பிறருக்காக வாழாதே!!!
  • 10:43AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:43AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

பெரும்பாலும் அரை நூற்றாண்டை எட்டிவிட்ட எவரைக் கேட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியைத் திருப்தியில்லாமல் வாழ்ந்தது தெரிய வரும்.  காரணம். இவர்களில் பெரும்பாலானோர் அடுத்தவர்கள் சொன்னதற்காகவோ அல்லது யாரையோ திருப்திப்படுத்தவோ, வாழ்க்கையின் மிகமுக்கியமான முடிவுகளை எடுத்துவிட்டு அதற்காகப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதுதான்.  சமுதாயம் மாறுபட்ட கோட்பாடுகளை உடையது.  அதனைத் திருப்தி செய்கிறோம் என வாழத் துவங்கினால் கடைசியில், எல்லாம் இருந்தும் இல்லாத நிலைதான். 

திரைத்துறைதான் என் பயணம் என முடிவு செய்தவுடன் வேலையை உதறிவிட்டு அதற்கான வேலையில் இறங்கிவிட்டேன்.  மற்றவர்கள் என்னைக் கிண்டலாகப் பார்க்கும் பொழுது, என் மனைவி மட்டுமே புரிந்து கொண்டாள்.  சில மாதங்கள் கழித்து என்னிடம் பேசிய அனைவருமே என்னைப் பற்றிய பொறாமையில் பேசுவது, அவர்களை எதிர்கொள்ளும் போதுதான் எனக்குப் புரிந்தது இந்தச் சமுதாயம் எத்தனை நல்ல இசைக்கலைஞர்கள், போட்டோகிராபர்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் – இழந்திருக்கிறது என...  அனைவரும் பெரிய வெற்றியாளனாகக் கருதும், மாதம் கிட்டத்தட்ட 4.5 இலட்சம் சம்பளம் வாங்கும் என் தமையன் என்னிடம் வந்து, உன்னைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என சொல்லும்போது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன்.

அங்குதான் புரிந்ததது நான் எங்கு இருக்கிறேன் என்று.  பணம் என்பது வாழ்வதற்கான கருவியே தவிர அதுவே வாழ்க்கையும் அல்ல, வெற்றியும் அல்ல என்பதும் புரிந்தது.  பிடிக்காத வேலையைப் பலவருடங்களாக செய்து கொண்டு, சந்தோசமாக இருக்கிறேன் என்ற முகநூல் பதிவுகளின் உண்மையை உணர்ந்த தருணம் அது.  90 சதவீத சமுதாயம் தங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் முதல் அவெய்லபிள் ஆப்ஷனைப் பற்றிக் கொண்டு காலத்தை ஓட்டி விடுகின்றார்கள்.  10 சதவீதத்திற்கும் குறைவான ஆட்கள் மட்டுமே கனவுகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.  எதில் பயணம் செய்பவர்களாக இருந்தாலும், அடிக்கடி பேருந்தில் பயணம் செய்து பாருங்கள்.

அத்தனை கவலை நிறைந்த முகங்களின் நடுவே மிகவும் மகிழ்ச்சியாக, சாதாரணமாக எவராவது அமர்ந்திருந்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள்.  நிச்சயமாக கனவுகளைத் தேடிக் கண்டுபிடித்தவன் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகமின்றிக் கூறி விடலாம்.  எவராலுமே அனைவருக்கும் நல்லவனாக வாழ முடியாது.  குறைந்தபட்சம் நமக்காகவாவது வாழலாம் என்று கூறுவதில் என்னதான் தப்பு!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top