத்திற்கு கிடைத்த சிறப்பு கவுரவம்.!

Mar 08 2019 01:57:00 PM

your image

 

சென்னையில் இருந்து வந்தாலும் சரி, கோவையில் இருந்து வந்தாலும் சரி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வந்தாலும் சரி ஈரோடு மாநகரத்திற்குள் நுழைவதற்கு முன்னர் ஒரு மஞ்சள் கிடங்காவது கண்ணில் தென்பட்டிருக்கும். தொலைவில் இருந்து வரும் போதே மஞ்சள் நெடி மூக்கில் மெல்லே சைகை காட்டும். அன்றிலிருந்து இன்று வரை மஞ்சள் விளைச்சலிலும், விற்பனையிலும் கொடி கட்டி பறக்கிறது ஈரோடு. இதனாலேயே 'மஞ்சள் மாநகரம்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது.

மதுரை மல்லி, ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு, பண்ருட்டி பலாப்பழம், திருநெல்வேலி அல்வா என்று ஊர் ஊருக்கு ஒரு அடையாளம் இருப்பதை போல, ஈரோடு நகரத்திற்கு அடையாளம் கொடுத்தது இந்த மஞ்சள். எத்தனையோ முக அழகு பொருட்களும், அழகு சாதனங்களும் வந்து விட்டாலும், இன்று பெண்களின் இயற்கையான பியூட்டி பார்லராக விளங்குவது மஞ்சள் மட்டுமே. முகத்திற்கு மஞ்சள் பூசி, நெற்றியில் குங்குமம் வைத்தால் தெய்வ கடட்சமாக இருக்கும் பெண்களின் முகம்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு பாரம்பரியத்தை கட்டிக்காத்து வரும் ஊராக விளங்குகிறது ஈரோடு. போட்டிக்கு பல வடஇந்திய மாநிலங்கள் வந்துவிட்டாலும், ஈரோட்டில் மஞ்சளுக்கு நிர்ணயம் செய்யப்படும் விலை, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும். இந்த நிலையில் ஈரோட்டு மஞ்சளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தற்போது சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளையும் பொருளுக்கோ மத்திய அரசு, புவிசார் குறியீடு வழங்குகிறது. இந்நிலையில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

அதில் சங்க காலத்தில் இருந்து மஞ்சள் பயிரிடும் பழக்கம் தமிழகத்தில் இருந்து வருவதாகவும், மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள், ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியாக பயிரிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட புவிசார் குறியீடு பதிவுத்துறை, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்த்தை வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வைகான் மஞ்சள், ஒடிஷாவின் கந்தமால் மலை மஞ்சள் போன்றவற்றுக்கு  புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் விளையும் மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு கிடைப்பது இதுவே முதல்முறையாகும். இதனை போலவே தமிழகத்தில் 28 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

இதே போல ஊத்துக்குளி வெண்ணெய்யும் இப்பகுதியில் பெயரெடுத்த தனித்துவமாக பார்க்கப்படுகிறது. வறட்சி மிகுந்த ஊத்துக்குளி பகுதியில் மாட்டிற்கு பபுல் தட்டு கிடைக்கததால், இப்பகுதி விவசாயிகள் பிண்ணாக்கு அதிக அளவில் மாட்டுக்கு உணவாக கொடுப்பார்கள். அதனால் இயல்பாகவே இங்கு மாட்டில் இருந்து கறக்கப்படும் பாலில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனாலேயே இதிலிருந்து பெறப்படும் வெண்ணெய்யும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. இப்படி பல பெருமைகளை தன்னகத்தே கொண்டு, பண்பாட்டையும் கட்டிக்காத்து, தொழில்வளம் பெருகிய பூமியாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றன கொங்கு மண்டல மாவட்டங்கள்.