நில், கவணி, செல்…
  • 06:49AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:49AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

சமீபத்தில் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் கண்ணீருடன், 14 வயதில் ஏதும் தெரியாத நிலையில் குடும்பத்தைக் காப்பாற்ற முதன்முதலாக ஒரு படத்தில் ஆடியதாகக் குறிப்பிட்டார்.  பின்னர், அவர் தொடர்ந்து நடனமாடியபடியே இருந்ததாகவும், தொடர்ந்து பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டார்.  அந்த நிகழ்ச்சியை அதே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் பார்த்திருந்தாலும், அதைப் பற்றிய குறிப்பிடல் எங்கும் இதுவரை காணப்படவில்லை.  சற்று நில்லுங்கள்… 14 வயதில், ஒரு பெண் அல்ல சிறுமியை ஆபாச நடனம் ஆட வைத்திருக்கிறார்கள்.  அது குறித்து ஒருவருக்குக் கூடவா உறுத்தல் இல்லை???  அழைத்துச் சென்றவருக்கும் மனசாட்சி இல்லாமல் இருந்திருக்குமா என்ன??

கிட்டத்தட்ட நாம் அனைவருமே, வெகு விரைவாக சில விஷயங்களைக் கடக்கப் பழகி இருக்கிறோம்.  முதலாவது, நம்மை பாதித்த ஏதோ ஒன்றை நோக்கிய கவனத்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.  தற்போது அந்தப் பெண்ணின் பேச்சினைக் கேட்கும் போது, அது எந்த அளவுக்கு மனதளவில் அந்தப் பெண்ணை பாதித்திருக்கறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. நண்பர்களோடு சுற்றித் திரியும் பருவத்தில், கிடைத்த திடீர் அந்தஸ்தால்(!!!) தனக்குள்ளேயே கூனிக் குறுகி, என் குடும்பத்தைத் தவிர வேறு யாருடனும் பழக்கமில்லை என்று அவள் சொல்கையில், அதையும் கூடவா கடந்து போக முடிந்தது???

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தனித்தனிதான்.  ஆனாலும், ஓரு கணம் கூட இந்த விஷயத்தைப் பற்றி யோசிக்காமல் செல்வது என்ன விதமான நியாயம் என்று புரியவில்லை.  இப்போது கவனித்து என்ன பிரயோஜனம் என்றால், இருக்கிறது.  நாளை நம்மைச் சுற்றியுள்ள ஏதாவது ஒரு குடும்பம் வறுமையின் காரணமாக இப்படி முட்டாள்தனமாக முடிவெடுப்பதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.  இனியாவது அந்தப் பெண்ணைப் பார்க்கும் பார்வையில் கண்ணியத்தைக் காட்ட முடியும்.  பெண்களாயிருப்பின், தனக்குள் புகைந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் கேரக்டர் அஸாஸினேஷன் செய்யாமல் அரவணைக்க முடியும் அல்லது குறைந்த பட்சம் ஒரு சிரிப்பில் நம்பிக்கை அளிக்க முடியும்.

அப்படியென்றால் நேரடியாக அந்தப் பெண்ணின் பெயரைப் பற்றியும், அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றியும் போட வேண்டியதுதானே என்று கேட்கின்றீர்களா???  அது அந்த ஒற்றைப் பெண்ணுக்கான தீர்வாக இருக்க முடியும். ஆனாலும். அவரைப் போன்ற இன்னும் பலர் நம்மைச் சுற்றிலும் இருக்கக் கூடும்.  இதன் மூலமாக அவர்களை நீங்கள் பார்க்கும் பார்வையில் ஒரு சதவீதம் மரியாதை தெரிந்தால் கூட, அவர்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அளிக்க முடியும். அது மட்டுமல்ல தன்னைப் போன்ற பல பெண்களுக்கு அவரால் ஒரு மாறுதல் ஏற்பட்ட அமைதி அவரை மேலும் உத்வேகப்படுத்த உதவும்… திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் என் ஒரே வேண்டுகோள், பெண்களை 18 வயது வரையிலுமாவது, அவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் வரும் வரையிலாவது இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தாமல் இருக்கலாமே!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top